இந்தியாவின் செலவு மிகுந்த நகரம் எது தெரியுமா? – மெர்சர் வெளியிட்ட டாப் 10 பட்டியல்!

‘மெர்சர் (Mercer)’ மனித வளங்கள் மற்றும் நிதி சேவைகளை வழங்கும் நியூயார்க்கை தலைமையிடமாகக் கொண்ட சர்வதேச நிறுவனம் ஆகும். இந்த நிறுவனம் உலகின் செலவு மிகுந்த 226 நகரங்களை ஆண்டுதோறும் பட்டியலிடுகிறது. பணவீக்கம், சர்வதேச பொருளாதார சூழல், உள்நாட்டு வரி, போக்குவரத்து, பொருள்களின் விலை ஆகியவை மக்களின் செலவினங்களுக்கு அடிப்படை காரணிகளாக அமைகின்றன. இந்தக் காரணிகளை அடிப்படையாக கொண்டு மெர்சர் நிறுவனம் உலகின் செலவு மிகுந்த நகரங்களின் பட்டியலை ஒவ்வொரு ஆண்டும் பட்டியலிடுகிறது.

செலவு மிகுந்த நகரம்

மெர்சர் அளவீட்டின் படி, உலகின் செலவு மிகுந்த நகரங்களின் முதல் 10 இடங்களில் முதலிடத்தில் ஹாங்காங் இருக்கிறது. இரண்டாவது, 3-வது, 4-வது மற்றும் 5-வது இடங்கள் முறையே சிங்கப்பூர், சூரிச், ஜெனிவா மற்றும் பாஸல் ஆகிய நகரங்கள் இருக்கின்றன. 6-வது இடத்தில் பெர்ன் நகரமும், 7-வது இடத்தில் நியூயார்க் நகரமும், 8-வது, 9-வது மற்றும் 10-வது இடங்கள் முறையே லண்டன், நாசாவ் மற்றும் லாஸ் ஏஞ்சல்ஸ் ஆகிய நகரங்கள் இருக்கின்றன.

மிகவும் குறைந்த செலவுள்ள நகரங்களில் ஹவானா, விண்ட்ஹோக், டர்பன், துஷான்பே, பிளாண்டயர், கராச்சி, பிஷ்கெக், இஸ்லாமாபாத், லாகோஸ், மற்றும் அபுஜா ஆகிய நகரங்கள் அடங்கும். ஆசியாவில், செலவு மிகுந்த நகரங்களாக 22, 25, மற்றும் 32-வது இடங்களில் ஷாங்காய், பெய்ஜிங், மற்றும் சியோல் ஆகியவை உள்ளன.

மும்பை விமான நிலையம்

இந்தியாவில், வழக்கம்போலவே மும்பை செலவு மிகுந்த நகரமாக முதலிடத்தில் உள்ளது, உலகளவில் 136-வது இடத்தில் உள்ளது. மேலும், டெல்லி (165), சென்னை (189), பெங்களூரு (195), ஹைதராபாத் (202), புனே (205), கொல்கத்தா (207) ஆகிய நகரங்களும் பட்டியலில் இடம்பெற்றுள்ளன. முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில், மும்பை 11 இடங்களும், டெல்லி 4 இடங்களும், புனே 8 இடங்களும், கொல்கத்தா 4 இடங்களும் முன்னேறியுள்ளன. ஆனால், சென்னை 5 இடங்களும், பெங்களூரு 6 இடங்களும் பின்தங்கியுள்ளன.