கல்விக்கு செய்யும் உதவி மற்ற அனைத்தையும் விட மேலானது என்ற கூற்றை நிரூபித்திருக்கிறார் திருப்பூர் மாவட்டம் படியூர் ஊராட்சி மன்றத் தலைவரான ஜீவிதா சண்முகசுந்தரம்.
படியூரில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளி மற்றும் அரசு தொடக்கப் பள்ளி இயங்கி பள்ளிகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர்.
படியூர், ரோஸ் கார்டன், ஓட்டப்பாளையம், சிவகிரிபுதூர், பழனியப்பா நகர், காந்தி நகர், இந்திரா நகர், கோவில்மேடு பகுதிகளில் இருந்து பள்ளி வழியே ஒரு அரசுப் பேருந்து மட்டுமே இயக்கப்பட்டு வருகிறது. இதனால், சுற்றுவட்டாரத்தில் உள்ள கிராமங்களில் இருந்து தினந்தோறும் மாணவ மாணவிகள் தங்கள் பெற்றோர்கள் உதவியுடனும், சிலர் நடந்தும், சைக்கிள் மூலமாகவும் பள்ளிக்கு வந்து செல்கின்றனர். பெரும்பாலும் கிராமப்புறங்களில் இருந்து வரும் மாணவிகள் மாலை வேலைகளில் தனியாக கிராமப் பகுதிகளுக்குச் செல்ல வேண்டிய சூழல் இருந்தது.
இந்த பள்ளி வழியாக ஒரே ஒரு அரசு பேருந்து மட்டுமே இயக்கப்படும் நிலையில், குறித்த நேரத்திற்கு பள்ளிக்கு வருவதும், வீட்டுக்குச் செல்வதும் இயலாமல் மாணவ மாணவிகள் தவித்து வந்தனர். கூடுதல் பேருந்து கோரி தொடர் மனுக்கள் அளிக்கப்பட்டு வந்த நிலையில், படியூர் ஊராட்சி மன்றத் தலைவர் ஜீவிதா சண்முகசுந்தரம் தனது சொந்த நிதியில் இருந்து ரூ.16 லட்சம் செலவில் பேருந்து ஒன்றை பள்ளிக்கென வழங்கி இருக்கிறார்.
இதுதொடர்பாக படியூர் ஊராட்சி மன்றத் தலைவர் ஜீவிதா சண்முகசுந்தரம் பேசுகையில், “படியூரில் உள்ள மேல்நிலை மற்றும் தொடக்கப் பள்ளிகளுக்கு பெரும்பாலும் கிராமப்புறங்களில் உள்ள ஏழ்மையான குடும்பப் பின்னணி கொண்ட மாணவ, மாணவிகள்தான் வருகின்றனர். காலை மற்றும் மாலை வேளையில் இயக்கப்படும் ஒரே ஒரு அரசுப் பேருந்தில் அதிக அளவிலான மாணவ, மாணவிகள் செல்வது பெரும் சிரமமாக இருந்தது.
இருசக்கர வாகனம் வைத்திருக்கும் பெற்றோர் தங்கள் குழந்தைகளை வாகனத்தில் கொண்டு வந்து விடுகின்றனர்.பெரும்பாலான குழந்தைகள் நடந்துதான் பள்ளிக்கு வருகின்றனர். கிராமப்புறம் என்பதால் மாலை வேளைகளில் சிறப்பு வகுப்புகளை முடித்துவிட்டு மாணவிகள் வீட்டுக்குத் தனியாகச் சில சிக்கல்கள் இருந்தன. எந்த விதத்தில் மாணவ, மாணவிகளின் கல்வி பாதிப்படையக் கூடாது என்பதில் நான் உறுதியாக இருந்தேன். இதற்காக எனது சொந்த சேமிப்பில் இருந்து ரூ.16 லட்சம் செலவு செய்து பள்ளிக்காக பேருந்து ஒன்றை வாங்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் மாணவ, மாணவிகள் பள்ளிக்கு எளிதாக வந்து செல்ல முடியும். கிராமப்புறங்களில் இருந்து பள்ளிக்கு படிக்க வரும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளது. குறித்த நேரத்திற்கு பள்ளிக்கு வர முடியும் என்பதால் அவர்களுடைய கல்வியும் பாதிப்படையாது. பள்ளித் தலைமை ஆசிரியரின் பெயரில் வாகனம் பதிவு செய்யப்பட்டுள்ளது. காலை மற்றும் மாலை என இரு வேளைகளிலும் பேருந்து 14 கி.மீ. தூரம் இயக்கப்படுகிறது.
இந்தப் பேருந்தில், ஜிபிஎஸ், கேமரா, வேகக் கட்டுப்பாட்டுக் கருவி என பள்ளி வாகனங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள அனைத்து விதிமுறைகளும் முறையாக பின்பற்றப்பட்டுள்ளது.பேருந்தின் ஓட்டுநர் மற்றும் மாணவர்களை ஏற்றி இறக்க உதவியாளர், எரிபொருள் என அனைத்து பராமரிப்பையும் நானே ஏற்றுள்ளேன்” என்றார் பெருமிதத்துடன்.