தற்போது இங்கிலாந்தில் நடந்து முடிந்திருக்கும் பொதுத் தேர்தலில், ரிஷி சுனக் தலைமையிலான கன்சர்வேட்டிவ் கட்சியை வீழ்த்தி, கியர் ஸ்டார்மர் தலைமையிலான தொழிலாளர் கட்சி ஆட்சியைப் பிடித்துள்ளது. கடந்த 14 ஆண்டுகளாக கன்சர்வேட்டிவ் கட்சிதான் இங்கிலாந்தில் ஆட்சியில் இருந்து வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
தேர்தலில் நடந்த சுவராசியமான விஷயங்களில் ஒன்று, சாம் கார்லிங் என்ற 22 வயதாகும் இளைஞர் இங்கிலாந்து சட்டசபையில் இடம்பெற உள்ளார்.
யார் இவர்?
சாம் கார்லிங் வடகிழக்கு இங்கிலாந்தில் உள்ள ஒரு கிராமத்தில் 2002-ம் ஆண்டு பிறந்தவர். கேம்பிரிட்ஜ், கிறிஸ்ட் கல்லூரியில் இயற்கை அறிவியல் பிரிவை தேர்வு செய்து இளங்கலை படித்துள்ளார். 2023-ம் ஆண்டில் தான் இவரது இளங்கலை கல்லூரி படிப்பு முடிந்துள்ளது.
இவருக்கு, கல்லூரிக் காலத்திலேயே கல்வியுடன் அரசியலிலும் ஆர்வம் அதிகம் இருந்திருக்கிறது. அதனால், அப்போதே இவரது அரசியல் பயணம் தொடங்கிவிட்டது. அந்த வகையில், 2022-ல் கேம்பிரிட்ஜ் நகர சபையில் வெஸ்ட் செஸ்டர்டரின் கவுன்சில் உறுப்பினர் ஆகியிருக்கிறார். 2024-ல் வெஸ்ட் செஸ்டர்டரின் திறந்தவெளி இட ஒதுக்கீடு மற்றும் நகர சேவைகளுக்கான நிர்வாக கவுன்சிலர், கேம்பிரிட்ஜ்ஷயர் மற்றும் பீட்டர்பரோ ஒருங்கிணைந்த ஆணையத்தின் திறன்கள் குழுவில் பணி, பிராந்திய கொள்கை மற்றும் மேம்பாட்டு முயற்சிகள் என்று பங்குபெற்றுள்ளார்.
இப்படி, இவர் அரசியலில் குறுகிய காலத்திலேயே அசத்தி வர, தொழிலாளர் கட்சி சார்பாக வடமேற்கு கேம்பிரிட்ஜ்ஷையரின் நாடாளுமன்ற வேட்பாளராக களம் இறங்கினார்.
தேர்தலில் போட்டி…
இவரது அரசியல் ஆர்வமும், பிரசார பேச்சும் வாக்காளர்களை மிகவும் கவர்ந்துள்ளது. பொது சேவை, உள்ளூர் பிரச்னை நிவர்த்தி ஆகியவை இவரது தேர்தல் வாக்குறுதிகளில் முக்கிய இடத்தை பிடித்திருந்தன.
இவருக்கு எதிராக, அதே தொகுதியில் கன்சர்வேட்டிவ் கட்சியின் மூத்த எம்.பி ஷைலேஷ் வாரா போட்டியிட்டுள்ளார். இருவருக்கும் கடும் போட்டி நிலவிய நிலையில், வெறும் 39 வாக்கு வித்தியாசத்தில் எம்.பி பதவியை தட்டிச் சென்றுள்ளார் சாம் கார்லிங். இப்போது இவருக்கு ’பேபி ஆஃப் தி ஹவுஸ்’ என்று சிறப்பு பெயர் கொடுத்து இங்கிலாந்து மக்கள் அழைத்து வருகிறார்கள்.
தேர்தல் வெற்றிக்கு பிறகு பேசிய சாம் கார்லிங், “நாட்டின் வளர்ச்சியை தடுக்கும் பிரச்னைகளை களைவேன். இனி இளைஞர்கள் அரசியலில் ஈடுபட வேண்டும். தேர்தல்களில் போட்டியிட வேண்டும்” என்று கூறியிருப்பதுடன், அதற்கு தானே முன்னுதாரணமாக இருக்கிறார்.
ஹாட்ஸ் ஆஃப் சாம் கார்லிங்!