ரூ.900 கோடி குத்தகை பாக்கி; ஊட்டி குதிரை பந்தய மைதானத்துக்கு சீல்; பாதுகாக்க வலுக்கும் குரல்கள்!

ஊட்டியில் குதிரை பந்தயம் நடத்தி வந்த மெட்ராஸ் ரேஸ் கிளப் நிர்வாகம், அரசுக்கு சுமார் 900 கோடி ரூபாய் குத்தகை பாக்கியை செலுத்தாத காரணத்தால், உயர் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் பந்தைய மைதானத்திற்கு வருவாய்த்துறை அதிகாரிகள் சீல் வைத்திருக்கிறார்கள். உச்ச நீதிமன்றத்தை அணுகி தடை ஆணையைப் பெறும் நடவடிக்கையில் மெட்ராஸ் ரேஸ் கிளப் நிர்வாகம் முயற்சிக்கலாம் என யூகித்த மாவட்ட நிர்வாகம்,

ரேஸ் கோர்ஸ்

பந்தய மைதானத்தை தோட்டக்கலைத்துறை வசம் ஒப்படைத்து பூங்கா அமைக்கப்போவதாக அதிரடி நடவடிக்கையில் இறங்கியிருக்கிறது. ஊட்டியின் அடையாளமாக சித்திரிக்கப்பட்டு, ஆயிரக்கணக்கான மக்களின் வாழ்வாதாரத்தைச்‌ சுரண்டும் சூதாட்டமான குதிரை பந்தயத்தை ஊட்டியில் இருந்து முற்றாக அழித்தொழிக்க வேண்டும் என அனைத்து தரப்பு மக்களும் வலியுறுத்தி வருகின்றனர்.

ஊட்டி நகரை கட்டமைத்த ஆங்கிலேயர்கள், பொழுதுபோக்கு அம்சங்களையும் உருவாக்கியுள்ளனர். அதன் ஒரு பகுதியாக ஊட்டி நகரின் மத்தியில் பெரிய புல் மைதானத்தை தேர்வு செய்து 1896-ம் ஆண்டு குதிரை பந்தயத்தையும் தொடங்கி நடத்தி வந்திருக்கிறார்கள்.

ரேஸ் கோர்ஸ்

நாடு சுதந்திரம் அடைந்த பிறகு அரசு கட்டுப்பாட்டின் கீழ் வந்த குதிரை பந்தய மைதானத்தை, 1978-ம் ஆண்டு முதல் மெட்ராஸ் ரேஸ் கிளப் நிர்வாகத்திற்கு குத்தகை அடிப்படையில் அனுபவிக்க ஒப்பந்தம் செய்துள்ளனர். 2001-ல் இருந்து குத்தகை பாக்கியை செலுத்தாமல் பந்தயத்தை நடத்தி வந்திருக்கிறார்கள். சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவு அடிப்படையில் தற்போது இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

உயர் நீதிமன்ற உத்தரவை நடைமுறைப்படுத்திய ஊட்டி வருவாய் கோட்டாட்சியர் மகாராஜ், “மைதானம் அமைந்துள்ள அரசுக்கு சொந்தமான சுமார் 53 ஏக்கர் நிலத்தை மெட்ராஸ் ரேஸ் கிளப் நிர்வாகம் குத்தகைக்கு எடுத்து குதிரை பந்தயம் நடத்தி வந்தது. கடந்த 2001- ம் ஆண்டிலிருந்து குத்தகையை முறையாக செலுத்தவில்லை. அரசுக்கு செலுத்த வேண்டிய குத்தகை பாக்கியைப் பெறும் நடவடிக்கையில் அரசு ஈடுபட்டது.

ஆனால், மெட்ராஸ் ரேஸ் கிளப் நிர்வாகம் சென்னை உயர் நீதிமன்றத்தை நாடியது. வழக்கு விசாரணை நடைபெற்று வந்த நிலையில்,

மகாராஜ்

அரசுக்கு செலுத்த வேண்டிய 822 கோடி ரூபாய் குத்தகையை நிலையில் வைத்துள்ள ரேஸ் கிளப் மைதானத்திற்கு சீல் வைக்குமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. நடப்பு ஆண்டுடன் சுமார் 900 கோடி ரூபாயாக குத்தகை பாக்கி நிலுவையில் இருக்கிறது. இதன் அடிப்படையில் மைதானங்களை கையகப்படுத்தி, கட்டடங்களுக்கு சீல் வைத்துள்ளோம். பூங்கா அமைப்பதற்காக தோட்டக்கலைத்துறை வசம் நிலம் ஒப்படைக்கப்பட்டுள்ளது ” என்றார்.

ஊட்டி நகர மக்கள் விழிப்புணர்வு சங்கத்தின் தலைவர் ஜனார்த்தனன், “ஏப்ரல் மே மாதங்களில் மட்டுமே ஊட்டியில் குதிரை பந்தயம் நடத்தப்பட்டாலும், ஆண்டு முழுவதுமே ஆன்லைன் மூலம் குதிரை பந்தய சூதாட்டம் நடைபெற்று வருகிறது. தினக்கூலி தொழிலாளிகள் முதல் பெரிய பெரிய தொழில் அதிபர்கள் வரை குதிரை பந்தய சூதாட்டத்தில் அடிமையாக்கப்படுகிறார்கள். மனைவியின் தாலி, அண்டா, குண்டா என அடகு வைத்து சூதாடி வாழ்க்கையைத் தொலைத்தவர்கள் ஊட்டியில் ஏராளம். பொழுதுபோக்கு என்ற பெயரில் தொடங்கப்பட்ட இந்த சூதாட்டம் கோடிகளில் புரள்கிறது. ஆயிரக்கணக்கான மக்களின் வாழ்வாதாரத்தைச்‌ சிதைக்கும் இந்த சூதாட்டத்தை ஊட்டியை விட்டு நிரந்தரமாக ஒழிக்க வேண்டும். சாமானிய மக்கள் நகராட்சிக்கு சிறிய தொகை வரியை நிலுவை வைத்தால் அடுத்த நாளே நடவடிக்கை பாய்கிறது.

ஜனார்த்தனன்

ஆனால், அரசு நிலத்தை பயன்படுத்தி 900 ஆயிரம் கோடி ரூபாய் பாக்கி வைத்திருக்கிறார்கள். மைதானத்திற்குள் விதிமுறைகளை மீறி கட்டுமானங்களையும் எழுப்பியுள்ளனர். அதையும் இடித்துத் தள்ள வேண்டும். குதிரை மற்றும் மைதான பராமரிப்பில் பல காலங்களாக ஈடுபட்டு வந்த தொழிலாளிகள் குடும்பத்திற்கு உரிய மாற்றை அரசு முன்னெடுக்க வேண்டும்” என்றார் ஆதங்கத்துடன்.

நீலகிரியில் அழிக்கப்பட்ட சோலை மரங்கள் மற்றும் புல்வெளிகளை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டு வரும் வசந்த் பாஸ்கோ, “ஊட்டி நகரின் மத்தியில் அமைந்துள்ள இந்த மைதானம் இயற்கையான சதுப்பு நிலமாக இருக்கிறது. குதிரை பந்தயத்திற்காக பெரிய அளவிலான புல் மைதானத்தை அப்படியே பராமரித்து வந்துள்ளனர். அரசு தற்போது இந்த நிலத்தை கையகப்படுத்தியுள்ள நிலையில், வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்ள திட்டமிட்டு வருகின்றனர். அரியவகை நீர்வாழ் உயிரினங்களுக்கு பாதுகாப்பு அளிப்பதுடன் அளவுக்கு அதிகமான மழை வெள்ளத்தை உட்கிரகித்து மக்களை காக்கும் இந்த புல் மைதானத்தை அப்படியே பாதுகாக்க வேண்டும்‌. எந்தவித கட்டுமானத்தையும் எழுப்பக் கூடாது ” என்றார்.

வசந்த் பாஸ்கோ

ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா உதவி இயக்குநர் பெபிதா, “நீலகிரி மாவட்ட தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறைக்கு மாவட்ட நிர்வாகம் தரப்பில் 52.34 ஏக்கர் நிலம், சுற்றுச்சூழல் பூங்கா அமைப்பதற்காக வழங்கப்பட்டுள்ளது. குதிரை பந்தைய மைதானத்தில் பூங்கா அமைப்பதற்கான முதற்கட்ட பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. அடுத்தகட்ட பணிகள் பின்னர் மேற்கொள்ளப்படும்” என்றார்.

மீட்கப்பட்ட பொக்கிஷத் கட்டிக் காக்கும் பொறுப்பை அரசு உணர்ந்து செயல்படுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்!

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/2b963ppb

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/2b963ppb