“இந்தியாவின் மொழி பன்மைத்துவத்தை கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்ட அலுவல் மொழி விதிகளுக்கு முரணாக சிபிஎஸ்இ ஏ, பி, சி பிரிவு பணியிடங்களுக்கான நியமனத் தேர்வுகள் நடைபெற உள்ளது” என மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் குற்றம்சாட்டியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சிபிஎஸ்இ 08.03.2024 அன்று வெளியிட்டுள்ள அறிவிக்கையின்படி பிரிவு ஏ, பி, சி பணியிடங்கள் 118-க்கான நியமனத் தேர்வுகள் நடைபெற உள்ளன.
அதில் இந்தி மொழி தேர்வும் இடம் பெற்றுள்ளது. அதனால் இந்தி பேசாத மாநிலங்களை சார்ந்த தேர்வர்கள் குறைந்தபட்சம் 10 சதவிகிதம் முதற்கட்ட தேர்விலேயே இழந்து, இரண்டாம் கட்ட தேர்வுக்கு அடியெடுத்து வைக்கும் வாய்ப்பை பறி கொடுப்பார்கள்.
பிரிவு ஏ உதவிச் செயலாளர் (நிர்வாகம்) பதவிகளுக்கான முதற்கட்ட தேர்வில் மொத்த மதிப்பெண்கள் 300-ல் இந்தி மொழி தேர்வுக்கு 30 மதிப்பெண்கள். பிரிவு பி இளநிலைப் பொறியாளர் பதவிக்கு மொத்த மதிப்பெண்கள் 300-ல் இந்தி மொழி தேர்வுக்கு 15 மதிப்பெண்கள்.
பிரிவு பி இளநிலை மொழி பெயர்ப்பாளர் பதவிக்கு மொத்த மதிப்பெண்கள் 300-ல் இந்தி மற்றும் ஆங்கில மொழி தேர்வுக்கு 200 மதிப்பெண்கள்.
பிரிவு சி கணக்காளர் பதவிக்கு மொத்த மதிப்பெண்கள் 300-ல் இந்தி மற்றும் ஆங்கில மொழித் தேர்வுக்கு 40 மதிப்பெண்கள். பிரிவு சி இளநிலை கணக்காளர் பதவிக்கு மொத்த மதிப்பெண்கள் 240-ல் இந்தி மற்றும் ஆங்கில மொழியுடன் இலக்கியம் தொடர்பான தேர்வுக்கு 40 மதிப்பெண்கள்.
இது, இந்தியாவின் மொழி பன்மைத்துவத்தை கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்ட அலுவல் மொழி விதிகளுக்கு முரணானது.
இந்தி பேசாத மாநில தேர்வர்களுக்கு அநீதி இழைப்பதுடன் சம தள ஆடுகளத்தை மறுக்கிற தேர்வு முறைமையை மாற்றக்கோரி ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் அவர்களுக்கு கடிதம் எழுதி உள்ளேன்” என்று தெரிவித்துள்ளார்.