தென்கொரியாவில் ரோபோ ஒன்று தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
தென்கொரியாவில் ரோபோ ஒன்று வேலைப்பளு காரணமாக மன அழுத்தத்திற்கு உள்ளாகி தற்கொலை செய்துகொண்டிருக்கிறது. குமி நகரத்துடைய நகரச் சபை அலுவலகத்தில் ஊழியர்களுக்கு உதவுவதற்காக, இந்த ரோபோ பயன்பாட்டுக்கு வைக்கப்பட்டிருந்திருக்கிறது.
கலிபோர்னியாவில் உள்ள ரோபோடிக்ஸ் நிறுவனம் தயாரித்த இந்த ரோபோ, கடந்த 2023ம் ஆண்டு அக்டோபரில் இந்த அலுவலகத்தில் பணியமர்த்தப்பட்டிருக்கிறது. இந்த ரோபோவுக்குத் தென்கொரிய அரசு ஊழியர் என்ற ஐடி கார்டும் கொடுக்கப்பட்டிருக்கிறது. காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை வேலை நேரமாகக் கொண்ட இந்த ரோபோ, அலுவலகம் வரும் உள்ளூர்வாசிகளிடம் இருந்து தினசரி ஆவணங்களைப் பெற்று, அதிகாரிகளிடம் வழங்குவது போன்ற பணிகளைச் செய்து வந்திருக்கிறது.
இந்நிலையில், அந்த ரோபோ திடீரெனத் தற்கொலை செய்துகொண்டதாக வெளியான செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இரண்டாவது தளத்தில் இருந்து முதல் தளத்திற்கு இறங்கும் படிக்கட்டில் விழுந்து நொறுங்கி இருக்கிறது. சேதமடைந்த பாகங்கள் சேகரிக்கப்பட்டு, ஆய்வகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
தற்கொலை செய்துகொள்வதற்கு முன்பு ரோபோ, அந்த அலுவலகத்தின் இரண்டாவது தளத்தில் ஒரு குறிப்பிட்ட இடத்தைச் சுற்றிச் சுற்றி வந்ததாகவும், மிகவும் குழப்பத்துடன் காணப்பட்டதாகவும் அங்கிருந்த அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர். இந்தச் செய்தி இணையத்தில் வைரலாகி வருகிறது.