கழுகார்: `அவரு போயிட்டாரு… நாம போகணும்ல!’ டு இடைத்தேர்தல் ரிப்போர்ட்; கலக்கத்தில் அமைச்சர்கள்!

ஆறுதல் சொல்வதற்காக வீட்டுக்கு வந்த முதல்வரிடம், காவல்துறையின் செயல்பாடுகள் குறித்து அதிருப்தி தெரிவிக்க ஆம்ஸ்ட்ராங் குடும்பத்தினர் தயாராக இருந்திருக்கிறார்கள். இதையறிந்து முன்கூட்டியே ஆம்ஸ்ட்ராங்கின் வீட்டுக்குச் சென்ற வில்லிவாக்கம் ரங்கநாதன், “தலைவர் வரும்போது சங்கடப்படுற மாதிரி ஏதும் பேசிடாதீங்க…” என ஆம்ஸ்ட்ராங்கின் குடும்பத்தினரிடம் கூறினாராம். அதனால்தான், முதல்வர் வருகையின்போது சங்கடம் தரும் வார்த்தைகள் தவிர்க்கப்பட்டிருக்கின்றன.

ஆம்ஸ்ட்ராங் இல்லத்தில் முதல்வர்

முதல்வர் சென்றதால், பின்னாலேயே எடப்பாடியும் அங்கு கிளம்ப, அதற்கான ஏற்பாடுகளை முன்னாள் அமைச்சர் பெஞ்சமின், ஆம்ஸ்ட்ராங்கின் குடும்பத்துக்கு நெருக்கமான வி.எஸ்.பாபு ஆகியோர் செய்திருக்கிறார்கள். அப்போது வி.எஸ்.பாபு, “தமிழகத்துல சட்டம் ஒழுங்கு சரியில்லை. இந்தக் கொலையில சம்பந்தப்பட்ட அத்தனை பேரையும் கைதுசெய்யணும். அதை எடப்பாடியார்கிட்ட சொல்லுங்க…” என ஆம்ஸ்ட்ராங்கின் உறவினர்களிடம் கூறியிருக்கிறார்.

ஆம்ஸ்ட்ராங் இல்லத்தில் எடப்பாடி

“முதல்வரோடு வந்தவர்கள் பேசக் கூடாது என்கிறார்கள், எடப்பாடியோடு வந்தவர்கள் பேசச் சொல்கிறார்கள். நாம என்ன அவர்கள் ஆட்டுவிக்கும் பொம்மையா..?” என பகுஜன் சமாஜ் கட்சி நிர்வாகிகள் முணுமுணுக்க, சற்று சலசலப்பு ஏற்பட்டிருக்கிறது. ஒருவழியாக, அஞ்சலி செலுத்திவிட்டு, தமிழகத்தின் சட்டம்-ஒழுங்கு நிலையைக் காட்டமாக விமர்சித்துவிட்டுப் புறப்பட்டிருக்கிறார் எடப்பாடி!

சமீபத்தில் நடந்த ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் பணியிட மாற்றத்தில், நலம் பேணும் துறைக்குத் தலைமைப் பொறுப்புக்கு வந்திருக்கிறார் சீனியர் ஐ.ஏ.எஸ் அதிகாரி ஒருவர். துறைக்குப் பொறுப்பான அமைச்சர் வெளிநாட்டு சுற்றுப்பயணத்தில் இருப்பதால், அவர் வருவதற்குள் புதியவரைத் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் எடுக்க அமைச்சரின் அடிப்பொடிகள் சிலர் முயன்றிருக்கிறார்கள். சில கோப்புகளின் விவரங்களோடு புதிய அதிகாரியை அவர்கள் தொடர்புகொள்ளவும், “இதையெல்லாம் என்கிட்ட கொண்டு வராதீங்க. நான் ரியாக்ட் பண்ணுறவிதமே வேற மாதிரி இருக்கும்” எனக் கடுகடுத்துவிட்டாராம் புதிய அதிகாரி.

“அந்த ஐ.ஏ.எஸ் அதிகாரி கண்டிப்புக்குப் பெயர்போனவர். ஏற்கெனவே ஒரு அமைச்சருடன் அவருக்கு எழுந்த தகராறில், அமைச்சரின் வண்டவாளங்களையெல்லாம் அவர் மேலிடத்துக்கு ரிப்போர்ட்டாக அளிக்க, அந்த அமைச்சரின் இலாகாவே மாறியது. ஆள் யாரெனத் தெரியாமல் விளையாடாதீர்கள்” என அடிப்பொடிகளை துறையின் சீனியர் அதிகாரிகள் எச்சரிக்க, “தொடக்கமே முட்டல் ஆகிவிட்டதே…” என நொந்துபோயிருக்கிறார்களாம் அடிப்பொடிகள்.

டெல்டா பகுதியைச் சேர்ந்த ஓ.பி.எஸ் அணியின் முக்கிய நிர்வாகிகள் சிலர், சமீபத்தில் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அ.தி.மு.க-வில் இணைந்தனர். அவர்களெல்லாம் வைத்திலிங்கத்தின் தீவிர ஆதரவாளர்கள் என்பதால், இந்த இணைப்பு பேசுபொருளானது. இதற்கிடையே, “இந்த இணைப்பு கடந்த மாதமே நடந்திருக்க வேண்டியது… சில காரணங்களால்தான் தள்ளிப்போய்விட்டது” என்கிறார்கள் விவரமறிந்தவர்கள். என்னவென்று விசாரித்தால், “இந்த இணைப்பு குறித்து ஆர்.காமராஜிடம் எதுவும் சொல்லாமல் ஓ.எஸ்.மணியன் தரப்பே ஏற்பாடுகளைச் செய்துவந்திருக்கிறது.

அதிமுக-வில்

தலைமையிடம் இது குறித்துப் புகார் வாசித்த காமராஜ், ‘என் ஊர்க்காரர்களை எனக்கே தெரியாமல் எப்படிக் கட்சியில் இணைக்கலாம்… எனக்கு எதிரான செயல்களில் ஓ.எஸ்.மணியன் தரப்பு தொடர்ந்து ஈடுபடுவதால், இந்த இணைப்பு நிகழ்ச்சியில் என்னால் கலந்துகொள்ள இயலாது’ என்றும் சொல்லிவிட்டாராம். ‘ஏற்கெனவே டெல்டாவில் கட்சி வீக்காக இருக்கிறது. இந்தச் சூழலில் அந்தப் பகுதி சீனியர்களுக்குள் மோதல் முற்றினால், அது கட்சியை மேலும் பலவீனமாக்கும்’ என யோசித்த தலைமை, ஓ.எஸ்.மணியனை அழைத்து காமராஜ் தரப்பிடம் முறைப்படி தகவலைச் சொல்லச் சொல்லியிருக்கிறது. இப்படித் தலைமை சமாதானம் செய்துவைத்த பிறகே, இந்த இணைப்பு நிகழ்ச்சியில் ஓ.எஸ்.மணியனுடன், ஆர்.காமராஜும் பங்கேற்றார்’’ என்கிறார்கள் உள்விவகாரமறிந்தவர்கள்.

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் யார் யார் வேலை பார்த்தார்கள், தலைமை சொல்லியும் தொகுதிப் பக்கமே தலை காட்டாதவர்கள் யார் யார் என்ற தகவலை எடுக்கச் சொல்லி அறிவாலயத்திலிருந்து தேர்தல் பொறுப்பாளர்களுக்கு உத்தரவு பறந்திருக்கிறது. வாக்குப்பதிவு முடிந்த கையோடு, அந்தப் பட்டியலை எடுக்கும் வேலையில் தீவிரம் காட்டிவருகிறதாம் தேர்தல் பணிக்குழு.

விக்கிரவாண்டி திமுக பிரசாரம்

கட்சியில் அமைப்புரீதியான மாற்றத்துக்குத் தயாராகும் அறிவாலயம், இதையும் கணக்கில் எடுத்துக்கொள்ளும் என்பதால் தி.மு.க அமைச்சர்கள், மா.செ-க்கள் சிலர் கலக்கத்தில் இருப்பதாகத் தகவல்!

எடப்பாடிக்கு எதிராகக் கடும் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார் ஓ.பன்னீர்செல்வம். `ஏன் இந்தக் காட்டம்?’ என பன்னீர்செல்வத்துக்கு நெருக்கமானவர்களிடம் கேட்டால், “அ.தி.மு.க-விலிருந்து வெளியேறியதிலிருந்து பெரும் பின்னடைவைச் சந்தித்துவருகிறார் ஓ.பி.எஸ். மீண்டும் அ.தி.மு.க-வில் இணைவது ஒன்றே தன்னை அரசியல்ரீதியாக தற்காத்துக்கொள்ள ஒரே வழி என்பதால், அதற்காக பலவழிகளில் முயன்று பார்த்தார்.

பன்னீர்செல்வம்

ஆனால், ‘துரோகி ஓ.பி.எஸ்-ஸுக்கு கட்சியில் இடமில்லை’ என்று திரும்பத் திரும்ப எடப்பாடி கூறிவருவதால், அவர் கோபமாகிவிட்டார்” என்று கிசுகிசுக்கிறார்கள் அ.தி.மு.க.தொ.உ.மீ.கு நிர்வாகிகள். உரிமை மீட்புக் குழுவே கரையத் தொடங்கியிருப்பதும், ஓ.பி.எஸ்-ஸின் கோபத்துக்கு ஒரு காரணம் என்கிறார்கள் அவரை அறிந்தவர்கள்.