ஆடிட்டர் வீட்டில் 235 பவுன் நகை கொள்ளை; 6 மாத சதித்திட்டம்… ஓட்டுநர் உட்பட மூவர் சிக்கியது எப்படி?

ஈரோடு மாவட்டம், சூரம்பட்டி அடுத்த என்.ஜி.ஜி.ஓ காலனியைச் சேர்ந்தவர் ஆடிட்டர் சுப்பிரமணி. இவரது மனைவி பேராசிரியர் சாதனா. கடந்த மாதம் 9-ம் தேதி உறவினர் ஒருவர் திருமணத்துக்காக சுப்பிரமணி குடும்பத்துடன் சென்றிருந்த நிலையில், அவரது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு பீரோவில் வைக்கப்பட்டிருந்த 235 பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ.40 லட்சம் ரொக்கம் கொள்ளையடிக்கப்பட்டது.

இது குறித்து ஆடிட்டர் சுப்பிரமணி அளித்த புகாரில், ஈரோடு போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். வீட்டில் பொருத்தப்பட்டிருந்த கேமரா காட்சிகள் மற்றும் அருகில் இருந்த கேமரா காட்சிகளை ஆய்வு செய்தும், இக்கொள்ளையில் ஈடுபட்டவர்கள் குறித்த விசாரணையில் முன்னேற்றம் ஏற்படவில்லை. ஆடிட்டர் சுப்பிரமணியின் வீட்டில் பணிபுரிந்தவர்களின் செல்போன் எண்களை ஆய்வு செய்தும் தகவல் ஏதும் கிடைக்கவில்லை.

போலீஸ்

இதையடுத்து, தனிப்படை போலீஸார் கொள்ளைச் சம்பவத்துக்கு முந்தைய நாளில் அப்பகுதியில் வந்த வாகனங்களை கேமராவில் பதிவான காட்சிகளைக் கொண்டு ஆய்வு செய்தனர். அதில், ஆடிட்டர் சுப்பிரமணி வீட்டருகே கர்நாடக பதிவு எண் கொண்ட கார் வந்து சென்றது தெரியவந்தது. இதனால், சந்தேகதமடைந்த போலீஸார் அந்த கார் எங்கெல்லாம் சென்றுள்ளது என்பதை நகரில் பொருத்தப்பட்டிருந்த மற்ற கேமரா பதிவுகளை வைத்து ஆய்வு செய்தனர்.

அதில், கர்நாடக பதிவு எண் கொண்ட கார் நகரின் பல்வேறு பகுதிகளில் நின்று சென்றுள்ளதும், சில இடங்களில் அந்த கார் மாயமானதும் தெரியவந்துள்ளது. இதையடுத்து, கார் நிறுத்தப்பட்ட பகுதிகளில் உள்ள செல்போன் டவர்களில் அந்த நேரத்தில் வந்து சென்ற அழைப்புகளை ஆய்வு செய்தனர். ஆயிரக்கணக்கான எண்களை ஆய்வு செய்து அந்த காரில் வந்தவரின் எண்ணை போலீஸார் கண்டுபிடித்தனர். அந்த எண்ணை ஆய்வு செய்ததில் கடந்த 6 மாதத்துக்கு முன்பு ஆடிட்டர் சுப்பிரமணியின் ஓட்டுநரான சத்யன் அந்த காரில் பயணித்தவரிடம் பேசி இருந்தது தெரியவந்தது. இதையடுத்து, ஓட்டுநர் சத்யனை பிடித்து தனிப்படை போலீஸார் விசாரணை நடத்தினர்.

கைது

இதுகுறித்து போலீஸார் கூறுகையில், “ஆடிட்டர் சுப்பிரமணியிடம் சத்யன் ஆக்டிங் ஓட்டுநராக பணியாற்றி வந்துள்ளார். அவர் அடிக்கடி பணத்தை சேலத்துக்கு எடுத்துச் செல்வதை தெரிந்து கொண்டு அதை கொள்ளை அடிக்க சத்யன் திட்டமிட்டுள்ளார். கார் டீலிங் மூலம் தனக்கு அறிமுகமான ஒசூரைச் சேர்ந்த அருண்குமாருடன் இணைந்து கடந்த 6 மாதங்களுக்கு முன்பு ஆடிட்டர் சுப்ரமணியை தாக்கிவிட்டு பணம் பறிக்கும் திட்டம் தீட்டியுள்ளனர். ஆனால், ஆடிட்டர் சேலம் செல்வதை குறைத்துக்கொண்டதால் அத்திட்டத்தை கைவிட்டுள்ளனர்.

ஆனால், அருண்குமார் எப்படியாவது கொள்ளையடிக்க வேண்டும் என தனது உறவினரான விக்னேஷ் மற்றும் அவருக்கு தெரிந்த வெளிமாநிலத்தைச் சேர்ந்த வீடு புகுந்து கொள்ளையடிக்கும் குற்றவாளியை சேர்த்திருக்கிறார். இதற்கு சத்யனும் சம்மதிக்கவே, கொள்ளைச் சம்பவத்துக்கு முந்தைய நாள் சுங்கச்சாவடி வந்தால் கண்காணிப்பு கேமராவில் பதிவாகிவிடுவோம் என கிராமப்புறம் வழியாக ஈரோட்டுக்குள் அருண் நுழைந்துள்ளார். கொள்ளைக்குப் பிறகு நகைகள் மற்றும் பணத்தை சத்யன், அருண்குமார், விக்னேஷ் மற்றொரு குற்றவாளி ஆகியோர் பங்கு போட்டுள்ளனர்.

பறிமுதல்

தற்போது, சத்யன், அருண்குமார், விக்னேஷ் ஆகிய மூவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். மற்றொருவரை தேடி வருகிறோம். பங்குபோட்ட நகையை மூவரும் உருக்கி வைத்திருந்தனர். இதனையடுத்து அவர்களிடம் இருந்து 100 பவுன் மதிப்புள்ள தங்க கட்டிகள், ரூ.17 லட்சம் ரொக்கம் மற்றும் ரூ.4 லட்சம் மதிப்புள்ள கார் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது” என்றனர்.