“இந்திய பொருளாதாரம் 7% வளர்ச்சியடைந்தாலும் அடுத்த பத்தாண்டுகளில் இந்தியாவால் போதுமான வேலை வாய்ப்புகளை உருவாக்க முடியாது” என்கிற சிட்டிகுரூப் நிறுவனத்தின் சமீபத்திய அறிக்கையை மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் மறுத்துள்ளது.
சிட்டிகுரூப் ஆய்வறிக்கையில், “இந்திய பொருளாதாரம் 7% வேகத்தில் வளர்ந்தாலும், அடுத்து வரும் பத்து ஆண்டுகளில் வளரும் தொழிலாளர்களுக்கு போதுமான வேலைகளை உருவாக்க இந்தியா போராடும். கொரோனா பெருந்தொற்று காலத்துக்கு முன்பு, 24% பணியாளர்கள் மாதச் சம்பளதாரர்களாக இருந்தார்கள். அதனுடன் ஒப்பிடும்போது தற்போது 21% பணியாளர்கள் மட்டுமே மாத்ச் சம்பளம் பெறும் வேலைகளைச் செய்துகொண்டிருக்கிறார்கள். உலகில் அதிக மக்கள் தொகை கொண்ட நாடுகளின் பட்டியலில் இந்தியா இருக்கிறது. அதனால், வேலைவாய்ப்பு மற்றும் திறன்களை அதிகரிக்க இன்னும் ஒருங்கிணைந்த நடவடிக்கைகள் தேவை.
தொழிலாளர் சந்தையில் புதிதாக நுழைபவர்களின் எண்ணிக்கையை உள்வாங்க வேண்டுமெனில் அடுத்த பத்தாண்டுகளில் இந்தியா ஒவ்வொரு ஆண்டுக்கும் 12 கோடி வேலைகளை உருவாக்க வேண்டும். ஆனால் தற்போதைய 7% வளர்ச்சி விகிதத்தின் அடிப்படையில், இந்தியா ஆண்டுக்கு 90 லட்சம் மட்டுமே உருவாக்க முடியும். இந்தியாவில் உருவாக்கப்படும் வேலைகளின் தரம் மற்றொரு சவாலாக உள்ளது.
மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 20% -க்கும் குறைவான பங்களிப்பை விவசாயம் வழங்கினாலும், சுமார் 46% தொழிலாளர்கள் விவசாயத்தில் வேலை செய்கின்றனர். உற்பத்தித் துறை பணியாளர்களின் விகிதம் 2023-ம் ஆண்டில் மொத்த வேலைகளில் 11.4 % ஆகும். இது 2018-ம் ஆண்டை ஒப்பிடுகையில் குறைவான பங்கு. பெருந்தொற்று நோய்க்குப் பிறகு இந்தத் துறை மீண்டும் முன்னேறவில்லை என்பதைத்தான் இந்த அளவீடு காட்டுகிறது.
உற்பத்தித் துறைகளின் ஏற்றுமதி திறனை வலுப்படுத்துதல், வெளிநாட்டு நிறுவனங்களை ஈர்ப்பதற்கான ஊக்கத்தொகைகளை நீட்டித்தல் மற்றும் சுமார் 10 லட்சம் அரசு காலி பணியிடங்களை நிரப்புதல் போன்ற, இந்தியாவில் வேலை வாய்ப்புகளை அதிகரிப்பதற்கான தொடர் நடவடிக்கைகளை முன்மொழிந்து, வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டங்களை ஒருங்கிணைக்க வேண்டும்” என்று சிட்டிகுரூப் தெரிவித்துள்ளது.
ஆனால் இதற்கு மறுப்பு தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ள மத்திய அமைச்சகம், “சில அச்சு, மின்னணு ஊடகங்களால் மேற்கோள் காட்டபட்ட சிட்டி குழுமத்தின் சமீபத்திய ஆராய்ச்சி அறிக்கை, இந்தியா 7% வளர்ச்சி விகிதத்துடன் இருந்தாலும் கூட போதுமான வேலை வாய்ப்புகளை உருவாக்க இந்தியா போராடும் என்று கணித்துள்ளது.
ஆனால், பருவகால தொழிலாளர் சக்தி கணக்கெடுப்பு (பி.எல்.எஃப்.எஸ்), இந்திய ரிசர்வ் வங்கியின் கே.எல்.இ.எம்.எஸ் தரவுபோன்ற அதிகாரப்பூர்வ ஆதாரங்களிலிருந்து கிடைக்கும் விரிவான, நேர்மறையான வேலைவாய்ப்பு தரவுகளை இது கணக்கில் கொள்ளத் தவறிவிட்டது. எனவே, பொதுவெளியில் உள்ள அனைத்து அதிகாரப்பூர்வ தரவு ஆதாரங்களையும் பகுப்பாய்வு செய்யாத இத்தகைய அறிக்கைகளை தொழிலாளர் நலன், வேலைவாய்ப்பு அமைச்சகம் கடுமையாக மறுக்கிறது.
ஆர்பிஐ-யின் கே.எல்.இ.எம்.எஸ் தரவுகளின்படி, இந்தியாவில் 2017-18-ம் ஆண்டு முதல் 2021-2022-ம் ஆண்டு வரை எட்டு கோடிக்கும் அதிகமான வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. 2020-2021-ம் ஆண்டில் கோவிட்-19 தொற்று நோயால் உலகப் பொருளாதாரம் பாதிக்கப்பட்ட போதிலும், ஆண்டுக்கு சராசரியாக 2 கோடி வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது.
பி.எல்.எஃப்.எஸ்-ன் ஆண்டறிக்கையின் படி,தொழிலாளர் பங்கேற்பு விகிதம், எண்ணிக்கை விகிதம், 2017 முதல் 2023-ம் ஆண்டு வரை 15 வயது, அதற்கு மேற்பட்ட வயதுடையவர்களுக்கான வேலையின்மை விகிதம் என தொழிலாளர்களின் மேம்பட்ட போக்கை எடுத்துக்காட்டும் விதத்தில் வேலைவாய்ப்பு 2017-2018-ம் ஆண்டில் 46.8 சதவிகிதத்தில் இருந்து 2022-2023-ம் ஆண்டில் ல் 56%-ஆக அதிகரித்துள்ளது.
இதேபோல், நாட்டில் தொழிலாளர் பங்களிப்பும் 2017-18-ம் ஆண்டில் 49.8%-ல் இருந்து 2022-23-ம் ஆண்டில் 57.9% -ஆகவும், வேலையின்மை விகிதம் 2017-18-ம் ஆண்டில் 6.0% -ஆக இருந்து 2022-23-ம் ஆண்டில் 3.2% -ஆக குறைந்துள்ளது. கடந்த 5 ஆண்டுகளில், அதிக வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டு வேலையின்மை விகிதம் தொடர்ந்து குறைந்துள்ளது என்பதை பி.எல்.எஃப்.எஸ் தரவு காட்டுகிறது.
அங்கீகரிக்கப்பட்ட புள்ளிவிவரங்களை விட இதுபோன்ற தனியார் தரவு ஆதாரங்கள் சில குறைபாடுகளை கொண்டிருக்கும் என்பதால் இதனை நம்பியிருப்பது தவறான முடிவுகளுக்கு வழிவகுக்கும். இதுவரை இந்தியாவில் வேலைவாய்ப்பு சூழ்நிலையின் துல்லியமான சூழ்நிலையை முன்வைக்கவில்லை” என தெரிவித்துள்ளது.