தமிழ்நாடு உள்ளிட்ட பல மாநிலங்களில் அரசுப் பள்ளிகளில் மாணவர்களுக்கு மதிய உணவுத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில், சத்தீஸ்கர் மாநிலத்தின் ஒரு தொடக்கப் பள்ளியில் மாணவர்களுக்கு காய்கறிகள் எதுவும் இல்லாமல் வெறும் பருப்பு சாதம், மஞ்சப்பொடி சாதம் போன்றவை வழங்கப்பட்டு வரும் அவலம், தற்போது வெளியில் தெரியவந்திருக்கிறது.
மதிய உணவுத் திட்டத்தின் மூலம் மாணவர்களுக்குச் சத்தான உணவுகளை அளிக்கும் வகையில் அதற்கான மெனுவை மாநில கல்வித்துறை தயாரித்திருந்தாலும், அவை வெறும் காகிதத்தில் மட்டுமே இருக்கிறது என்பதை இந்த சம்பவம் வெளிப்படுத்தியிருக்கிறது. இத்தகைய சம்பவமானது, பிஜகுரா கிராமத்திலுள்ள அரசு தொடக்கப் பள்ளியில் நடந்திருக்கிறது. அங்கு பயின்று வரும் 43 மாணவர்களுக்கு கடந்த ஒருவாரமாக, காய்கறி இல்லாமல் பருப்பு சாதம், மஞ்சப்பொடி சாதம் வழங்கப்பட்டு வருவதை சம்பந்தப்பட்ட அதிகாரிகளுமே ஒப்புக்கொண்டிருக்கின்றனர்.
காய்கறி பற்றாக்குறைக்கான காரணத்தை விளக்கிய பள்ளியின் பொறுப்பு தலைமை ஆசிரியர், சப்ளையர்கள் தங்களுக்கான நிலுவைத்தொகை இன்னும் வராததால் காய்கறி உள்ளிட்ட சப்ளை நிறுத்திவிட்டதாகவும், இவர்களின் பழிபோடும் விளையாட்டில் மாணவர்கள்தான் பாதிக்கப்படுவதாகவும் தெரிவித்தார். இது குறித்து, சம்பந்தப்பட்ட பஞ்சாயத்தின் வார்டு உறுப்பினர் ராம்பிரசாத் ராம், “காய்கறி சப்ளை செய்யும் பொறுப்பிலுள்ள குழுவினரின் அலட்சியத்தால், மாணவர்களுக்குச் சரியான உணவு வழங்க முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது” என்று தெரிவித்திருக்கிறார்.
அதேபோல், பள்ளியின் சமையல்காரர் சுகியா தேவி, “சப்ளையர்களிடம் காய்கறிகளைக் கேட்டால், அவை கிடைப்பதில்லை என்று கூறுகிறார்கள். இதனால், மாணவர்களுக்கு வெறும் பருப்பு சாதமும், சில சமயங்களில் வெறும் சாதமும்தான் வழங்க முடிகிறது” என்று கூறினார். உள்ளூர் அதிகாரிகள் மற்றும் பள்ளி ஊழியர்களுமே, பொருள்கள் பற்றாக்குறையே இதற்குக் காரணம் என்று தெரிவித்திருக்கின்றனர்.
இந்த விஷயம் தற்போது வெளிவந்த நிலையில், பல்ராம்பூர் மாவட்ட கல்வி அலுவலர் தேவேந்திர நாத் மிஸ்ரா, “இதில் உடனடி விசாரணை மேற்கொள்ளப்பட்டு முறையான நடவடிக்கை எடுக்கப்படும்” என்று உறுதியளித்திருக்கிறார்.