மதுரை: `கடந்த திமுக ஆட்சியில் பட்டா கொடுத்தாங்க; ஆனா 17 வருஷமா நிலத்தை கொடுக்கலை!’ – குமுறும் மக்கள்

கடந்த தி.மு.க ஆட்சியில் ஏழை விவசாயிகளுக்கு 2 ஏக்கர் நிலம் இலவசமாக வழங்குவதாக அறிவிக்கப்பட்டு, பின்பு அத்திட்டம் முமுமையாக செயல்படுத்தப்படவில்லை என்று எதிர்க்கட்சிகளால் விமர்சிக்கப்பட்டது.

பாதிக்கப்பட்ட மக்கள்

அப்படி ஒருசிலருக்கு வழங்கப்பட்ட 2 ஏக்கர் நிலத்தை இன்றுவரை அளந்து கொடுக்கவில்லை என்று குற்றம்சாட்டி, மதுரை கலெக்டரிடம் மனு அளிக்க வந்திருந்தனர், பாதிக்கப்பட்ட மக்கள்.

கலெக்டர் அலுவலகத்துக்கு வந்த மதுரை மாவட்டம், கள்ளிக்குடி தாலுகாவிற்கு உட்பட்ட மேல உப்பிலிகுண்டு கிராம மக்களிடம் பேசினோம். “கடந்த 2007-ம் ஆண்டு திமுக ஆட்சியின்போது எங்க ஊரில் 20-க்கும் மேற்பட்ட நிலமற்றவர்களுக்கு 2 ஏக்கர் நிலம் வழங்கப்பட்டது. அதற்கான பட்டாவும் வழங்கினார்கள். ஆனால் 17 ஆண்டுகள் ஆகியும் இதுவரையிலும் பட்டாவுக்கான நிலத்தை அளந்து கொடுக்க அரசு அதிகாரிகள் மறுத்து வருகின்றனர். இது தொடர்பாக பல முறை தாலுகா அலுவலகத்திலும், கலெக்டர் அலுவலகத்திலும் புகார் அளித்தும், எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் வெறும் பட்டாவை மட்டும் வைத்துக்கொண்டு அனுபவிக்க முடியாமல் தவித்து வருகிறோம்.

புகார் மனு

அரசு அப்போது எங்களுக்கு கொடுத்த இடத்தை சொந்த பட்டா உள்ளவர்கள் ஆக்கிரமித்து அனுபவித்து வருவதாக சந்தேகம் உள்ளது. அதனால்தான் அதிகாரிகள் எங்களுக்கு நிலத்தை அளந்து தர இழுத்தடிக்கிறார்கள் என நினைக்கிறோம். முறையான இடத்திற்குத்தான் பட்டா கொடுத்தார்களா? அல்லது பட்டாவுக்கான நிலமே அங்கு இல்லையா என்று தெரியவில்லை. எனவே, உடனடியாக எங்கள் மனுவைப் பரிசீலித்து, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றனர்.

தற்போது இவர்கள் புகாரை விசாரித்து நடவடிக்கை எடுப்பதாக மாவட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.