UK General Election: `வெற்றியும் பின்னடைவும் தவிர்க்க முடியாதவை ரிஷி சுனக்!’ – ராகுல் | Rishi Sunak

இங்கிலாந்தில் (Engalnd) தற்போது நடந்து முடிந்திருக்கும் பொதுத் தேர்தலில் தொழிலாளர் கட்சி (Labour Party), ஆட்சியிலிருக்கும் ரிஷி சுனக் (Rishi Sunak) தலைமையிலான கன்சர்வேட்டிவ் கட்சியை (Conservative Party) வீழ்த்தி 14 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஆட்சியைப் பிடித்திருக்கிறது. மொத்தமாக 650 இடங்களுக்கு நடத்தப்பட்ட இந்தத் தேர்தலில், ஆட்சியமைக்க 326 இடங்கள் போதும் என்ற நிலையில், 412 இடங்களில் வெற்றிபெற்றிருக்கிறது தொழிலாளர் கட்சி. கன்சர்வேட்டிவ் கட்சித் தலைவர் ரிஷி சுனக் தனது பிரதமர் பதவியை இழந்திருக்கிறார். தற்போது இங்கிலாந்தின் புதிய பிரதமராக தொழிலாளர் கட்சியின் தலைவர் கியர் ஸ்டார்மர் (Keir Starmer) பதவியேற்றிருக்கிறார்.

கியர் ஸ்டார்மர் (Keir Starmer)

இந்த நிலையில், ராகுல் காந்தி முன்னாள், இந்தாள் என இரண்டு பிரதமர்களுக்கும் கடிதம் எழுதியிருக்கிறார். புதிய பிரதமர் கியர் ஸ்டார்மர்க்கு எழுதிய கடிதத்தில், “தொழிலாளர் கட்சிக்கும் தனிப்பட்ட ரீதியிலும் உங்களின் குறிப்பிடத்தக்க தேர்தல் வெற்றிக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். சமத்துவத்துடன் கூடிய பொருளாதார வளர்ச்சி, வலுவான சமூக சேவைகள், சமூக அதிகாரம் மூலம் அனைவருக்கும் சிறந்த வாய்ப்புகள் வழங்குவது என உங்கள் பிரசாரத்தின் முக்கியத்துவம் தெளிவாகத் தெரிந்தது.

இங்கிலாந்து மக்கள், பிரகாசமான எதிர்காலத்திற்கான அவர்களின் கனவுகளை உங்களை தேர்வு செய்ததன் மூலம் பிரதிபலிக்கின்றனர். இந்த லட்சியங்களுக்காக அர்ப்பணிப்புள்ள ஒருவர் என்ற முறையில், இங்கிலாந்து மக்களையும் வென்றதற்காக உங்களையும் வாழ்த்துகிறேன். உங்கள் வெற்றி மக்களை முதன்மைப்படுத்தும் அரசியலின் சக்திக்கு ஒரு சான்றாகும். மேலும் இந்தியா, இங்கிலாந்து இருதரப்பு உறவை தொடர்ந்து வலுப்படுத்துவதையும் எதிர்பார்க்கிறேன். உங்கள் பதவிக்காலம் சிறப்பாக அமைய எனது வாழ்த்துகள், எதிர்காலத்தில் உங்களை சந்திக்க ஆவலுடன் இருக்கிறேன்” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

ரிஷி சுனக்

இங்கிலாந்தின் கன்சர்வேட்டிவ் கட்சித் தலைவர் ரிஷி சுனக்கிற்கு எழுதியிருக்கும் மற்றொரு கடிதத்தில், “சமீபத்திய தேர்தல் முடிவுகள் குறித்து எனது கருத்துகளை நீட்டிக்க விரும்புகிறேன். வெற்றிகள் மற்றும் பின்னடைவுகள் இரண்டும் ஜனநாயகத்தில் பயணத்தின் தவிர்க்க முடியாத பகுதியாகும். இரண்டையும் நாம் நமது முன்னேற்றத்துக்காக எடுத்துக்கொள்ள வேண்டும். மக்கள் சேவையில் உங்கள் அர்ப்பணிப்பு பாராட்டுக்குரியது.

உங்கள் பதவிக் காலத்தில் இந்தியாவிற்கும் இங்கிலாந்துக்கும் இடையிலான உறவுகளை வலுப்படுத்த நீங்கள் மேற்கொண்ட முயற்சிகளையும் நான் மிகவும் மதிக்கிறேன். உங்கள் அனுபவத்துடன் பொது வாழ்வில் தொடர்ந்து பங்களிப்பீர்கள் என நம்புகிறேன். உங்கள் எதிர்கால முயற்சிகளுக்கு நல்வாழ்த்துக்கள்” எனத் தெரிவித்திருக்கிறார்.