மூன்றாவது முறையாக என்.டி.ஏ கூட்டணி ஆதரவுடன் ஆட்சியமைத்திருக்கும் பிரதமர் மோடி, இரண்டு நாள் அரசுமுறைப் பயணமாக ரஷ்யா சென்றிருக்கிறார். பிரதமர் மோடியை சிகப்பு கம்பளத்தில் வரவேற்ற ரஷ்ய அதிபர், பிரதமர் மோடியுடன் நெருக்கம் காண்பித்ததும், அவரை கட்டியணைத்ததும், இருவரும் இரவு உணவின் போது மாறி மாறி புகழ்ந்துகொன்டதும் அரசியல் அரங்கில் பேசுபொருளாகிவருகிறது.
இதற்கிடையில், 2022-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் உக்ரைன் மீது ரஷ்யா தொடங்கியப் போர் இன்னும் முடிவுக்கு வராத நிலையில், இந்தியா இரு நாடுகளிடமும் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும் எனக் கேட்டுவருகிறது. ஐ.நா சபையில் ரஷ்யாவுக்கு எதிரான வாக்கெடுப்பிலும் வெளிநடப்பு செய்த இந்தியா, பேச்சுவார்த்தை மூலம் மட்டுமே தீர்வு காணமுடியும் என உறுதியாக கூறிவந்தது. ஆனாலும், இருநாடுகளுக்கு மத்தியிலான போர் தற்போதுவரை முடிந்தபாடில்லை.
பிரதமர் ரஷ்யாவில் இறங்கிய நேற்றும், ரஷ்ய ஏவுகணைகள் உக்ரைன் நகரங்களைத் தாக்கியிருக்கிறது. இந்த தாக்குதலில், உக்ரைனின் மிகப்பெரிய குழந்தைகள் மருத்துவமனை உள்ளிட்ட கட்டடங்கள் சேதமாகியிருக்கின்றன. சிகிச்சையில் இருந்த புற்றுநோயாளி குழந்தைகள் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கின்றனர். மேலும், இந்த தாக்குதலில் 41 பேர் கொல்லப்பட்டதாக உக்ரைன் அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர்.
உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்திய அதே தினம் பிரதமர் மோடி ரஷ்யா பயணம் மேற்கொண்டிருந்த நிலையில், பிரதமர் மோடியின் ரஷ்யப் பயணம் குறித்து, உக்ரைன் பிரதமர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி தன் எக்ஸ் பக்கத்தில், “உக்ரைனில், ரஷ்யாவின் கொடூரமான ஏவுகணைத் தாக்குதலின் விளைவாக 3 குழந்தைகள் உட்பட 37 பேர் கொல்லப்பட்டனர். 13 குழந்தைகள் உட்பட 170 பேர் காயமடைந்தனர்.
புற்றுநோயாளி குழந்தைகளை குறிவைத்து உக்ரைனில் உள்ள மிகப்பெரிய குழந்தைகள் மருத்துவமனையை ரஷ்ய ஏவுகணை தாக்கியது. பலர் இடிபாடுகளுக்கு அடியில் புதைந்திருக்கின்றனர். ஆனால், உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாட்டின் தலைவர், உலகின் மிக ரத்தம் தோய்ந்த குற்றவாளியை மாஸ்கோவில் கட்டிப்பிடித்ததைப் பார்ப்பது, அமைதி முயற்சிகளுக்கு பெரும் ஏமாற்றமும் பேரழிவு தரும் அடியுமாகும்” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.



இதற்கிடையில், பிரதமர் மோடி, ரஷ்ய அதிபர் புதினிடம், “போரால் எந்த தீர்வும் எட்டமுடியாது. பேச்சுவார்த்தை, இராஜதந்திர நடவடிக்கைகளே நாட்டை முன்னோக்கி அழைத்துச் செல்லும் வழி” என அறிவுறுத்தியதாக தகவல் வெளியாகியிருக்கிறது.