ஐடி துறையில் தமிழகம் வளர்ச்சி அடைகின்ற வகையில் 1996 – 2001 தி.மு.க ஆட்சியில் டைடல் பூங்கா நிறுவனம் கொண்டு வரப்பட்டது. தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனம், டைடல் நியோ நிறுவனத்துடன் இணைந்து இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டது.
சென்னை உள்ளிட்ட பெரு நகரங்களில் மட்டுமே தொடங்கப்பட்ட டைடல் பூங்கா, அதன் பின்னர் தமிழகத்தின் இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலையில் உள்ள மாவட்டங்களிலும் விரிவுபடுத்தப்பட்டது. இந்நிலையில் விவசாயப் பகுதியாக அறியப்பட்ட தஞ்சாவூரில் டைடல் பூங்கா அமைக்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்ததுடன் தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையம், மேலவஸ்தாசாவடி ரவுண்டானா அருகே டைடல் பூங்கா அமைப்பதற்கான பணிகளைக் கடந்த ஆண்டு காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார்.
இதைத் தொடர்ந்து முழு வீச்சில் நடைபெற்ற பணிகள் தற்போது முடிவடைந்துள்ளன. இதையொட்டி முதல்வர் ஸ்டாலின் இதைத் திறந்து வைக்க உள்ளதாகத் தெரிவிக்கின்றனர். 3.40 ஏக்கர் பரப்பளவில் 55,000 சதுர அடியில் ரூ. 27.13 கோடியில் நான்கு தளங்கள் கொண்டதாக இது கட்டப்பட்டுள்ளது. பொதுவாக டெல்டா பகுதி விவசாயம் சார்ந்த பகுதியாகத் திகழ்ந்து வருகிறது. ஐடி படிக்கும் டெல்டா மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் சென்னை, பெங்களூர் உள்ளிட்ட வெளி ஊர்களுக்கு வேலைக்குச் செல்ல வேண்டிய நிலை உள்ளது.
இப்படியான சூழலில் தஞ்சாவூர் டைடல் பூங்கா அமைவதால் டெல்டா பகுதியினர் எளிதாக வேலைவாய்ப்பு பெறுவார்கள் என்பதால் தமிழக அரசு அமைக்கும் டைடல் பூங்காவிற்கு நல்ல வரவேற்பு உள்ளது. அமைச்சர்கள் டி.ஆர்.பி. ராஜா, அன்பில் மகேஸ், மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப் உள்ளிட்டோர் பணிகள் முடிவுற்ற டைடல் பூங்காவைப் பார்வையிட்டனர்.
அப்போது டி.ஆர்.பி.ராஜா, “முதல்வர் ஸ்டாலின் ஆட்சியில் இளைஞர்களுக்கு அதிகளவில் வேலை வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கும் வகையில் பல்வேறு தொழில் நிறுவனங்கள் தொடங்கப்பட்டு வருகிறது. புதிய வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படுகின்றன.
தஞ்சாவூரில் அமைந்துள்ள டைடல் பார்க்கின் பணிகள் முழுமையாக முடிவடைந்துள்ளதால் இன்னும் சில வாரங்களில் முதல்வர் ஸ்டாலின் இதைத் திறந்து வைக்க உள்ளார். இதன் மூலம் டெல்டா பகுதியைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். இந்த டைடல் பார்க்கில் ஏற்கெனவே இரண்டு நிறுவனங்கள் முன்பதிவு செய்துவிட்டன. இன்னும் ஏழு நிறுவனங்கள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன” என்று தெரிவித்தார்.