தருமபுரி மாவட்டம், பென்னாகரம் அடுத்த நெற்குந்தி முத்தப்பா நகரில் வசிப்பவர் லலிதா. இவர் நடப்பன அல்லி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் சத்துணவு சமையலராக பணிபுரிந்து வந்தார். இவரது வீட்டில் ஸ்கேன் இயந்திரம் வைத்து கர்ப்பிணி பெண்களுக்கு கருவில் இருக்கும் சிசுவின் பாலினம் கண்டறிந்து சொல்வதாக சுகாதாரப் பணிகள் மற்றும் ஊரக நலத்துறை இணை இயக்குநர் மருத்துவர் சாந்திக்கு புகார் வந்தது. இதையடுத்து கடந்த 28-ம் தேதி தருமபுரி மாவட்ட நலப்பணிகள் இணை இயக்குனர் சாந்தி மற்றும் மருத்துவ குழுவினர் நெற்குந்தி முத்தப்பா நகருக்கு சென்று லலிதாவின் வீட்டை சோதனை செய்தனர்.
அப்போது வீட்டின் ஒரு அறையில் அனுமதி இன்றி ஸ்கேன் கருவி வைத்து கர்ப்பிணிகளுக்கு பரிசோதனை செய்து வந்ததும், தலா 13,000 ரூபாய் வீதம் கட்டணமாக பெற்றுக்கொண்டு 4 கர்ப்பிணி பெண்களுக்கு ஸ்கேன் செய்து கருவில் இருக்கும் பாலினத்தை தெரிவித்துள்ளதையும் கண்டுபிடித்தனர்.
மேலும் இதற்கு புரோக்கராக லலிதா செயல்பட்டு வந்திருக்கிறார். கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த ஸ்கேன் சென்டரில் பணியாற்றிய முருகேசன், சின்ராஜ் உள்ளிட்ட குழுவினரை போலீஸார் கைது செய்தனர். இந்நிலையில் நேற்று தருமபுரி கலெக்டர் சாந்தி கருவில் இருக்கும் குழந்தையின் பாலினத்தை கண்டறிந்து கூறும் குழுவிற்கு இடைத்தரகராக செயல்பட்ட சத்துணவு மைய சமையலர் லலிதாவை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.