வைகை அணையிலிருந்து 120 நாள்களுக்கு தண்ணீர் திறப்பு; மகிழ்ச்சியில் விவசாயிகள்!

தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே 71 அடி உயரத்தில் வைகை அணை அமைந்துள்ளது. இந்த அணை தேனி, மதுரை, திண்டுக்கல் சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களின் நீராதாரமாக இருந்து வருகிறது. கேரளாவில் பெய்து வரும் தென்மேற்குப் பருவமழையால் முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் உயரத்தொடங்கியது. இதைத் தொடர்ந்து முல்லைபெரியாறு அணையிலிருந்து தமிழகத்திற்குத் திறக்கப்படும் நீரின் அளவும் அதிகரிக்கப்பட்டது.

வைகை அணை

முல்லைப் பெரியாறு அணையிலிருந்து திறந்துவிடப்படும் நீரால், வைகை அணையின் நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்து 50 அடியை கடந்தது. இதன்காரணமாக வைகை அணையிலிருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். அதனடிப்படையில் பெரியாறு பிரதான கால்வாயின் கீழ் உள்ள இரு போக பாசன நிலங்களின் முதல் போக சாகுபடிக்காக நேற்று முதல் 120 நாள்களுக்கு நீரிருப்பைப் பொறுத்து 6,739 மில்லியன் கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது.

அதன்படி முதல் 45 நாள்களுக்கு விநாடிக்கு 900 கன அடி நீரும், அதற்கடுத்த 75 நாள்களுக்கு முறை வைத்தும் தண்ணீர் திறக்க திட்டமிட்டுள்ளது. தேனி மாவட்ட கலெக்டர் ஷஜீவனா, திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் பூங்கொடி, மதுரை மாவட்ட கலெக்டர் சங்கீதா ஆகிய 3 பெண் கலெக்டர்கள் வைகை அணையிலிருந்து முதல் போக பாசனத்திற்கான தண்ணீரை திறந்து வைத்தனர்.

மாவட்ட கலெக்டர்கள்

இதன் மூலம் திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை, மதுரை வடக்கு மற்றும் வாடிப்பட்டி ஆகிய தாலுகாக்களில் பேரணை முதல் கள்ளந்திரி வரையிலான 45,041 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும். இந்நிகழ்வில் விவசாய சங்கப் பிரதிநிதிகள், உள்ளூர் மக்கள் கலந்து கொண்டு மகிழ்ச்சியடைந்தனர். நேற்றைய நிலவரப்படி வைகை அணையின் நீர்மட்டம் 51.71 அடியாகவும், நீரிருப்பு 2,223 மில்லியன் கன அடியாகவும் இருக்கிறது. நீர்வரத்து 706 கன அடியாக உள்ள நிலையில் குடிநீர் மற்றும் பாசனத்திற்காக 969 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.