`பாமாயிலுக்கு சந்தையில் நல்ல விலை கிடைக்கிறது… ஆனால்’ – அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா!

தஞ்சாவூர் அருகே உள்ள ஈச்சங்கோட்டையில் கோத்ரெஜ் குழுமம் சார்பில், பாமாயில் எண்ணெய் பனை விவசாயிகளுக்கான தீர்வு மையம் தொடங்கப்பட்டது. இதில் விவசாயிகளுக்கு தேவையான பாமாயில் எண்ணெய் பனை செடிகள், அதற்கான உரங்கள், பராமரிப்பு கருவிகள், எண்ணெய் பனை விதைகள் உள்ளிட்டவை இந்த தீர்வு மையத்தில் வழங்கப்பட உள்ளது. இந்நிகழ்ச்சியில் தமிழக தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, தஞ்சாவூர் எம்.பி முரசொலி, கோத்ரெஜ் அக்ரோவெட் நிறுவனத்தின் முதன்மை செயல் அலுவலர் சவுதா நியோகி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா

நிகழ்வில் அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா பேசியதாவது, “விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பெருக்க வேண்டும் என்பதுதான் தமிழக முதல்வரின் நோக்கம். இதனால், டெல்டா பகுதிகளில் விவசாயம் சார்ந்த தொழில்கள், விவசாய பொருள்கள் மூலம் மதிப்புக்கூட்டுதல் போன்ற பல்வேறு திட்டங்கள் கொண்டு வரப்பட உள்ளன.

டெல்டா மாவட்டங்களில் உள்ள விவசாயிகள், தாங்கள் விளைவித்த விளைபொருள்களை மதிப்பு கூட்டி விற்கும் தொழில் முனைவோராக மாற வேண்டும். சிறு, குறு விவசாயிகள் எல்லாம் அரசிடம் கடன் பெறாமல் வருமானத்தை சேமிக்கும் வகையில் உற்பத்தியை அதிகரித்து வருவாயை பெருக்க வேண்டும். விவசாயிகள் கடன் கேட்பதை கைவிட்டு, அடுத்தவர்களுக்கு கடன் கொடுக்கும் வகையில் முன்னேற வேண்டும். கடன் கேட்பது எப்போது முழுமையாக நிறுத்தப்படுகிறேதா அன்றைக்குத்தான் விவசாயிகள் வளர்ச்சியடைந்துள்ளார்கள் என்று அர்த்தம். விவசாயிகளுக்கு தெரியாத விஷயம் எதுவும் இல்லை. நாட்டின் அரசியலையும், இயற்கையையும் தெரிந்தவர்கள், விவசாயிகளை போல யாரும் கிடையாது. வேளாண் தொழிலை விட்டு நாம் வெளியேறக் கூடாது.

அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா

இதற்காக விவசாயிகள் உற்பத்தி செய்யும் நெல், கரும்பு, பாமாயில், தேங்காயை மதிப்பு கூட்டும் பொருள்களாக மாற்ற வேண்டும். 60 சதவீத பாமாயிலை இந்தியா இறக்குமதி செய்துகொண்டு இருக்கிறது. நம் நாட்டின் பாமாயில் உற்பத்தி 22 சதவீதம்தான். பாமாயில் எண்ணெய்க்கு சந்தையில் நல்ல விலை கிடைக்கிறது. ஆனாலும், விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று தேங்காய் மற்றும் கடலை எண்ணெயை ரேஷன் கடைகளில் விநியோகம் செய்வதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. டெல்டாவில் தண்ணீர் பிரச்சனை அதிகளவில் உள்ளது. இதற்குத் தீர்வு காணும் வகையில், குறைவான தண்ணீரை பயன்படுத்தி சாகுபடி செய்யும் பயிர்களை நோக்கி விவசாயிகள் செல்ல வேண்டும். விவசாயிகளுக்கு வருமானமும் பெருகும்” என்றார்.