New Criminal Laws: புதிய குற்றவியல் சட்டங்களுக்கு எதிராக போராட்டம்; வழக்கறிஞர்கள் கூறும் காரணமென்ன?!

இந்தியாவில் நடைமுறையில் இருந்துவந்த மூன்று குற்றவியல் சட்டங்கள் மாற்றப்பட்டு, புதிய குற்றவியல் சட்டங்கள் ஜூலை 1-ம் தேதி முதல் அமலுக்கு வந்துவிட்டன. புதிய குற்றவியல் சட்டங்களால் பல குழப்பங்களும் பாதிப்புகளும் ஏற்படும் என்று குற்றம்சாட்டும் வழக்கறிஞர்கள், பல மாநிலங்களில் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கிறார்கள். தமிழ்நாட்டிலும் சென்னை, திருச்சி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் உட்பட பல்வேறு மாவட்டங்களில் வழக்கறிஞர்கள் போராட்டம் நடத்துகிறார்கள்.

நாடாளுமன்றம்

இந்திய தண்டனைச் சட்டம், குற்றவியல் நடைமுறைச் சட்டம், இந்திய சாட்சிய சட்டம் ஆகிய மூன்று குற்றவியல் சட்டங்களுக்கு பதிலாக, பாரதிய நியாய சன்ஹிதா (BNS) 2023, பாரதிய நகரிக் சுராக்ஷா சன்ஹிதா 2023, பாரதிய சாக்சியா அபினியம் 2023 என்ற புதிய சட்டங்களை மத்திய பா.ஜ.க அரசு கொண்டுவந்திருக்கிறது. புதிய குற்றவியல் சட்டத்தில், ‘பூஜ்ஜிய முதல் தகவல் அறிக்கை’ என்ற அம்சம் இருக்கிறது.

அதன்படி, குற்றம் நிகழ்ந்த இடத்தின் எல்லைக்கு உட்பட்ட காவல் நிலையத்தில் மட்டுமன்றி, எந்தவொரு காவல் நிலையத்திலும் வழக்குப்பதிவு செய்ய முடியும். காவல் நிலையத்துக்கு நேரில் செல்லாமல் ஆன்லைனிலேயே புகார் அளிக்கலாம் என்பன உள்ளிட்ட வரவேற்கத்தக்க அம்சங்கள் புதிய குற்றவியல் சட்டங்களில் இருக்கின்றன என்று வழக்கறிஞர்கள் கூறுகிறார்கள்.

அதே நேரத்தில், புதிய குற்றவியல் சட்டங்கள் கடுமையாக விமர்சிக்கப்படுகின்றன. இதற்கு எதிராக சென்னை உயர் நீதிமன்ற வளாகம் அருகில் வழக்கறிஞர்கள் போராட்டம் நடத்தியிருக்கிறார்கள். அதில் பங்கேற்ற அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளரான வழக்கறிஞர் சிவக்குமாரிடம் பேசினோம். “இந்தச் சட்டங்களை நாங்கள் எதிர்ப்பதற்கு பல காரணங்கள் இருக்கின்றன. முதலில், நாடாளுமன்றத்தில் 140-க்கும் மேற்பட்ட எதிர்க்கட்சி எம்.பி-க்களை இடைநீக்கம் செய்து அவையிலிருந்து வெளியேற்றிவிட்டுத்தான் இந்தச் சட்டங்கள் கொண்டுவரப்பட்டன. இது, ஜனநாயக விரோதமானது.

வழக்கறிஞர் ச.சிவக்குமார்

இந்தச் சட்டங்களுக்கு சம்ஸ்கிருதத்தில் ஏன் பெயர் வைத்திருக்கிறார்கள் என்பது பெரும்பான்மையான தமிழக வழக்கறிஞர்களின் கேள்வியாக இருக்கிறது. மேலும், இந்தச் சட்டங்கள் பொதுப்பட்டியலில் இருப்பதால், இந்த மாற்றம் குறித்து மாநில அரசுகளுடன் மத்திய அரசு கலந்து பேசியிருக்க வேண்டும். ஆனால், மாநிலங்களுடன் கலந்து ஆலோசிக்கவில்லை. இது கூட்டாட்சித் தத்துவத்துக்கு எதிரானது.

உச்ச நீதிமன்றம் முதல் கீழமை நீதமின்றங்கள் வரை, இந்தியாவில் மொத்தம் சுமார் 28,000 நீதிமன்றங்கள் இருக்கின்றன. அதேபோல, இந்தியாவில் 20,000-க்கும் மேற்பட்ட காவல் நிலையங்கள் இருக்கின்றன. புதிய சட்டங்கள் தொடர்பாக நீதித்துறையினருக்கும், காவல்துறையினருக்கும் போதிய பயிற்சி வழங்கப்படவில்லை. தற்போது, நாட்டில் ஐந்தரை கோடி வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன. இவற்றில், நாலரை கோடி வழக்குகள் கீழமை நீதிமன்றங்களில் இருக்கின்றன. இந்த நிலையில், புதிய குற்றவியல் சட்டங்களால் நிறைய குழப்பங்கள் ஏற்படும். அந்த குழப்பங்கள் காரணமாக, நீதி வழங்குவதில் கடுமையான தாமதம் ஏற்படும். இதனால், சாதாரண பொதுமக்கள் பாதிக்கப்படுவார்கள்.

வழக்கறிஞர்கள் போராட்டம்

பொதுவாக, முன்னாள் நீதிபதிகள், தேர்வுசெய்யப்பட்ட வழக்கறிஞர்கள், சட்ட ஆசிரியர்கள் ஆகியோர் கொண்ட சட்ட ஆணையத்தின் மூலமாகத்தான் சட்டத்திருத்தங்கள் கொண்டுவரப்படுவது வழக்கம். ஆனால், சில தனிநபர்களை நியமித்து குற்றவியல் சட்டங்களைக் கொண்டுவந்திருக்கிறார்கள். இது, ஜனநாயக விரோதம். எனவேதான், இந்தச் சட்டங்களை எதிர்க்கிறோம்” என்கிறார் வழக்கறிஞர் ச.சிவக்குமார்.

புதிய குற்றவியல் சட்டங்கள் குறித்து மூத்த பத்திரிகையாளரும், வழக்கறிஞருமான தராசு ஷ்யாமிடம் பேசினோம். “புதிய குற்றவியல் சட்டங்கள் கடந்த ஆண்டு நிறைவேற்றப்பட்டன. ஆறு மாத கால இடைவெளியில் ஒட்டுமொத்த குற்றவியல் நடைமுறையும் அவசரமாக மாற்றப்படுகிறது. இதில், பல சிக்கல்கள் இருக்கின்றன. சட்டப் பாடத்திட்டத்துக்குள் புதிய சட்டங்களை மொழிபெயர்த்துக் கொண்டுவர நீண்ட காலம் தேவைப்படும். சட்டம் படித்து முடித்தவர்கள், இனி சட்டம் படிக்கப்போகிறவர்கள் என எல்லோருக்கும் பாதிப்புகள் வரும். பழைய குற்றவியல் சட்டங்களின் படியும் வழக்குகள் நடத்த வேண்டும், புதிய குற்றவியல் சட்டங்களின்படியும் வழக்குகள் நடத்த வேண்டும்.

நீதிமன்றங்களில் இருக்கும் வழக்குகளில் பெரும்பாலானவை சிவில் வழக்குகள். ஆனால், சிவில் சட்டம் மாற்றப்படவில்லை. சாட்சிய சட்டத்தை மாற்றியதால், சிவில் சட்டம் பாதிக்கப்படுகிறது. காரணம், சாட்சிகள் சட்டத்தை வைத்துத்தான் சிவில் வழக்குகளை நடத்த வேண்டும். எனவே, வழக்குகள் முடிவதற்கு பல ஆண்டுகள் பிடிக்கும்.

தராசு ஷ்யாம்

எங்கிருந்து வேண்டுமானாலும் வழக்குப் பதிவு செய்யலாம்… ஆன்லைனில் எப்.ஐ.ஆர் பதிவு செய்யலாம் என்ற சிறப்பு அம்சங்கள் புதிய குற்றவியல் சட்டத்தில் இருக்கின்றன. ஆனால், இதை மட்டுமே பெருமையாகப் பேசுகிறார்கள். சாதாரண அடிதடி போன்ற விவகாரங்களில் எஃப்.ஐ.ஆர் போடாமல் சமாதானமாகப் பேசி முடிப்பது வழக்கமாக இருக்கிறது. கொலை, கொள்ளை, வன்குற்றங்கள், பாலியல் குற்றங்கள் என்று குறைந்தபட்சம் ஓர் ஆண்டு தண்டனைக்குரிய குற்றங்கள் என்றால்தான் காவல் நிலையத்துக்கு போகும் வழக்கம் இருக்கிறது. அந்த வழக்குகளில எஃப்.ஐ.ஆர் பதியப்படும். ஆனால், அதன் சதவிகிதம் குறைவு.

ஆன்லைன் வசதி என்று வந்த பிறகு சிறிய தகராறு அனைத்துக்கும் ஆன்லைனில் புகார் செய்யப்பட்டு எஃப்.ஐ.ஆர் பதியப்படும். வழக்குகளின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரிக்கும். அதை சமாளிக்கவே முடியாது. சிறு சிறு வழக்குகளெல்லாம் நீதிமன்றம் போகும். இதனால், ஒட்டுமொத்த சிஸ்டமும் ஸ்தம்பித்துவிடும்’‘ என்கிறார் தராசு ஷ்யாம்.

இந்த விவகாரம் குறித்து ஓய்வுபெற்ற காவல்துறை கண்காணிப்பாளர் எம்.கருணாநிதியிடம் பேசினோம். “இந்திய குற்றவியல் நடைமுறைச் சட்டம், இந்திய தண்டனைச் சட்டம் ஆகியவற்றின் பிரிவுகள் அப்படியே நினைவில் இருக்கின்றன. இந்த நிலையில், புதிய சட்டங்களில் பிரிவுகளின் எண்களை மாற்றியிருப்பதால் குழப்பங்கள் ஏற்படும். நீதிமன்றத்தில் வழக்கு விசாரணையின்போது புதிய சட்டப்பிரிவுகள், பழைய சட்டப்பிரிவுகள் தொடர்பான விளக்கங்களை ஒவ்வொரு முறையும் கொடுக்க வேண்டியிருக்கும்.

ஏற்கெனவே, நீதிமன்றத்தில் வழக்குகள் தேங்கிக்கிடக்கின்றன. புதிய குற்றவியல் சட்டங்களால் நிலுவையில் இருக்கும் வழக்குகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்ற அச்சம் ஏற்பட்டிருக்கிறது. இப்போது, காவல்துறையினருக்கு சட்டங்கள் குறித்து பயிற்சி அளிக்க வருபவர்கள் ஐ.பி.சி., சி.ஆர்.பி.சி ஆகிய சட்டங்களைப் படித்திருப்பதுடன் அனுபவ ரீதியாகவும் வகுப்பெடுப்பார்கள். இனி, புதிய சட்டங்கள் குறித்து வகுப்பெடுக்க வருபவர்களும் மாணவர்களைப் போலத்தான் வருவார்கள். அதாவது, ஆசிரியரும் மாணவர்களும ஒரே நிலையில் இருக்கப்போகிறார்கள். இது மிகவும் சிரமம்.

எம்.கருணாநிதி

மாற்றங்கள் அவசியம் என்று சொல்கிறார்கள். ஆனால், இவ்வளவு அவசரப்பட்டு மாற்றங்களைக் கொண்டுவந்திருக்க வேண்டாம். அன்றாடம் பயன்படுத்தும் விஷயம் என்பதால், போகப் போக சரியாகிவிடும் என்றும் சொல்லிவிட முடியாது. கொஞ்சம் கொஞ்சமாக சரியாகும் நேரத்தில், பிரச்னைகளும் அதிகரிக்கும். இது நமக்கு ஒரு சோதனை காலம்தான்” என்கிறார் கருணாநிதி.

புதிய குற்றவியல் சட்டங்களால் பிரச்னைகள் அதிகரிக்கும்போது, அதற்கு எதிராக மற்ற மாநிலங்களிலும் போராட்டங்கள் தொடங்கும் என்கிறார்கள் வழக்கறிஞர்கள்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/2b963ppb

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/2b963ppb