NEET: `வினாத்தாள் கசிந்திருக்கிறது’- NTA, மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றத்தின் கேள்விகளும், உத்தரவும்

மருத்துவ இளநிலை படிப்புகளுக்கு நடத்தப்பட்ட நீட் (NEET) தேர்வு முடிவுகள் ஜூன் 4-ம் தேதி வெளியானது. 23 லட்சம் பேர் எழுதிய இந்த நீட் தேர்வில், இதுவரையிலும் இல்லாத அளவுக்கு 67 பேர் முழு மதிப்பெண்கள் பெற்றிருந்தனர். நிறைய பேர் 719, 718, 717 மதிப்பெண்களைப் பெற்றிருந்தனர். இதனால், வினாத்தாள் கசிவு நடந்திருப்பதாக நாடு முழுவதும் குற்றச்சாட்டுகள் எழ, அவ்வாறு எதுவும் நிகழவில்லை என்றும், தேர்வு நடத்திய மையங்கள் நேரம் தவறியமைக்காக 1,500-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு கருணை மதிப்பெண் வழங்கப்பட்டதாக நீட் தேர்வு நடத்தும் தேசிய தேர்வு முகமை (NTA) கூறியது.

NEET

இருப்பினும், நீட் தேர்வில் முறைகேடுகள் நடந்திருப்பதாக உச்ச நீதிமன்றத்தில் மனுக்கள் குவிந்தன. அதை விசாரித்த உச்ச நீதிமன்றம், கருணை மதிப்பெண்கள் வழங்கப்பட்ட மாணவர்களுக்கு மட்டும் மறுதேர்வு நடத்துமாறும், இந்த மறுதேர்வில் பங்கேற்காதவர்களுக்குக் கருணை மதிப்பெண் போக அவர்கள் பெற்ற மதிப்பெண்ணை இறுதி மதிப்பெண்ணாக வழங்குமாறும் NTA-க்கு உத்தரவிட்டது.

அதன்படி, நடத்தப்பட்ட மறுதேர்வில் பாதிக்கும் மேற்பட்டோர் தேர்வெழுத வரவில்லை. இதனால், இந்தாண்டு நடத்தப்பட்ட நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்துவிட்டு மறுதேர்வு நடத்துமாறு உச்ச நீதிமன்றத்தில் 33 மனுக்கள் தாக்கல்செய்யப்பட்டன. இந்த மனுக்கள் மீதான விசாரணை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட், நீதிபதிகள் ஜே.பி.பார்திவாலா, மானுஜ் மிஸ்ரா ஆகியோர் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.

நீட் தேர்வு

அப்போது, மறுதேர்வு நடத்துவதற்கான கோரிக்கையை எதிர்த்த தேசிய தேர்வு முகமை, `இந்தியா முழுவதும் நடத்தப்பட்ட தேர்வில் முறைகேடு நடந்திருப்பதாக ஆதாரம் எதுவும் இல்லாத நிலையில், மறுதேர்வு நடத்தக் கோருவது சரியல்ல. அவ்வாறு செய்வது, தேர்வெழுதிய லட்சக்கணக்கான மாணவர்களைப் பாதிக்கும்’ என்று தெரிவித்தது. இன்னொருபக்கம், மறுதேர்வு நடத்தக் கோரிய மனுக்களின் தரப்பு வழக்கறிஞர், தேர்வுக்கு ஒருநாள் முன்பு வினாத்தாளும், அதற்கான விடைகளும் டெலிகிராம் குழுக்களில் பரப்பப்பட்டிருப்பதாகவும், இதுதொடர்பாக பாட்னாவில் எஃப்.ஐ.ஆர் பதிவுசெய்யப்பட்டிருப்பதாகவும் வாதிட்டார்.

அதைத் தொடர்ந்து பேசிய தலைமை நீதிபதி சந்திரசூட், “வினாத்தாள் கசிவு நடந்திருக்கிறது என்பது தெளிவாகத் தெரிகிறது. தேர்வின் புனிதத்தன்மை மீறப்பட்டிருக்கிறது என்பது அப்பாற்பட்டது. ஆனால், வினாத்தாள் கசிவு எந்த அளவுக்கு பரவலாக நடந்திருக்கிறது என்பதே இங்கு கேள்வி. வாட்ஸ்அப், டெலிகிராமில் வினாத்தாள் கசிந்திருந்தால் அது காட்டுத்தீ போல பரவியிருக்கும். 23 லட்சம் மாணவர்களுக்கும் மறுதேர்வு நடத்த உத்தரவிடுவது கடினமான பணி. அதற்குமுன், வினாத்தாள் கசிவின் தன்மை என்ன என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

உச்ச நீதிமன்றம்

வினாத்தாள் கசிவு முழு தேர்வு செயல்முறையையும் பாதித்திருந்தால், அதனால் பலனடைந்தவர்களைக் கண்டறிய முடியாது. அப்போது, மறுதேர்வு நடத்துவது அவசியமாகும். அதேசமயம், வினாத்தாள் கசிவால் பலனடைந்தவர்களைக் கண்டறியமுடியுமென்றால், அனைவருக்கும் மறுதேர்வு நடத்துவது பொருத்தமாக இருக்காது. எனவே, வினாத்தாள் கசிவு எப்போது நடந்தது, எவ்வகையில் அது பரவியது, கசிவுக்கும் தேர்வுக்கும் இடையிலான கால அளவு என்ன என்பது குறித்த முழு தகவலை தேசிய தேர்வு முகமை சமர்ப்பிக்க வேண்டும்.

உயர் நீதிமன்றம் உத்தரவு

அதோடு, வினாத்தாள் எப்போது இறுதி செய்யப்படுகிறது, அது எப்போது அச்சுக்கு அனுப்பப்படுகிறது, எப்போது அச்சிடப்படுகிறது, அவை எப்போது தேர்வு மையத்துக்கு அனுப்பி வைக்கப்படுகிறது என்பதைத் தேதி வாரியாக சமர்ப்பிக்க வேண்டும். 720-க்கு 720 மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை வரலாறு காணாத அளவில் இருக்கிறது. இவர்களில் எத்தனை பேர் கருணை மதிப்பெண்களால் பயனடைந்துள்ளனர்… இவை தொடர்பான பிரமாண பத்திரங்களை, ஜூலை 10-ம் தேதி மாலை ஐந்து மணிக்குள் தேசிய தேர்வு முகமை, மத்திய அரசு சமர்ப்பிக்க வேண்டும். அதேபோல், வினாத்தாள் கசிவு எஃப்.ஐ.ஆர் தொடர்பான விசாரணைகளின் அறிக்கையை சிபிஐ ஜூலை 10-க்குள் சமர்ப்பிக்க வேண்டும்” என்று உத்தரவிட்டு, வழக்கை ஜூலை 11-ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.