நெல்லை, கோவை மேயர்கள் ராஜினாமா – உள்ளரசியல் பின்னணியும் அடுத்த நகர்வும்!

சர்ச்சையில் சிக்கிய நெல்லை மேயர்!

மேயர் தேர்தல் முடிந்ததிலிருந்தே திமுக தலைமைக்குத் தொடர் தலைவலியாக இருந்தது நெல்லை மாநகராட்சிதான். என்ன நடந்தது நெல்லை மாநகராட்சியில் என்று நெல்லை திமுக வட்டாரத்தில் விசாரித்தோம். “நெல்லை மாநகராட்சியில் உள்ள 55 வார்டுகளில் திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் சேர்ந்து 51 இடங்களைக் கைப்பற்றியது. பெரும்பான்மையான இடங்களை திமுக பிடித்த நிலையில் மேயர் பதவிக்கு பெரும் ரேஸ் நடந்தது. இறுதியில் அன்றைய நெல்லை மத்திய மாவட்டச் செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான அப்துல் வஹாப் ஆதரவாளரான பி.எம்.சரவணன் என்பவர் மேயராக அறிவிக்கப்பட்டார். தன்னுடைய ஆதரவாளர் மேயராக இருக்கவேண்டும் என்று நினைத்த வஹாப்க்கும் மேயருக்கும் ஒருகட்டத்தில் மோதல் போக்கு ஆரம்பித்தது. ஒரு கட்டத்தில் வஹாபுக்கு எதிராகவே செயல்படத் தொடங்கிவிட்டார் மேயர்.

மேயர் சரவணன், அப்துல் வஹாப்

இருவருக்குமிடையே பிரச்னை அதிகரிக்க, கடைசியில் வஹாப்பின் மாவட்டச் செயலாளர் பதவியும் பறிக்கப்பட்டது. இந்த சூழலில் மேயருக்கும், கவுன்சிலர்களுக்கு இடையே பிரச்னை பெரிதாக வெடிக்க ஆரம்பித்தது. மேயர் எங்களை மதிப்பதில்லை. ஆளும்கட்சி கவுன்சிலர்கள் எந்த கோரிக்கை வைத்தாலும் எதையுமே செய்து கொடுப்பதில்லை. அவருக்கென்று ஒரு கவுன்சிலர்கள் கூட்டத்தை உருவாக்கிக்கொண்டு தனியாக செயல்படுகிறார் என்று அறிவாலயத்துக்குப் புகார் கடிதம் பறந்தது. ஒருகட்டத்தில் மோதல் அதிகரிக்கவே மாமன்ற கூட்டத்திலேயே மேயரை விமர்சித்து சொந்த கட்சி கவுன்சிலர்களே பேசத் தொடங்கினர். அதேபோல, நெல்லை மாநகராட்சியில் ஊழல் அதிகமாக நடக்கிறது லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை வேண்டும் என்று கேட்கும் நிலைக்குச் சென்றுவிட்டது.

ஒருகட்டத்தில் 40 திமுக கவுன்சிலர்கள் மேயரை மாற்றவேண்டும் என்று கே.என்.நேருவைச் சந்தித்து புகார் கடிதமும் கொடுத்தார்கள். அப்போது பேசி சமரசம் செய்துவைத்தார் நேரு. இருந்தபோதிலும் சிக்கல் தீர்ந்தபாடில்லை. மீண்டும், 35 திமுக கவுன்சிலர்கள் அமைச்சர் நேருவைச் சந்தித்து மேயர் சரவணனை மாற்றியே ஆகவேண்டும் என்று கோரிக்கை வைத்தார்கள். அப்போதும் அமைச்சர் அவர்களை சமாதானம் செய்து அனுப்பிவைத்தார். இருந்தபோதிலும் கடந்த டிசம்பர் மாதம் கவுன்சிலர்கள் மேயர் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானத்தைக் கொண்டுவந்தனர். கடைசியாக அமைச்சர் நேரு, தொகுதி பொறுப்பு அமைச்சர் தங்கம் தென்னரசு போன்ற மூத்த அமைச்சர்கள் திமுக கவுன்சிலர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதனைத் தொடர்ந்து நடக்கவிருந்த நம்பிக்கையில்லாத் தீர்மானத்தில் கவுன்சிலர்கள் யாரும் கொள்ளவில்லை. யாரும் வராத காரணத்தினால் தீர்மானம் தோல்வியடைந்தது.

மேயர் கவுன்சிலர் பிரச்னை

நாடாளுமன்றத் தேர்தல் நடந்து முடிந்திருக்கும் நிலையில் தற்போது மீண்டும் நெல்லையில் சர்ச்சை வெடித்திருக்கிறது. மேயரை கட்சித் தலைமை கவுன்சிலர்களுடன் ஒத்துப்போகும்படி பலமுறை எச்சரித்தது. இருந்தபோதிலும் மோதல் போக்கு முடிவுக்கு வரவேயில்லை. கடந்தமாதம் நடந்த மாமன்ற கூட்டத்தில் பத்து கவுன்சிலர்கள் கூட கலந்துகொள்ளவில்லை. இந்நிலையில், சரவணனைச் சென்னைக்கு அழைத்த தலைமை அவரை கடுமையாகக் கண்டித்ததாகக் கூறப்படுகிறது. தொடர்ந்து சொந்த காரணங்களுக்காகத் தனது மேயர் பதவியை ராஜினாமா செய்திருப்பதாக காரணம் சொல்லியிருக்கிறார் சரவணன். மேயர் பதவி காலியாகியுள்ள நிலையில் நெல்லையின் புதிய மேயர் பதவிக்கான ரேஸ் ஆரம்பித்துவிட்டது. வஹாப் தனது ஆதரவாளரை மேயராகவேண்டும் என்று தற்போதிலிருந்தே தீவிரமாகக் காய்நகர்த்தி வருகிறார்.

தொடர் பஞ்சாயத்தில் சிக்கிய கோவை மேயர்!

உடல்நலம் மற்றும் சொந்த காரணத்துக்காகக் கோவை மேயர் கல்பனா பதவி விலகியிருக்கிறார் என்கிறார்கள். உண்மையில் மேயர் ராஜினாமா செய்ததற்கு பல்வேறு காரணங்கள் இருப்பதாகச் சொல்கிறது கோவை திமுக வட்டாரம். இதுகுறித்து கோவை திமுக நிர்வாகிகள் சிலரிடம் பேசினோம். “நெல்லைக்கு அடுத்தபடியாக தொடர் பஞ்சாயத்தில் சிக்கியது கோவை மேயர்தான். நடந்து முடிந்த தேர்தலில் 100 வார்டுகளில் 96 இடங்களில் கைப்பற்றியது திமுக கூட்டணி. கடந்த ஐந்து முறையும் திமுக கோவை மேயர் பதவியைப் பிடித்ததே இல்லை. முதல்முறை மேயராகப்போகும் திமுக உறுப்பினர் என்பதால் கோவையில் பெரும் போட்டியே நிலவியது. மூத்த பல திமுக உறுப்பினர்களும் மேயர், துணை மேயர் பதவியைப் பிடிக்க மூட்டி மோதினார்கள்.

கல்பனா

அவ்வளவு பெரிய ரேஸ் நடந்ததில் செந்தில் பாலாஜியின் ஆதரவாளரான கல்பனா என்பவருக்கு மேயர் வாய்ப்பு வழங்கப்பட்டது. மேயர் பதவிக்கு முயற்சி செய்த மூத்த நிர்வாகிகள் பலருக்கும் மண்டலக்குழு தலைவர், நிலைக்குழுத் தலைவர்கள் பதவிகளும் வழங்கப்பட்டன. ஆரம்பம் முதலே கவுன்சிலர்களுக்கும் மேயருக்கும் மோதல் போக்குதான் நிலவிக்கொண்டிருந்தது. அதேசமயத்தில் மேயர் இல்லத்தை ஒரு கோடி ரூபாயில் புனரமைத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அதேபோல, மேயரின் தாயாரின் வீட்டுக்கு அருகில் இருப்பவருக்குத் தொல்லை கொடுப்பதாகவும், மிரட்டுவதாகவும் மேயர் மீது குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன.

கோவை பொறுப்பு அமைச்சரான செந்தில் பாலாஜி இருக்கும்வரை கல்பனாவுக்குப் பெரியளவில் சிக்கல் எதுவுமில்லை. செந்தில் பாலாஜி சிறைக்குச் சென்றபிறகு கல்பனாவின் செல்வாக்கு மெல்ல மெல்லக் குறையத் தொடங்கியது. அதேபோல அவரை சுற்றி பஞ்சாயத்தும் சர்ரென அதிகரிக்க ஆரம்பித்தது. செந்தில் பாலாஜியின் தீவிர ஆதரவாளரான மேயர், துறை அமைச்சர் கே.என்.நேருக்குத் தகுந்த முக்கியத்துவம் கொடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டும் இருந்தது. மாநகராட்சியில் வரும் டெண்டர்கள் தொடங்கி அனைத்திலும் மேயரின் தலையீடு அதிகமாக இருப்பதாகக் குற்றச்சாட்டுகள் அதிகரிக்கத் தொடங்கின. ஒரு கட்டத்தில் மாமன்ற கூட்டத்திலேயே மேயருக்கு எதிராக ஆளும்கட்சி கவுன்சிலர்கள் பேச ஆரம்பித்தார்கள். மேயர் உள்நோக்கத்துடன் கோப்புகளில் கையெழுத்துப் போடாமல் இருக்கிறார் என்று கோவை மத்திய மண்டல தலைவர் மீனா லோகு மாமன்றத்திலேயே புகார் தெரிவித்தார்.

செந்தில் பாலாஜியுடன் கல்பனா

அனைத்து சர்ச்சைகளையும் தாண்டி, நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் மேயரின் செயல்பாடு மிகவும் மோசமாக இருந்ததாகக் கூறப்பட்டது. கோவை நகரில் பல இடங்களில் திமுகவை விட பாஜக அதிக வாக்குகள் வாங்கியிருந்தது. குறிப்பாக மேயரின் சொந்த வார்டிலேயே திமுகவை விட பாஜக அதிக வாக்குகள் பெற்றிருந்தன. இதே நிலை நீடித்தால் வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் சிக்கல் ஏற்படும் என்று ரிப்போர்ட் தலைமைக்குப் பறந்தது. மாநகராட்சியை வலுப்படுத்த மேயரை மாற்றவேண்டும் என்று முடிவுக்கும் வந்ததையடுத்தே அவரை ராஜினாமா செய்யச் சொல்லியிருக்கிறது திமுக தலைமை. இதுவொருபக்கம் இருக்க காலியாக உள்ள மேயர் பதவியைப் பிடிக்க இளஞ்செல்வி, மீனா தொடங்கி மாலதி, தெய்வானை உட்பட இன்னும் பலரும் தீவிரமாகக் காய்நகர்த்தி வருகிறார்கள்” என்றார்கள் விரிவாக.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88