பருவமழை எதிரொலி… சென்னையைச் சுற்றியுள்ள நீர்நிலைகளை சுத்தம் செய்ய ரூ. 30 கோடி!

வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில், அதற்கு முன்பாக சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள நீர்நிலைகளில் உள்ள ஆகாயத் தாமரைகள், பிளாஸ்டிக் கழிவுகளை அகற்ற ரூ. 30 கோடியை தமிழ்நாடு அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழைக்கான முன்னேற்பாடுகளை மாநில அரசு தொடங்கியுள்ளது. சென்னை மற்றும் அதைச் சுற்றிய பகுதிகளில் ஒவ்வொரு வருடமும் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை பணிகள் சீராக மேற்கொள்ளப்பட்டதன் விளைவாக கனமழை கொட்டிய நேரங்களிலும், வெள்ள நீர் விரைவாக வடிந்தது.

தமிழ்நாடு அரசு தலைமைச் செயலகம்

வடகிழக்கு பருவமழைக்கு முன்னதாக, நகரப்பகுதிகள் மற்றும் அதையொட்டி உள்ள புறநகர்ப்பகுதிகளில் உள்ள நீர்நிலைகளில் இருந்து, ஆகாயத்தாமரை போன்ற நீர்வாழ் தாவரங்களை அகற்றுவதற்கு ஏதுவாக, நடப்பாண்டுக்கான வருடாந்திர நடவடிக்கைகளை நீர்வளத்துறை (WRD) தொடங்கியிருக்கிறது.

அதன்படி, நீர்நிலைகளில் உள்ள குப்பைகள், மிதக்கும் பிளாஸ்டிக் பொருள்கள் மற்றும் ஆகாயத்தாமரை உள்ளிட்ட தாவரங்களை அகற்றுவதற்காக தமிழ்நாடு அரசு கிட்டத்தட்ட ரூ.35 கோடியை அனுமதித்துள்ளது. தூய்மையான நீர்நிலைகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ள மொத்தம் ரூ. 35 கோடியில், சென்னை மற்றும் அதன் சுற்றுப்பகுதி மாவட்டப் பணிகளுக்காக ரூ.30.5 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

சென்னை மற்றும் சுற்றுப்பகுதிகளில் இந்தாண்டும் ரூ.30.5 கோடியில் பருவமழை முன்னெச்சரிக்கை பணிகள் விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன்மூலம் ஆண்டின் இறுதி வரை மழை வெள்ள நீர் தொடர்ந்து தடையின்றி செல்வதை உறுதி செய்யும் என்று, நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஏறத்தாழ, 250 கி.மீ தூரம் வரையிலான பெரிய நீர்வழித்தடங்கள் மற்றும் அதன் உபரிப் பாதைகள், இதன் மூலம் சீரமைக்கப்படும். மறுசீரமைப்பு திட்டத்தின் கீழ், ஏற்கெனவே பணிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் ஓட்டேரி நீரோடை மற்றும் பக்கிங்ஹாம் கால்வாயை சுத்தம் செய்வதற்கான தனித் திட்டமும் அரசின் பரிசீலனையில் உள்ளது. இரண்டுக்கும் விரைவில் நிதி ஒதுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பருவமழை

சென்னை ஆதம்பாக்கம், கொரட்டூர், கோவிலம்பாக்கம், ஆதனூர், ஸ்ரீபெரும்புதூர் ஆகிய இடங்களில் உள்ள முக்கிய நீர்த்தேக்கங்கள் மற்றும் பல்வேறு நீர்நிலைகளில் உள்ள தாவரங்கள் மற்றும் கழிவுகள் அகற்றப்படும். கீழ்கட்டளை உபரிப்பாதை போன்ற நீர் வழித்தடங்களும் தூர்வாரப்படும்.

கூவம், கொசஸ்தலையாறு மற்றும் அடையாறு ஆகிய நீர்வழித்தடங்களில் களைகள் மற்றும் மிதக்கும் கழிவுகளை அகற்றுவதற்கு, நீர்வளத்துறை நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. இதன் மூலம், தடுப்பணைகள் அருகே உள்ள பாதிக்கப்படக்கூடிய பகுதிகளில், வெள்ளத்தின் சீற்றத்தை தணிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

சென்னையில் உள்ள நான்கு நீர்நிலைகளில் தூர்வாரும் பணிகளை செய்து முடிப்பதன் மூலம் சுமார் 1.904 டி.எம்.சி தண்ணீர் சேமிப்பு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிதி ஒதுக்கீடு பலன் தருமா? உங்கள் கருத்துகளை பகிருங்கள்…