சேலம்: வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக பண மோசடி; சிபிசிஐடி-க்கு மாற்றப்பட்ட வழக்கு விசாரணை!

சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே உள்ள கெங்கவல்லி செந்தாரப்பட்டியைச் சேர்ந்தவர் அருண். ஹோட்டல் மேனேஜ்மென்ட் படித்துள்ள இவர், துபாயில் வேலை பார்த்துவந்த நிலையில், அதிக சம்பளத்திற்கு வேறு நாட்டிற்கு வேலைக்குச் செல்ல வேலை தேடி உள்ளார். அப்போது திருச்சியைச் சேர்ந்த மோகன் என்பவர் மூலம் அறிமுகமான ஏஜென்ட்டுகளான தஞ்சாவூர் பேராவூரணியைச் சேர்ந்த சையது, சென்னை பெரம்பூரைச் சேர்ந்த அப்துல் காதர் ஆகியோர் மூலம் லாவோஸ் நாட்டில் வேலைக்குச் செல்ல ரூ.1.65 லட்சத்தை அருண் கொடுத்துள்ளார்.

அந்தப் பணத்தைப் பெற்ற ஏஜென்ட்டுகள் அருணை பாங்காங் அனுப்பி வைத்துள்ளனர். அங்கிருந்து அவரை லாவோஸ் நாட்டிற்கு அழைத்துச் சென்ற ஜேம்ஸ் என்பவர், அருணை ஒரு வீட்டில் அடைத்து வைத்து 4 லட்சம் பணம் கேட்டு மிரட்டியுள்ளார். பின்னர் இந்திய தூதரகத்தின் உதவியுடன் மீண்ட அருண், நாடு திரும்பினார். ஆத்தூர் செந்தாரப்பட்டியில் உள்ள வீட்டிற்கு வந்த அவர், தன்னை ஏமாற்றிய ஏஜென்ட்டுகள் சையது, அப்துல் காதர் ஆகியோரை வரவழைத்து பிடித்தார். பிறகு தன்னிடம் 1.65 லட்சம் மோசடி செய்தது பற்றி தம்மம்பட்டி போலீஸில் புகார் செய்தார்.

கைது

இன்ஸ்பெக்டர் காந்திமதி விசாரணை செய்து ஏஜென்ட்டுகள் சையது, அப்துல் காதர் ஆகியோர்மீது மோசடி வழக்கு பதிவுசெய்து கைதுசெய்தார். பின்னர் இருவரையும் ஆத்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் அருண் லாவோஸ் நாட்டில் சிறை வைக்கப்பட்டிருந்தபோது அவரை ஆன்லைன் சூதாட்டம் மற்றும் இதர சைபர் குற்றங்களில் ஈடுபட வற்புறுத்தியுள்ளனர்.

மேலும் கைதான ஏஜென்ட்டுகள் இருவரும் அந்த தொழிலுக்குத்தான் அருணை அவருக்கு தெரியாமலேயே அனுப்பி வைத்துள்ளதும் தெரியவந்தது. இதனால் இவ்வழக்கு மூலம் ஆன்லைன் மோசடி கும்பலை கூண்டோடு பிடிக்க போலீஸ் அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். இதற்காக தம்மம்பட்டியில் பதிவான மோசடி வழக்கை சி.பி.சி.ஐ.டி போலீஸாருக்கு மாற்றி, தமிழக டி.ஜி.பி சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார்.