ஐந்தாவது முடிக்கும்போது மாணவர்களுக்கு ரூ.6,000 கொடுக்கும் பள்ளி… எதற்கு, எங்கே தெரியுமா?

திருநெல்வேலியில், அரசு உதவி பெறும் பள்ளியான இந்து தொடக்கப்பள்ளியில் மாணவர்களுக்கு பள்ளி நிர்வாகம் உதவித்தொகை வழங்குவதை கேள்விப்பட்டு, ’ஏன், எதற்கு…?’ என்று புருவம் உயர, அந்தப் பள்ளிக்குச் சென்றோம். பள்ளியின் தலைமை ஆசிரியர் கலைச்செல்வி, நம் ஆச்சர்யத்துக்கான பதிலை பகிர்ந்தார்.

‘’கடந்த 1924-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்தப் பள்ளிக்கூடத்துக்கு, இந்த வருடம் 100 வயது முடிகிறது. ஆனால், பள்ளியில் மாணவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாக உள்ளது” என்றவர், தொடர்ந்து பேசினார்.

பள்ளியின் தலைமை ஆசிரியர் கலைச்செல்வி

“எங்கள் பள்ளியில் மாணவர் எண்ணிக்கை குறைந்துகொண்டே செல்கிறது. இருந்தாலும், ஒவ்வொரு மாணவருக்கும் உதவும் விதமாக அவர்கள் பெயரில் ஆர்.டி போட்டு வருகிறோம். அந்த வகையில், பள்ளியில் மாணவர்கள் ஒன்றாம் வகுப்பில் சேரும்போதே அவர்கள் பெயரில் ஆசிரியர்கள் அனைவரும் சேர்ந்து மாதா மாதம் ரூ.100 ஆர்.டி கட்டி வருவோம். இந்த நூறுகள், மாணவர்கள் ஐந்தாம் வகுப்பு முடிக்கும்போது ரூ.6,000 ஆக பெருகி இருக்கும். அதை அப்படியே மாணவர்களுக்கு அவர்களது மேல் படிப்புக்காக தந்துவிடுவோம். எங்கள் பள்ளிக்கான மாணவர் சேர்க்கையை அதிகரிக்க, இதை எடுத்துச் சொல்லி பெற்றோர்களிடம் பேசுகிறோம்” என்று உற்சாகமாக கூறும் கலைசெல்விக்கு சின்ன வருத்தமும் உண்டு.

“இப்போது ஆங்கில வழிக் கல்வி மோகம் பெருகிவிட்டதால், எங்கள் பள்ளிக்கு வரும் மாணவர்களின் எண்ணிக்கை குறைந்துவிட்டது. இப்போது இருக்கும் எண்ணிக்கையையே மிகவும் சிரமப்பட்டுதான் தொடர்ந்து வருகிறோம்” என்று கனத்த மனதுடன் கூறிகிறார்.

பள்ளியின் முன்னாள் தலைமை ஆசிரியர் மற்றும் இந்நாள் பள்ளி செயலாளர், தேசிய நல்லாசிரியர் சு.செல்லப்பாவிடம் ஆர்.டி பழக்கம் தொடங்கப்பட்ட கதையை நாம் கேட்க, அக்கறை வெளிப்பட்டது அவர் வார்த்தைகளில். “இங்கே ஐந்தாவது வரை படித்து முடித்த பிறகு, மேலே படிக்க பணம் இல்லாமல் படிப்பை பாதியிலேயே நிறுத்திவிடும் நிலைமை சில மாணவர்களின் குடும்பங்களில் இருக்கிறது. இதை குறைக்க மற்றும் தடுக்க, யூனிஃபார்ம், புத்தக செலவுக்காகவது ஆகட்டுமே என்று தான் ஆர்.டி போடுவதை தொடங்கினோம்” என்கிறார்.

தேசிய நல்லாசிரியர் சு.செல்லப்பா

“1967-ல் தொடங்கி 34 ஆண்டுகள் இந்தப் பள்ளியில் தலைமை ஆசிரியராகப் பணியாற்றி இருக்கிறேன். இப்போது பள்ளி செயலாளராகத் தொடர்கிறேன்.

தமிழ்நாடு அரசு கல்வித் திட்டத்தின் கீழ் அரசு உதவி பெறும் பள்ளியாகவும், தமிழ் வழிக்கல்வியை ஊக்குவிக்கும் பள்ளியாகவும் எங்கள் பள்ளி நூறு ஆண்டுகளாக இயங்கி வருகிறது. ஆனால், இப்போது ஆங்கில வழிக் கல்வி அதிகரித்துவிட்டதால் எங்கள் பள்ளியில் மாணவர்கள் அதிகம் சேர்வதில்லை” என்று இவரும் தனது வருத்தத்தை பகிர்ந்தார்.

இத்திட்டம் குறித்து மாணவர் ஒருவரின் அம்மாவிடம் பேசினோம். “என் பேரு மாரியம்மாள். என் பொண்ணு இந்த ஸ்கூல்லதான் படிச்சா. இப்போ பையனும் இங்கதான் படிக்கிறான். எங்க தாத்தா, அப்பா, நான், என் புள்ளைங்கனு நாலு தலைமுறையா இந்த ஸ்கூல்லதான் படிச்சுட்டு இருக்கோம்.

டவுண் பள்ளிக்கூடம்

இந்த ஸ்கூல்ல, பசங்களுக்கு நல்ல படிப்பு கிடைக்கணும்ங்கிற மெனக்கெடல் எப்பவும் இருக்கும். அப்படியான ஒண்ணு தான், இந்த ஆர்.டி நலத்திட்டம். என் பொண்ணு ஐந்தாவது முடிச்சப்போ ஸ்கூல்ல கொடுத்த 6,000 ரூவாயை, அவ காலேஜ் படிப்புக்கு ஆகும்னு அப்படியே வெச்சிருக்கோம். இப்போ, என் பையனுக்கும் 6000 ரூபாய் கிடைக்கப்போகுது. இந்த ஸ்கூலுக்கு நன்றியைத் தவிர வேற என்ன எங்களால சொல்ல முடியும்னு தெரியல” என்றார் நெகிழ்ச்சியுடன்.