`ஆம்ஸ்ட்ராங் கொலையில் யாரும் சரணடையவில்லை; போலீஸார்தான் கைதுசெய்தனர்.!’ – காவல் ஆணையர்

பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் நேற்று மாலை பெரம்பூரில் அவரது வீட்டருகே மர்ம நபர்கள் ஆறு பேரால் கொலைசெய்யப்பட்டார். இந்த சம்பவம் சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், எதிர்க்கட்சிகள் பலவும் தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுவிட்டதாக விமர்சித்து வருகின்றன. இந்த நிலையில், ஆம்ஸ்ட்ராங் படுகொலை தொடர்பாக சென்னை காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார்.

ஆம்ஸ்ட்ராங்

அப்போது, கொலை மற்றும் இதில் மேற்கொள்ளப்பட்டுவரும் நடவடிக்கைகள் குறித்து விளக்கமளித்த சந்தீப் ராய் ரத்தோர், “நேற்று மாலை ஏழு மணியளவில், பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங்கை (52) அடையாளம் தெரியாத சிலர் கத்தியால் அவரின் வீட்டின் முன்பு தாக்கினர். தகவலறிந்த போலீஸார் உடனடியாக சம்பவ இடத்துக்கு வந்து அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர், அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். அதைத்தொடர்ந்து, இறந்தவரின் சகோதரர் வீரமணியின் புகாரின் பேரில் செம்பியன் காவல் நிலையத்தில் கொலை வழக்கு பதிவுசெய்யப்பட்டது.

கொலைக்கான காரணத்தை கண்டறியவும், குற்றவாளிகளைக் கைதுசெய்யவும் கூடுதல் ஆணையர் (வடக்கு) தலைமையில் 10 சிறப்புப் படை அமைக்கப்பட்டது. இந்தக் குழு, அடுத்த மூன்று மணிநேரத்துக்குள் பாலு (ஆற்காடு சுரேஷ் தம்பி), திருமலை, மணிவண்ணன், திருவேங்கடம், ராமு, சந்தோஷ், அருள், செல்வராஜ் ஆகிய 8 பேரை பிடித்து விசாரணை மேற்கொண்டது. இதில், அருள் தவிர மற்றவர்கள் மீது ஏற்கெனவே சில வழக்குகள் இருக்கிறது. இவர்கள் யாரும் தாமாக சரணடையவில்லை, போலீஸார்தான் கைதுசெய்தனர்.

சென்னை காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர்

விசாரணையில், இந்த 8 சந்தேக நபர்களும் குற்றவாளிகள் என உறுதிசெய்யப்பட்டு, கைதுசெய்யப்பட்டு மேலும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குறிப்பாக, இதில் வேறு யாரெல்லாம் ஈடுபட்டிருக்கிறார்கள், என்ன சதி இருக்கிறது, கத்தி தவிர வேறு எந்த ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டிருக்கிறது என்பதெல்லாம் விசாரிக்கப்படுகிறது.

இந்த சம்பவத்தில் அரசியல் உள்நோக்கம் எதுவும் இல்லை. அவர் அரசியலுக்கு வந்த ஆரம்ப காலத்தில், சில அரசியல் பிரச்னைகள் இருந்தது. சில சமயங்களில் வேற குரூப் பிரச்னைகளும் இருந்தது. அந்த கண்ணோட்டத்தில் விசாரித்துவருகிறோம். இருப்பினும், அரசியல் உள்நோக்கம் இருப்பதற்கான வாய்ப்பு மிகவும் குறைவு. முழு விசாரணை முடிந்த பிறகே அது என்னெவென்று கூற முடியும்.

ஆம்ஸ்ட்ராங் – கைதுசெய்யப்பட்ட நபர்கள்

ஆம்ஸ்ட்ராங்குக்கு நேரடி அச்சுறுத்தல் இருப்பதாக எந்தத் தகவலும் எங்களுக்கு வரவில்லை. கைதுசெய்யப்பட்டவர்கள் யாரும் தென் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் அல்ல. மார்ச்சில் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தபோது தன்னுடைய துப்பாக்கியை போலீஸில் ஒப்படைத்தார். பின்னர், ஜூன் 13-ம் தேதி துப்பாக்கி அவரிடம் ஒப்படைக்கப்பட்டது. அவரிடம் முறையான துப்பாக்கி உரிமம் இருக்கிறது. 31.12.2027 வரைக்கும் அந்த உரிமம் புதுப்பிக்கப்பட்டிருக்கிறது. ஆம்ஸ்ட்ராங் மேல் 7 வழக்குகள் இருந்தது. அந்த ஏழிலும், அவர் விடுவிக்கப்பட்டு முடிக்கப்பட்டுவிட்டது” என்று தெரிவித்தார்.