நிலம் தொடர்பான ஆவணங்களான பட்டா, சிட்டா உள்ளிட்டவற்றை நீங்கள் எங்கிருந்தும், எப்போது வேண்டுமானாலும் பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும். இதற்கான பிரத்யேக இணையதள சேவைகளை தமிழக அரசு ஏற்படுத்தியுள்ளது.

கணினி மயமாக்கப்பட்ட அரசு சேவைகள்

முன்பெல்லாம் அரசு சேவைகளை அணுகுவது மிகவும் கடினமான ஒன்றாக இருந்தது. அரசு அலுவலகம் செல்ல வேண்டும்; விண்ணப்பம் எழுதித்தர வேண்டும். பின்னர் அவர்கள் வரச்சொல்லும் மற்றொரு நாளில் போய்ப் பார்க்க வேண்டும். அப்போதும் வேலை எளிதாக நடந்துவிடாது . ஒரு வேலைக்காக, பல நாட்கள் விடுப்பு எடுத்து அலைந்து திரிந்தாலும் வேலை ஆகாது. சில நேரங்களில் பணத்தை நீட்டினால்தான் நமக்கான கோப்பு நகரும் என்ற நிலையெல்லாம் முன்பு இருந்தது.

ஆனால், முறைகேடுகள் மற்றும் காலதாமதம் போன்றவற்றை போக்கும் வகையில், கால வளர்ச்சிக்கேற்ப அரசின் சேவைகளும் கணினி மயமாக்கப்பட்டன. இதனால், குடும்ப அட்டை மாற்றம் போன்ற அத்தியாவசிய சேவைகளை சில நிமிடங்களில் விண்ணப்பித்து, அடுத்த ஓரிரு தினங்களில் பணி முடிந்துவிடுகிறது.

இணையதளம் மூலம் இனி பட்டா மாறுதல்

பட்டா, சிட்டா பெறுவது எளிது

இந்த நிலையில், நிலம் தொடர்பான மிக முக்கிய ஆவணங்களான பட்டா, சிட்டாக்களை எங்கிருந்தும், எப்போது வேண்டுமானாலும் பதிவிறக்கும் செய்யும் வசதியை தமிழக அரசு அறிமுகம் செய்துள்ளது. பொதுமக்கள் இந்த வசதியை பயன்படுத்திக் கொள்ளுமாறு தமிழக அரசின் நில அளவை மற்றும் நிலவரித்திட்ட இயக்குனர் கேட்டுக் கொண்டுள்ளார்.

இது தொடர்பாக வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “பல்வேறு வகையான நில ஆவணங்கள் கணினிமயமாக்கப்பட்டு இணையவழியில் பராமரிக்கப்பட்டு வருகின்றன. நில உரிமைதாரர்கள் பயனடையும் வகையில் பல்வேறு இணையவழிச் சேவைகளை நிலஅளவை மற்றும் நிலவரித் திட்டத்துறை வழங்கி வருகிறது.

பட்டா மாற்றம் செய்ய வேண்டுமா?

அதன்படி, கிராமப்புறம், நகர்ப்புறம் மற்றும் நத்தம் ஆகிய பகுதிகளுக்கான பட்டா மாற்றம் மேற்கொள்ள https://tamilnilam.tn.gov.in/citizen/ என்ற இணையதளத்தில், அதில் கூறப்பட்டுள்ள வழிமுறைகளை பின்பற்றி பொதுமக்கள் விண்ணப்பம் செய்து பலனடையலாம்.

அதேபோல், நில உரிமைதாரர்கள் தங்களது புல எல்லைகளை அளந்து பார்க்க வேண்டும் என்றால் அதற்கும் விண்ணப்பிக்கலாம். புல எல்லைகளை அளந்து காட்டக்கோருவதற்கு https://tamilnilam.tn.gov.in/citizen/ என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.

கிராமப்புற மற்றும் நத்தம் நில ஆவணங்களின் பட்டா / சிட்டா, ‘அ’ பதிவேடு மற்றும் புலப்படம் ஆகியவற்றையும், நகர்ப்புற நிலஅளவைப் பதிவேட்டின் நகல், நகர நிலஅளவை வரைபடம் மற்றும் புல எல்லை வரைபடம் / அறிக்கை ஆகியவற்றையும் பதிவிறக்கம் செய்து கொள்ள, https://eservices.tn.gov.in என்ற இணையத்தை பயன்படுத்தி, கொள்ளலாம். இதன் மூலம் பட்டா மாற்றத்திற்கு அளித்த விண்ணப்பத்தின் நிலையை பயனாளி அறிந்து கொள்ளலாம்.

survey website

பொதுச்சேவை மையங்களையும் அணுகலாம்!

கிராம வரைபடங்கள் மற்றும் பழைய நிலஅளவை எண்களுக்கான புதிய நில அளவை எண்களின் ஒப்புமை விளக்கப்பட்டியல் போன்றவற்றை https://tnlandsurvey.tn.gov.in எனும் இணையதளம் வாயிலாக பொதுமக்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

இதில், முதலிரண்டு இணையவழிச் சேவைகளை அருகாமையில் இருக்கும் பொதுச்சேவை மையங்கள் மூலமாகவும் பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்” என்று செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.