திடீர் திடீரென வீடுகள் மீது விழும் கற்கள்; தூக்கத்தைத் தொலைத்த கிராம மக்கள்! – என்ன நடந்தது?

திருப்பூர் மாவட்டம், காங்கேயம் படியூர் அருகே உள்ளது ஓட்டபாளையம் காலனி. கணபதிபாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட இந்தப் பகுதியில் பெரும்பாலானவை ஓட்டு வீடுகளாகும். சுமார் 100-க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வரும் நிலையில், இரவு நேரங்களில் வீட்டின் கூரை மீது திடீர் திடீரென கற்கள் வந்து விழுகின்றனவாம். கடந்த 13 நாள்களாக இரவில் வீட்டுக் கூரைமீது கற்கள் விழுவதால் அச்சமடைந்துள்ளதாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். கற்கள் விழுவதற்குப் பயந்து இரவு நேரங்களில் வீட்டை விட்டு வெளியேறி கோயிலில் தங்குவதாகவும் தெரிவிக்கின்றனர்.

கற்கள்

இது குறித்து ஓட்டபாளையம் மக்கள் நம்மிடம் பேசுகையில், “மதுரை வீரன் கோயில் அருகே உள்ள காலனியில் கடந்த 14 நாள்களாக இரவு 7 மணி தொடங்கி இரவு 2 மணி வரை தொடர்ச்சியாக ஒவ்வொரு வீடுகளின்மீதும் கற்கள் விழுகிறது. இந்தப் பகுதியில் வசிக்கும் அனைவருமே கூலித் தொழிலாளர்கள்தான். வேலையை முடித்துவிட்டு நிம்மதியாக தூங்ககூட முடியவில்லை. பல வீடுகளின் மேற்கூரையில் ஓட்டை விழுந்துவிட்டது. மக்களே குழு அமைத்து இரவு நேரத்தில் கிராமம் முழுவதும் சுற்றி வந்தோம். ஆனால், யார் கற்களை வீசுகிறார்கள் என்று கண்டுபிடிக்க முடியவில்லை.

குழந்தைகளும் வீட்டுப் பாடத்தைக்கூட செய்ய முடியவில்லை. குட்டிச்சாத்தான் வேலையாக இருக்கும் என சிலர் கூறுகின்றனர். இதற்கு பயந்து அருகில் உள்ள கோயிலில் இரவு தூங்குகிறோம். காவல்துறை அதிகாரிகளிடம் இது தொடர்பாக புகார் அளித்தோம். அதிகாரிகள் வந்து ஆய்வு நடத்தும்போது, கற்கள் வீசுவதில்லை. அவர்கள் சென்ற பின் மீண்டும் கற்கள் வீசப்படுகிறது.

இதன் தொடர்ச்சியாக அவர்கள் திங்கள்கிழமை இரவு டிரோன் மூலமும் கிரோனின் கேமரா பொருத்தியும் கண்காணித்தனர். இரவு 10:30 மணி வரை எந்த கற்களும் வந்துவிழவில்லை. அவர்கள் சென்ற பின் 11:30 மணி அளவில் மீண்டுகள் கற்கள் விழத் தொடங்கியது. இதனால், கடந்த 14 நாள்களுக்கும் மேலாக குழந்தைகள் முதல் பெண்கள், முதியோர் வரை தூக்கம் இல்லாமல் நிம்மதியைத் தொலைத்துவிட்டு தவிக்கிறோம்” என்றனர்.

ஓட்டபாளையம் மக்கள்

காவல் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் கூறுகையில், “வீடுகள் மீது கற்கள் விழுவது குறித்து காவல் மற்றும் வருவாய்த் துறை அடங்கிய குழு அமைத்து கிராமம் முழுவதும் இரவு நேரத்தில் ரோந்துப் பணி மேற்கொள்ளப்பட்டது. யார் கற்களை வீசுகிறார்கள் என்பதைக் கண்டறிய 4 டிரோன் கேமராக்கள் மற்றும் 4 கிரேனில் கேமராக்கள் பொருத்தப்பட்டு சுமார் 60 அடி உயரத்தில் பறக்கவிட்டு கண்காணிக்கப்பட்டது. அப்போது, கற்கள் ஏதும் விழவில்லை. நாங்கள் வந்த பின் நள்ளிரவில் கற்கள் விழுந்ததாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக சிலரை சந்தேகித்துள்ளோம். இச்செயலில் ஈடுபடுவோரை விரைவில் பிடித்துவிடுவோம். குட்டிச்சாத்தான் என்பதெல்லாம் வதந்தி” என்றனர்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/2b963ppb

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/2b963ppb