நமது நாட்டின் முதன்மையான ஆயுள் காப்பீட்டு நிறுவனமான எல்ஐசி முதலீடு செய்துள்ள பெரிய நிறுவனங்களின் சந்தை மதிப்பு சென்ற ஆண்டில் 37.5% அதிகரித்து ₹ 4.39 லட்சம் கோடியாக உள்ளது.
சென்ற ஆண்டில் எல்ஐசி பெரிய நிறுவனங்களில் செய்துள்ள முதலீட்டின் ஒரு பகுதியை விற்பனை செய்துள்ளது. என்றாலும் சென்ற ஓராண்டில் நிஃப்டி குறியீடு 25% வரை ஏற்றம் அடைந்துள்ள காரணத்தினால் எல்ஐசி நிறுவனம் முதலீடு செய்துள்ள நிறுவனங்களின் சந்தை மதிப்பு கணிசமாக அதிகரித்துள்ளது.
எல்ஐசி நிறுவனம் முதலீடு செய்துள்ள நிறுவனங்களின் சந்தை மதிப்பில் முதல் இடத்தை ரிலையன்ஸ் பெற்றுள்ளது. முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவன பங்குகளில் எல்ஐசி நிறுவனம் சென்ற ஆண்டில் 6.37% பங்குகளை வைத்திருந்தது. தற்போது இந்த ஆண்டில் இந்த நிறுவனத்தின் 0.18% பங்குகளை விற்பனை செய்தாலும், எல்ஐசி நிறுவனம் ரிலையன்ஸ் நிறுவனத்தின் 6.19% பங்குகளை வைத்துள்ளது. அதன் தற்போதைய சந்தை மதிப்பு ரூ. 1.5 லட்சம் கோடி ஆகும்.
டாடா குழும பங்குகளின் அளவினையும் 4.22% என்ற சென்ற ஆண்டின் அளவிலிருந்து 4.05% ஆக எல்ஐசி குறைத்துள்ளது. பிர்லா குழும பங்குகளின் அளவினையும் 4.86% என்ற சென்ற ஆண்டின் அளவிலிருந்து 4.03% ஆக குறைத்துள்ளது. ஜேஎஸ்டபிள்யூ குழும பங்குகளின் அளவினையும் 7.31% என்ற சென்ற ஆண்டின் அளவிலிருந்து 5.35% ஆக குறைத்துள்ளது.
தற்போது எல்ஐசி நிறுவனத்தின் 96.5% பங்குகள் அரசிடம் உள்ளது. எல்ஐசி பல நிறுவனங்களில் செய்துள்ள முதலீடு அந்த நிறுவனத்தை அரசின் தங்கச் சுரங்கமாக மாற்றியுள்ளது. இந்த நிறுவனம் சென்ற 2022 ஆம் ஆண்டு பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டது. இன்னும் ஒரு சில ஆண்டுகளில் 20% முதல் 25% வரையிலான அந்நிறுவனத்தின் பங்குகளை கூடுதலாக அரசு விற்பனை செய்வதற்கு வாய்ப்புள்ளது. அவ்வாறு விற்பனை செய்யும்பட்சத்தில் மிக அதிகப்படியான வருவாய் அரசுக்கு கிடைப்பதற்கு வாய்ப்பு உள்ளது.
எல்ஐசி மட்டுமன்றி பல்வேறு பொதுத்துறை நிறுவனங்களின் பங்கு விலை கடந்த மூன்று ஆண்டுகளில் பல மடங்கு அதிகரித்துள்ளது. குறிப்பாக பெரும்பாலான பொதுத்துறை வங்கிகளின் பங்கு விலை கடந்த மூன்று ஆண்டுகளில் ஐந்து மடங்கு வரை விலை அதிகரித்துள்ளது. இந்த நிறுவனங்களிலும் அரசுக்கு ஆண்டுதோறும் பல கோடி ரூபாய் டிவிடெண்ட் வருமானமாக கிடைத்து வருகிறது.
இவ்வாறு கிடைக்கும் அதிக வருமானத்தை நமது நாட்டின் உள்கட்டமைப்பு மற்றும் பல்வேறு நல திட்டங்களுக்கு பயன்படுத்திக் கொள்ளலாம் எனவும், அது நமது நாட்டின் வளர்ச்சிக்கு மிகுந்த துணையாக இருக்கும் என்று மோதிலால் ஆஸ்வால் நிறுவனத்தின் நிறுவனர் ராம்டியோ அகர்வால் கருத்து தெரிவித்துள்ளார்.