CBI: `மத்திய அரசின் நிர்வாக கட்டுப்பாட்டில்தான் சிபிஐ உள்ளது!’ – உச்ச நீதிமன்றம்

1941-ம் ஆண்டு இந்தியாவை ஆண்ட பிரிட்டிஷ் அரசால் ஊழலுக்கு எதிரான விசாரணைக்காக சிறப்பு காவல்துறை என்ற ஒரு துறை உருவாக்கப்பட்டது. இந்தியா சுதந்திரமடைந்து, இந்திய அரசு அமைந்தபிறகு டெல்லி சிறப்புக் காவல்துறை சட்டம் 1946-ன் மூலம், ஊழல் குற்றங்களை விசாரிக்க 1963-ம் ஆண்டு சி.பி.ஐ நிறுவனமாக அது அங்கீகரிக்கப்பட்டது. ஒவ்வொரு மாநிலமும் தங்கள் எல்லைக்குட்பட்ட இடங்களில் சி.பி.ஐ விசாரணைக்கு பொது ஒப்புதலை வழங்கும்.

திரிணாமுல் காங்கிரஸ் | மம்தா பானர்ஜி

எந்த மாநிலம் பொது ஒப்புதலை திரும்பப் பெற்றுக்கொள்கிறதோ அந்த மாநிலத்தில் விசாரணை நடத்த சி.பி.ஐ ஒவ்வொரு முறையும் குறிப்பிட்ட அந்த மாநில அரசிடம் ஒப்புதல் பெற வேண்டும்.

இதன் அடிப்படையில், மேற்கு வங்க மாநில அரசு, “மத்திய பா.ஜ.க அரசு விசாரணை அமைப்புகளை அரசியல் ஆதாயத்துக்காக பயன்படுத்துகிறது.” எனக் குற்றம்சாட்டி, சி.பி.ஐ-க்கு கொடுத்த பொது ஒப்புதலை திரும்பப் பெற்றுக்கொண்டது. ஆனாலும், சி.பி.ஐ மேற்கு வங்கத்தில் தொடர்ந்து வழக்குகளைப் பதிவு செய்து விசாரித்து வருகிறது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் அரசு, “சி.பி.ஐ அமைப்புக்கு கொடுத்த பொது ஒப்புதலை மேற்கு வங்க அரசு திரும்பப் பெற்றுக்கொண்டது. அதன் பிறகும் சி.பி.ஐ தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறது. இது மாநில அரசுகளின் உரிமைக்கு எதிரானது” எனக் குற்றம்சாட்டி, உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசையும், சி.பி.ஐ அமைப்பையும் எதிர்த்து, 131-வது சட்டப்பிரிவின் கீழ் மனுதாக்கல் செய்தது.

பிரதமர் மோடி

இந்த வழக்குக்கு எதிராக மத்திய அரசு தரப்பில், “மேற்கு வங்க அரசின் இந்த மனுவை விசாரணைக்கே எடுத்துக்கொள்ளக் கூடாது” என எதிர்மனு தாக்கல் செய்யப்பட்டது.

இது தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பி.ஆர்.கவாய், சந்தீப் மேத்தா ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.

மேற்கு வங்க அரசின் சார்பில் கபில் சிபல் ஆஜராகி, “சி.பி.ஐ-க்கு மேற்கு வங்க அரசு கொடுத்த பொது ஒப்புதல் 2018-ம் ஆண்டே திரும்பப் பெற்றுக்கொள்ளப்பட்டது. அதன் பிறகும் மாநில அரசின் அதிகார வரம்புக்குள் மத்திய அரசு அத்துமீறி தலையிடுவது ஏற்கத்தக்கதல்ல. சி.பி.ஐ அரசியல் சாசனத்தை மீறி செயல்படுகிறது” என வாதிட்டார்.

சிபிஐ

மத்திய அரசு தரப்பில் ஆஜரான துஷார் மேத்தா, “சி.பி.ஐ சுதந்திரமாக செயல்படும் நிறுவனம். அதன் அதிகாரங்களை மத்திய அரசு கட்டுப்படுத்தவில்லை. எனவே இந்த வழக்கில் மத்திய அரசை இணைத்ததே தவறு” என வாதிட்டார்.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், “சி.பி.ஐ-யை உருவாக்கிய டெல்லி சிறப்பு காவல்துறை சட்டத்தை உருவாக்கியது மத்திய அரசுதான். எனவே, மத்திய அரசை இந்த வழக்கில் இணைத்தது தவறு என்ற வாதத்தை ஏற்க முடியாது. மேலும், மத்திய அரசு சி.பி.ஐ மீது அதிக அக்கரைக் கொண்டது என்பதை, மத்திய அரசால் குற்றங்கள் என அறிவிக்கப்பட்ட செயல்களை மட்டுதான் சி.பி.ஐ-யால் விசாரிக்க முடியும் என்பதிலிருந்து விளங்கிக்கொள்ளலாம். மத்திய அரசின் கட்டுப்பாட்டில்தான் சி.பி.ஐ இயங்குகிறது.

உச்ச நீதிமன்றம்

எனவே, அதிகார அத்துமீறல் குறித்த மேற்கு வங்க அரசின் மனு விசாரணைக்கு ஏற்றதுதான். ஆனால், எந்த அம்சத்தின் அடிப்படையில் இந்த மனு விசாரிக்கப்பட வேண்டும் என்பது குறித்து ஆகஸ்ட் 13-ல் முடிவு செய்யப்படும். அதன்பிறகு வழக்கு விசாரணை தொடரும்.” என விசாரணையை ஒத்திவைத்திருக்கிறது.