பொறியியல்: 7.5% இட ஒதுக்கீட்டில் மாநில அளவில் முதலிடம் பிடித்த விசைத்தறி தொழிலாளரின் மகள்!

சேலம் மாவட்டம் இளம்பிள்ளையை அடுத்த நடுவனேரியைச் சேர்ந்தவர்கள் விசைத்தறி தொழிலாளிகளான செல்வம் – சிவரஞ்சனி தம்பதியினர். இவர்களது மகள் ராவணி. அரசு மாதிரிப் பள்ளியில் கல்வி பயின்று வந்துள்ளார். 12-ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவில் 586 மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.

இயற்பியல் மற்றும் கணிதம் பாடத்தில் தலா 100 மதிப்பெண்ணும், வேதியியல் பாடத்தில் 99 மதிப்பெண்ணும் பெற்றுள்ளார். அரசுப் பள்ளியில் படித்து 7.5% இட ஒதுக்கீட்டின் கீழ் பொறியியல் படிப்பில் சேர விண்ணப்பித்துள்ளவர்களுக்கான தரவரிசை பட்டியலில் மாணவி ராவணி 199.50 மதிப்பெண்களுடன் மாநில அளவில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.

அவருக்கு அரசு மாதிரிப் பள்ளியின் தலைமை ஆசிரியர் ஜெகதீசன், ஆசிரியர்கள் மற்றும் பொதுமக்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

மாநில அளவில் முதலிடம் பிடித்தது மகிழ்ச்சியளிப்பதாகக் கூறிய மாணவி ராவணி, அண்ணா பல்கலைக்கழகத்தில் சேர்ந்து பயில உள்ளதாகத் தெரிவித்தார்.

முதலிடம் பிடித்த மாணவிக்குச் சேலம் மாவட்ட ஆட்சியர் பிருந்தா தேவி நேரில் அழைத்து அவருக்குச் சால்வை அணிவித்து பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தார். தொடர்ந்து சாதனை புரிய வேண்டும் என்க் கூறியவர் அவருக்கு அப்துல் கலாம் எழுதிய புத்தகத்தை வழங்கினார்.