Maharashtra: எம்.எல்.ஏ-க்களை நட்சத்திர ஹோட்டல்களில் பத்திரப்படுத்திய கட்சிகள்… பரபர MLC Elections

மகாராஷ்டிரா சட்டமன்றத்தில் காலியாக இருக்கும் 11 சட்டமேலவைத் தொகுதிகளுக்கு நாளை தேர்தல் நடைபெறுகிறது. இத்தேர்தலில் அரசியல் கட்சிகள் 12 வேட்பாளர்களை நிறுத்தி இருக்கின்றன. இதில் எம்.எல்.ஏ-க்கள் வாக்களிப்பார்கள். இத்தேர்தலில் எம்.எல்.ஏ-க்கள் கட்சி மாறி வாக்களிக்கும் அபாயம் இருக்கிறது. குறிப்பாக மக்களவை தேர்தலுக்கு பிறகு துணை முதல்வர் அஜித் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள் சிலர் சரத் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சியில் சேரும் மனநிலையில் இருக்கின்றனர். அஜித் பவார் கட்சியில் இப்போது 40 எம்.எல்.ஏ-க்கள் இருக்கின்றனர். ஆனால் அவர் 2 வேட்பாளர்களை நிறுத்தி இருக்கிறார். ஒரு வேட்பாளர் வெற்றி பெற 23 வாக்குகள் தேவை. அதனால் இரு வேட்பாளர்களும் வெற்றி பெற இன்னும் 6 எம்.எல்.ஏ-க்களின் ஆதரவை பெற வேண்டிய நிலையில் அஜித் பவார் இருக்கிறார்.

சரத் பவார்

மற்றொருபுறம் ஏற்கனவே அவரது கட்சியில் இருக்கும் இருக்கும் அதிருப்தி எம்.எல்.ஏ-க்கள் அணி மாறி வாக்களிக்கும் அபாயம் இருக்கிறது. பால் தாக்கரே மகன் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா ஒரு வேட்பாளரை நிறுத்தி இருக்கிறது. ஆனால் அந்த கட்சிக்கு 15 எம்.எல்.ஏ-க்கள் தான் இருக்கின்றனர். அக்கட்சிக்கு இன்னும் 8 எம்.எல்.ஏ-க்களின் ஆதரவு தேவையாக இருக்கிறது. காங்கிரஸ் கட்சிக்கு 37 எம்.எல்.ஏ-க்கள் இருக்கின்றனர். காங்கிரஸ் ஒரு வேட்பாளரை மட்டும் நிறுத்தி இருக்கிறது. ஒரு வேட்பாளருக்கு 25 எம்.எல்.ஏ-க்கள் வாக்களிப்பார்கள். எஞ்சிய 10 பேர் உத்தவ் தாக்கரே கட்சி வேட்பாளருக்கு வாக்களிப்பார்கள். சரத் பவார் கட்சி வேட்பாளரை நிறுத்தவில்லை.

உத்தவ் தாக்கரே

ஆனால் அவர் சுயேச்சை வேட்பாளர் ஜெயந்த் பாட்டீலுக்கு ஆதரவு கொடுத்துள்ளார். சரத் பவார் கட்சிக்கு 14 எம்.எல்.ஏ-க்கள் இருக்கின்றனர். ஜெயந்த் பாட்டீல் வெற்றி பெற மேலும் 9 எம்.எல்.ஏ-க்களின் ஆதரவு தேவைப்படுகிறது. காங்கிரஸ் கட்சியில் உபரியாக இருக்கும் இரு எம்.எல்.ஏ-க்கள் ஜெயந்த் பாட்டீலுக்கு வாக்களிப்பார்கள். இது தவிர சமாஜ்வாடி மற்றும் எம்.ஐ.எம் கட்சிகளுக்கு தலா இரு எம்.எல்.ஏ-க்கள் இருக்கின்றனர். அவர்களின் ஆதரவும் ஜெயந்த் பாட்டீலுக்கு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனாவிற்கு 39 எம்.எல்.ஏ-க்கள் இருக்கின்றனர். ஆனால் ஷிண்டேயும் இரு வேட்பாளர்களை நிறுத்தி இருக்கிறார். பா.ஜ.க 5 வேட்பாளர்களை நிறுத்தி இருக்கிறது.

10 சுயேச்சை எம்.எல்.ஏ-க்கள் பா.ஜ.க கூட்டணிக்கு ஆதரவு கொடுக்கின்றனர். தேர்தலுக்கு முன்பு எம்.எல்.ஏ-க்கள் அணி மாறிவிடக் கூடாது என்பதற்காக ஒவ்வொரு கட்சியும் தங்களது எம்.எல்.ஏ-க்களை தனித்தனியாக நட்சத்திர ஹோட்டல்களில் தங்க வைத்திருக்கிறது. உத்தவ் தாக்கரே தனது கட்சி எம்.எல்.ஏ-க்களை மத்திய மும்பையில் உள்ள ஃபைவ் ஸ்டார் ஹோட்டல் ஒன்றில் தங்க வைத்திருக்கிறார். அவர்களுக்கு சிறப்பு இரவு விருந்து கொடுத்து உத்தவ் தாக்கரே அவர்களுடன் கலந்துரையாடினார். முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா எம்.எல்.ஏ.க்கள் பாந்த்ராவில் உள்ள பைவ் ஸ்டார் ஹோட்டலிலும், பா.ஜ.க எம்.எல்.ஏ.க்கள் கஃப்பரேடு பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றிலும் தங்க வைக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டு வருகின்றனர்.

ஷிண்டே, அஜித்பவார்

இதே போன்று காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்களும் தனியாக ஹோட்டல் ஒன்றில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு மாநில தலைவர் நானா பட்டோலே இரவு விருந்து கொடுத்து கவனித்தார். அஜித் பவாரும் தனது கட்சி எம்.எல்.ஏ-க்களை மத்திய மும்பையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் தங்க வைத்திருக்கிறார். அனைவரும் நாளை தேர்தல் நடக்கும் போதுதான் வெளியில் அழைத்து வரப்படுவார்கள். அதுவரை எம்.எல்.ஏ-க்களுக்கு அரசியல் கட்சிகள் தடபுடல் விருந்து கொடுத்து கவனித்து வருகின்றன. அஜித் பவார் தான் சற்று கலக்கத்தில் இருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/2b963ppb

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/2b963ppb