மீண்டும் `அண்ணாமலை Vs எடப்பாடி’ – உச்சக்கட்ட மோதலில் ஸ்கோர் செய்வது யார்?!

கடந்த மக்களவைத் தேர்தலுக்கு முன்பாக செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, “2019-ல் எங்களுக்கு ஏற்பட்ட பின்னடைவுக்கு அ.தி.மு.க-தான் காரணம். மதுரை முதல் கன்னியாகுமரி வரையில் அந்த கட்சி என்னவாகிறது என ஜூன் 4-ம் தேதி பாருங்கள். ஒரு இடத்தில் கூட டெபாசிட் வாங்கமாட்டார்கள். தி.மு.க எதிர்ப்புக்கு என ஒரு கட்சி தேவையா?. தேர்தலுக்கு பிறகு அ.தி.மு.க என்கிற ஒரு கட்சி இருக்காது” என பேசியிருந்தார்.

இதற்கு எடப்பாடி பழனிசாமி, “பா.ஜ.கவுக்கு புதிதாக ஒரு தலைவர் வந்துள்ளார். பேட்டி கொடுப்பது மட்டுமே அவர் வேலை. விமானத்தில் ஏறும்போதும், இறங்கும்போதும் பேட்டி கொடுத்துக் கொண்டிருக்கிறார். தமிழ்நாட்டில் உழைப்பவர்களுக்கு மட்டுமே மரியாதை கிடைக்கும். மத்தியில் இருந்து அடிக்கடி வந்து சென்று கொண்டுள்ளார்கள். நேராக ஏரோபிளேனில் இறங்குகிறார்கள். சாலையில் அப்படியே சென்று என்ன பயன். மக்கள் ஓட்டு போடுவார்களா. தமிழக மக்கள் அறிவுத்திறன் படைத்தவர்கள். ஏமாற்று வேலைகள் எல்லாம் இங்கு நடக்காது” என கொதித்தார்.

அண்ணாமலை – எடப்பாடி பழனிசாமி

இதற்கு அண்ணாமலை, “எடப்பாடி பழனிசாமி ரோடு ஷோ சென்றால் அதில் எத்தனை பேர் வருவார்கள்?. பணத்தைக் கொடுத்து கூட்டம் கூட்டுபவர்கள் ரோடு ஷோ சென்றால் கூட்டம் வராது. யாரும் வரமாட்டார்கள் என அவர்களுக்கே தெரியும். பழைய பஞ்சாங்கத்தையே எடப்பாடி பேசி வருகிறார்” என தெரிவித்தார்.

இதனால் இரு கட்சிகளுக்கும் இடையேயான மோதல் வெடித்தது. பிறகு தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு அ.தி.மு.கவுடன் கூட்டணி வைக்காததுதான் தோல்விக்கு காரணம் என இரு கட்சி தலைவர்களும் ஒருவரை ஒருவர் விமர்சனம் செய்து வந்தார்கள். சில காலம் அமைதியாக இருந்த நிலையில் விக்கிரவாண்டி தேர்தலை முன்வைத்து மீண்டும் அ.தி.மு.க, பா.ஜ.க இடையில் வார்த்தை மோதல் ஏற்பட்டிருக்கிறது.

கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி, “அண்ணாமலை வந்த பிறகுதான் பா.ஜ.க-விற்கு பலம் வந்ததுபோல் மாயையை உருவாக்குகிறார். பா.ஜ.க தலைவராக தமிழ்நாட்டு மக்களுக்கு மத்திய அரசிடம் இருந்து என்ன திட்டங்களை அண்ணாமலை பெற்று தந்திருக்கிறார்?. தமிழக மக்களுக்கு எந்த நன்மையும் செய்யாதவர், அண்ணாமலை. வாயால் வடை சுடுகிறார். அந்த கட்சி தமிழ்நாட்டில் வளரக்கூட இல்லை” என்றார்.

இதற்கு எதிர்வினையாற்றிய அண்ணாமலை, “அ.தி.மு.க சிறிது சிறிதாக கரையத் தொடங்கிவிட்டது. தன் கட்சியை காப்பாற்ற முடியாத எடப்பாடி பழனிசாமி எனக்கு அறிவுரை கூறத் தேவையில்லை. சிலர் சுயலாபத்துடன் செயல்படுவதால் அ.தி.மு.க அழிந்து கொண்டிருக்கிறது. நம்பிக்கை துரோகி என்ற வார்த்தை எடப்பாடி பழனிசாமிக்கே பொருந்தும். நம்பிக்கை வைத்த பிரதமர் மோடியின் முதுகிலேயே குத்தியவர்தான் அவர். தற்போது சட்ட ஒழுங்கு சரியில்லை என விக்கிரவாண்டி தேர்தலை புறக்கணித்த எடப்பாடி, 2026 தேர்தலையும் புறக்கணிப்பாரா” என கொதித்தார்.

தொடர்ந்து, மதுரையில் பேசிய எடப்பாடி பழனிசாமி, `அண்ணாமலை பச்சோந்தி, நான் துரோகி அல்ல, துரோகியின் மொத்த உருவமே அண்ணாமலைதான். எங்கள் தலைவர்களை அவதூறாக கீழ்த்தரமாக விமர்சித்தால் நாங்கள் எப்படி பொறுத்துக் கொள்வோம்?’ எனக் கொதித்தார்.

துரை கருணா

இதுகுறித்து நம்மிடம் பேசிய மூத்த பத்திரிகையாளர் துரை.கருணா, “யார் ஸ்கோர் செய்கிறார்கள் என்று சொல்ல முடியாது. அரசியலில் எதிர் எதிரான நிலைப்பாட்டை எடுத்துவிட்டால் இதுபோன்ற விமர்சனங்களை செய்வார்கள். கருணாநிதி கூட, இந்திரா காந்தியை விமர்சனம் செய்திருக்கிறார். பிறகு, ‘நேருவின் மக்களே வருக நிலையான ஆட்சியை தருக’ என பேசினார். அதையடுத்து பா.ஜ.க-வுடன் கூட்டணி வைத்து வாஜ்பாயை புகழ்ந்து தள்ளினார். அங்கிருந்து தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டு காங்கிரஸூடன் கைகோர்த்தார். அப்போது ‘பா.ஜ.க-வினர் நாட்டை அழித்து விடுவார்கள்’ என தெரிவித்தார்.

இதுபோல் அரசியல் தலைவர்கள் எப்படி வேண்டுமானாலும் பேசுவார்கள். அண்ணாமலை, எடப்பாடி மோதலை பொறுத்தவரையில் எடப்பாடி கூட்டணிக்கு வருவார் என கடைசிவரை பா.ஜ.க விரும்பியது. ஆனால் எடப்பாடி போகவில்லை. எனவேதான் எடப்பாடியை துரோகி என விமர்சனம் செய்கிறார்கள். பதிலுக்கு எடப்பாடி, ‘தமிழகத்தில் பாஜக வளரவில்லை’ என சொல்கிறார். ஒவ்வொருவரும் கடுமையாக பேசிக்கொள்கிறார்கள். ஆனால் 2026 தேர்தலில் ஒருவேளை கூட்டணி வைத்தால் இதையெல்லாம் மறந்துவிட்டு புகழ்ந்து பேசுவார்கள்” என்றார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88