`ரெளடிகளுக்கு எந்த மொழி புரியுமோ அந்த மொழிகளிலேயே நடவடிக்கை எடுக்கப்படும்’ எனக்கூறி எடுத்த எடுப்பிலேயே அதிரடி காட்டியிருக்கிறார் புதிதாக சென்னை போலீஸ் கமிஷனராகப் பொறுப்பேற்றிருக்கும் அருண். பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழகத் தலைவரான ஆம்ஸ்ட்ராங்கின் படுகொலையை அடுத்து சென்னை மாநகரப் போலீஸ் கமிஷனராக இருந்துவந்த சந்தீப் ராய் ரத்தோர் பணியிடமாற்றம் செய்யப்பட்டு, தமிழக அரசால் சென்னையின் புதிய போலீஸ் கமிஷனராக அருண் நியமிக்கப்பட்டிருக்கிறார். சென்னையில் நாளுக்கு நாள் சட்ட ஒழுங்கு பிரச்னை அதிகரித்து வரும் நிலையில், அருணை நம்பி இந்த பொறுப்பை முதலமைச்சர் ஒப்படைக்க காரணம் என்ன? அதிரடிக்குப் பெயர்போன அருணின் பின்னணி என்ன? என்பவற்றைப் பற்றி சுருக்கமாகப் பார்ப்போம்.

ஆம்ஸ்ட்ராங் கொலை

குடும்பமும் கல்வியும்:

சேலம் மாவட்டம் அஸ்தம்பட்டி அருகிலுள்ள சின்ன திருப்பதியைச் சேர்ந்தவர் அருண். விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்த இவருக்கு திருமணமாகி, இரண்டு மகள்கள் இருக்கின்றனர். சிறு வயதிலேயே போலீஸ் அதிகாரியாகவேண்டும் என்ற எண்ணம் அருணை உந்தித் தள்ள, சென்னையில் பி.இ மெக்கானிக்கல் இன்ஜினியரிங் முடித்த கையோடு, ஐதராபாத்திலுள்ள உஸ்மானியா பல்கலைக்கழகத்தில் காவல்துறை மேலாண்மை பிரிவில் பட்டயப் படிப்பில் சேர்ந்து தேர்ச்சி பெற்றார்.

காவல்துறையில் தொடக்க காலங்கள்:

அதன்பின்னர், 1998-ம் ஆண்டில் முதல்முறையாக ஐ.பி.எஸ் தேர்வில் தேர்ச்சி பெற்று தனது கனவை நனவாக்கினார். அதைத்தொடர்ந்து பயிற்சியை முடித்த அருண், 2002-ம் ஆண்டு வரை நாங்குநேரி மற்றும் தூத்துக்குடி கோட்டங்களில் உதவி காவல் கண்காளிப்பாளராகப் (ASP) பணியாற்றினார். அதன்பின்னர், பதவி உயர்வு பெற்று கரூர் மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் அடுத்தடுத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளராக (SP) பணியாற்றினார். தொடர்ந்து, திருப்பூர் மாவட்ட போதைப் பொருள் தடுப்பு பிரிவில் திறம்பட செயலாற்றினார். அருணின் துரிதமான நடவடிக்கைகள் தொடர்ச்சியாக அவருக்கு பதிவு உயர்வை பெற்றுத்தந்தது. 2012-ல் திருச்சி சரக டி.ஐ.ஜியாக பணியாற்றிவந்த அருண் 2016-ம் ஆண்டில் திருச்சி மாநகர கமிஷனராகப் பதவி உயர்வு பெற்றார்.

ஆம்ஸ்ட்ராங் – சென்னை முன்னாள் காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர்

சென்னைக்கு அடியெடுத்து வைத்த அருண்:

தூத்துக்குடி, கன்னியாகுமரி, கரூர், திருச்சி என தான் பணியாற்றிய தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களிலும் அருண் திறமையாக செயல்பட்டதால் சென்னைக்கு அழைத்துவரப்பட்டார் அருண். ஏற்கெனவே, சென்னை அண்ணா நகர் துணை ஆணையராகவும், பரங்கிமலை துணை ஆணையராகவும் பணியாற்றிய அனுபவம் அவருக்கு இருந்தது. மேலும், தமிழ்நாடு குற்ற புலனாய்வுத் துறையில்(CBCID) காவல் கண்காணிப்பாளராகவும் பணியாற்றினார். இதையடுத்து, 2012-ல் சென்னை வடக்கு மண்டல போக்குவரத்து காவல்பிரிவு டி.ஐ.ஜியானார். அதன்பிறகு, சென்னை தெற்கு மண்டல சட்டம் – ஒழுங்கு காவல் இணை ஆணையராகவும் பணியாற்றினார். தொடர்ந்து, வட சென்னை சட்டம் – ஒழுங்கு கூடுதல் காவல் ஆணையரானார். பின்னர், சென்னை காவல் கூடுதல் ஆணையராகவும், காவலர் பயிற்சி பள்ளியின் ஐ.ஜி.யாகவும் பதவி வகித்தார்.

கமிஷனர் அருண்

துறையில் சமீப கால வளர்ச்சி:

2021-ம் ஆண்டில் திருச்சி மாநகர கமிஷனராக மீண்டும் பொறுப்பேற்ற அருண், அங்கு சட்டவிரோதமாக கொடிகட்டிப் பறந்த லாட்டரி டிக்கெட் விற்பனைக்கு எதிராக சாட்டையை சுழற்றினார். தீவிர நடவடிக்கையின் மூலம் லாட்டரி ஏஜெண்டுகள் முதல் லாட்டரி முதலாளிகள் வரை ஒட்டுமொத்த கும்பலையும் கைதுசெய்து சிறையிலடைத்தார். தொடர்ந்து, 2022-ம் ஆண்டு தமிழ்நாடு குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுப் பிரிவு கூடுதல் டி.ஜி.பியாக பதவி உயர்வு பெற்றார். அதன்பின்னர், 2023-ல் ஆவடி மாநகர காவல் ஆணையரானார். அதன்பின்னர், கடந்த ஆண்டு சட்டம் – ஒழுங்கு கூடுதல் டி.ஜி.பியாக பொறுப்பேற்றவர் மாநிலம் முழுவதும் பல்வேறு குற்றங்களையும் காவல்துறையினரின் நடவடிக்கைகளையும் கண்காணித்து வந்தார். சட்ட ஒழுங்கை நிலைநாட்ட சுமார் நான்காயிரத்துக்கும் அதிகமான ரெளடிகளை கைது செய்து சிறையிலடைத்தார்.

சென்னையின் புதிய கமிஷனராக…

இந்த நிலையில், தொடந்து தலைநகர் சென்னை தொடங்கி பல்வேறு மாவட்டங்களிலும் அடுத்தடுத்து பல்வேறு அரசியல் படுகொலைகள் நடந்தன. ரெளடிகள் அட்டகாசம், படுகொலைகள், கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருள் புழக்கம் என எங்கும் குற்றசெயல்கள் அதிகரித்தவண்ணம் இருக்க, அதிர்கட்சிகளும் ஆளும் தி.மு.க அரசைக் கடுமையாக விமர்சித்தன. குறிப்பாக, தலைநகர் சென்னையில் பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழகத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் தனது வீட்டுக்கு அருகிலேயே வைத்து கொடூரமாக வெட்டிக் கொலைசெய்யப்பட்ட சம்பவம் தமிழ்நாட்டையே உலுக்கியெடுத்தது. தேசிய கட்சியின் தலைவர் என்பதால் இந்த விவகாரம் தேசிய தலைவர்கள் அளவில் பெரும் பேசுபொருளாகி திமுக அரசுக்கு கடும் கண்டனங்கள் குவிந்தன. இதையடுத்து, சென்னை மாநகராக போலீஸ் கமிஷனராக இருந்த சந்தீப் ராய் ரத்தோர் பணியிடமாற்றம் செய்யப்பட்டு, தமிழக அரசால் சென்னையின் புதிய போலீஸ் கமிஷனராக அருண் நியமிக்கப்பட்டிருக்கிறார்.

தமிழ்நாடு போலீஸ்

சென்னை மாநகரின் 110-வது போலீஸ் கமிஷனராகப் பொறுப்பேற்றிருக்கும் கூடுதல் டி.ஜி.பி அருண், “சென்னை மாநகரில் ரெளடிகளை கட்டுப்படுத்துவதே என் முதல் பணி. ரெளடிகள் முற்றிலும் ஒடுக்கப்படுவார்கள். ரெளடிகளுக்கு எந்த மொழி புரியுமோ அந்த மொழியிலேயே நடவடிக்கை எடுக்கப்படும். குற்றங்களை கட்டுப்படுத்தி, சட்ட ஒழுங்கை நிலைநாட்ட தீவிர நடவடிக்கை எடுக்கப்படும். என்னை நம்பி இந்தபொறுப்பை ஒப்படைத்த தமிழ்நாடு அரசு மற்றும் முதலமைச்சரின் நம்பிக்கையை நிச்சயம் காப்பாற்றுவேன்!” என உறுதியளித்திருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.