“அ.தி.மு.க இல்லாத விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பா.ம.க வெல்வதற்கும் வாய்ப்பிருப்பதாகச் சொல்கிறார்களே?”
“தி.மு.க Vs அ.தி.மு.க என்ற களத்தை விரும்பக் கூடியவர்கள் தமிழ்நாடு மக்கள். எனவே தி.மு.க-வையும் அ.தி.மு.க-வையும் அழிப்போம் என முழங்கும் கட்சிக்கோ கூட்டணிக்கோ வெற்றிக்கான வாக்குகளை தரப்போவதில்லை. அன்புமணி முதலமைச்சராக நின்றபோதே 2016-ல் 41,000 வாக்குகள்தான் பா.ம.க-வுக்கு கிடைத்திருக்கிறது. கூட்டணியாக 2024-ல் நின்றபோது அதைவிடவும் குறைந்திருக்கிறது. இம்முறை அதைவிடவும் குறைவாக பெறுவார்கள். அ.தி.மு.க-வின் வாக்குகள் தி.மு.க செல்லுமே ஒழிய, பா.ம.க-வுக்கு நிச்சயம் போகாது.”
“வேங்கைவயலில் சி.பி.சி.ஐ.டி போலீஸார், பாதிக்கப்பட்டவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதாக தகவல் வருகிறதே… அதையெல்லாம் கவனிக்கிறதா வி.சி.க?”
“பாதிக்கப்பட்டவர்களையே போலீஸார் தொடர்ந்து விசாரித்து வருவதாக புகார்கள் வருகின்றன என வி.சி.க எம்.எல்.ஏ பனையூர் பாபு சட்டமன்றத்திலேயே கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவந்து எடுத்து பேசினார், இப்பிரச்னை நிகழ்ந்தபோது குரல் கொடுத்த எந்த கட்சியும் தீர்வு எட்டப்படவில்லை என குரல் கொடுக்கவில்லை. ஆனால் நாங்கள் அப்படியல்ல.”
“மதுவிலக்கு கொள்கை சாத்தியமில்லை என தமிழ்நாடு அரசு கைவிரித்திருக்கிறது… என்ன செய்யப்போகிறது வி.சி.க?”
“தமிழ்நாடு அரசு ஆணவக் கொலைக் குற்றத்துக்கு தனிச் சட்டம் வேண்டாம் என்கிறது. முதலமைச்சர் சொல்லிவிட்டார் என்பதற்காக ஆணவக் குற்ற தனிச் சட்ட கோரிகையை வி.சி.க விட்டுவிடவில்லை. மீண்டும் அதே கோரிக்கையை முன்வைக்கிறோம். மாநில அரசு மறுப்பதால் நாங்கள் எங்கள் கோரிக்கையை கைவிட முடியாது”
“`குற்றவியல் நடைமுறைச் சட்டத்தில் இந்தித் திணிப்பு இருப்பதாக கொதிக்கிறாரே எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி?”
“இந்தித் திணிப்பு எனச் சுருக்குவது தட்டையான பார்வை. அந்தச் சட்டத்தையே கடுமையாக எதிர்க்கிறது விடுதலை சிறுத்தைகள் கட்சி. மாநில அளவில் பா.ஜ.க-வுக்கு எதிரான பத்திரிகையாளர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் மற்றும் பா.ஜ.க-வுக்கு எதிரான செயல்களை ஒடுக்குவதற்கு கண்ணுக்கு தெரியாத வகையில் டிசைன் செய்திருக்கிறார்கள். எதிர்க்கட்சிகளை பழிவாங்குவதை தாண்டி குடிமகன்களுக்கான சட்ட வாய்ப்பை பறிக்கும் தன்மை கொண்டதாக இருக்கிறது இக்கொடுஞ்சட்டம்”