கிரயோஜனிக் ராக்கெட் குறித்த வரைபடங்கள் வைத்திருந்ததாக மாலத்தீவைச் சேர்ந்த மரியம் ரஷீதா மற்றும் அவரது தோழி ஃபாசூயா ஹசன் ஆகியோர் 1994-ம் ஆண்டு கேரள காவல்துறையால் கைது செய்யப்பட்டனர். அதைத் தொடர்ந்து இஸ்ரோ ரகசியங்களை லீக் செய்ததாக கிரயோஜனிக் சிஸ்டம் திட்ட இயக்குநராக இருந்த விஞ்ஞானி நம்பி நாராயணன் கைதுசெய்யப்பட்டார். அவருடன் விண்வெளி அமைப்பின் இணை இயக்குநர் சசிகுமாரன், ரஷ்யா விண்வெளி அமைப்பின் இந்திய ஒருங்கிணைப்பாளர் சந்திரசேகர், தொழிலதிபர் எஸ்.கே.சர்மா ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். சி.பி.ஐ விசாரணைக்கு பிறகு அனைவரும் நிரபராதிகள் என விடுதலை செய்யப்பட்டனர். கிரயோஜனிக் வழக்கு அன்றைய முதல்வர் கருணாகரனின் பதவியைப் பறிக்கும் அளவிற்குப் பூகம்பத்தை ஏற்படுத்தியது. நம்பி நாராயணன் தனி ஒருவராக சுமார் 25 ஆண்டுகள் சட்டப் போராட்டம் நடத்தியதன் விளைவாக ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்கவேண்டும் என்று உத்தரவிட்ட சுப்ரீம் கோர்ட், இந்த வழக்கிற்கு மூல காரணம் என்ன என்பது குறித்து விசாரிக்கத் தனி கமிட்டி அமைத்து கடந்த 2018-ம் ஆண்டு உத்தரவிட்டிருந்தது. அந்த கமிட்டியின் விசாரணை அடிப்படையில் சி.பி.ஐ விசாரணைக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில், தற்போது அந்த விசாரணை முடித்து சி.பி.ஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. அந்த குற்றப்பத்திரிகையில் ஐ.எஸ்.ஆர்.ஓ ரகசியங்கள் லீக் செய்யப்பட்டதாக கூறப்பட்ட வழக்கு பொய்யாக கட்டமைக்கப்பட்டது என கூறப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
மாலத்தீவைச் சேர்ந்த மரியம் ரஷீதா-விடம் சர்க்கிள் இன்ஸ்பெக்டராக இருந்த விஜயன் என்பவர் ஹோட்டலில் வைத்து அத்துமீறி நடந்துகொண்டதாகவும், அதை மரியம் ரஷீதா தடுத்ததால் ஏற்பட்ட பிரச்னையை மனதில் வைத்துக்கொண்டு இன்ஸ்பெக்டர் விஜயன் பொய்வழக்கு போட்டுள்ளதாக சி.பி.ஐ தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மரியம் ரஷீதாவை கைதுசெய்து முதலில் காவலில் விசாரித்த போலீஸார் மீண்டும் காவலில் விசாரிக்க கோர்ட்டில் கேட்டுள்ளனர். ஆனால், மீண்டும் போலீஸ் கஸ்டடிக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, முதல் வழக்கு பதிந்த சில தினங்களுக்குப் பிறகே இஸ்ரோ ரகசியங்கள் கசியவிடப்பட்டதாக மற்றொரு வழக்குப் பதியப்பட்டுள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இஸ்ரோ ரகசியங்களை கசியவிட்ட வழக்கு குறித்து இன்ஸ்பெக்டர் பத்திரிகைகளுக்கு தகவல் கூறியதாகவும், சி.பி.ஐ விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. போலீஸ் கஸ்டடியில் விஞ்ஞானி நம்பி நாராயணன் மீது தாக்குதல் நடந்ததாகவும், இனியும் தாக்கினால் அவர் இறந்துபோக வாய்ப்பு உள்ளதாகவும் மருத்துவர் போலீஸாரிடம் தெரிவித்ததாகவும் சி.பி.ஐ தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில் கூறப்பட்டுள்ளது. வழக்குக்காக போலி ஆவணங்கள் மற்றும் போலி ஆதாரங்களை உருவாக்குதல், பெண்ணியத்தை களங்கப்படுத்த திட்டமிடுதல், உடல் ரீதியாக துன்புறுத்துதல் ஆகிய குற்றங்கள் நடந்துள்ளதாக குற்றப்பத்திரிகையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இந்த வழக்கில் ஸ்பெஷல் பிராஞ்ச் முன்னாள் இன்ஸ்பெக்டர் விஜயன், முன்னாள் டி.ஜி.பி சிபி மேத்யூஸ், ஐ.பி இயக்குநராக இருந்த ஸ்ரீகுமார், கேரளா போலீஸ் முன்னாள் டி.எஸ்.பி ஜோஸ்வா, ஐ.பி முன்னாள் இன்ஸ்பெக்டர் ஜெயபிரகாஷ் ஆகிய 5 பேர் மீது குற்றம்சாட்டப்பட்டு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து கருத்து தெரிவித்த விஞ்ஞானி நம்பி நாராயணன், “குற்றம் செய்தது யார் என்பதை அறிந்துகொள்ளத்தான் இத்தனை ஆண்டுகளாக போராடினேன். அதன் பலன் கிடைத்திருக்கிறது” என்றார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/2b963ppb
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/2b963ppb