1994-ம் ஆண்டிலிருந்து 2004 வரை ஒளிபரப்பான Friends சீரிஸ் உலகளவில் மிகப் பிரபலம். 10 சீசன்களாக மொத்தம் 236 எபிசோட்கள் ஒளிபரப்பப்பட்டுள்ளது. இந்த சீரிஸில் உள்ள கதாபாத்திரங்களில் பெரும்பான்மையான ரசிகர்களால் விரும்பப்பட்ட கதாபாத்திரம், சாண்ட்லர் பிங். இந்த கதாபாத்திரத்தில் நடித்தவர் நடிகர் மேத்யூ பெர்ரி. இவர் லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள தனது வீட்டில் உள்ள குளியல் அறையில், 2023-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 28-ம் தேதி தொட்டியில் மூழ்கி இறந்த நிலையில் மீட்கப்பட்டார். அப்போது அவருக்கு வயது 54.
இது தொடர்பாக காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் மேத்யூவ் பெர்ரியின் சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், மேத்யூ பெர்ரி கொலை செய்யப்பட்டாரா, இயற்கையான மரணமா எனவும் பல கோணங்களில் விசாரித்து வந்தது. இதற்கிடையில், பிரேத பரிசோதனை அறிக்கையில் மேத்யூ பெர்ரி மன அழுத்தத்திற்காக கேட்டமைன் சிகிச்சை எடுத்துக்கொண்டது தெரியவந்தது.
இது தொடர்பான விசாரணையில், மன அழுத்ததுக்கு வழக்கமாக எடுக்கும் மருந்தளவைவிட அதிகமான மருந்து அவரின் உடலில் இருந்தது. அது வேறொரு மூலத்திலிருந்து எடுத்திருக்க வேண்டும் என சந்தேகித்தனர். இதற்கிடையில், லாஸ் ஏஞ்ஜெல்ஸில், நடிகை புரோக் முல்லரை (Brooke Mueller) விசாரணை வளையத்துக்குள் காவல்துறையினர் கொண்டுவந்தனர். அவரிடமிருந்து ஒரு ஐபோன், லேப்டாப் ஆகியவற்றைக் கைப்பற்றினர். அவரிடம் விசாரிப்பட்டு வருகிறது. ஆனால், அவர் விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை என அதிகாரிகள் குறிப்பிடுகிறார்கள். அதே நேரம், புரோக் முல்லர், “நான் எதற்காக விசாரிக்கப்படுகிறேன் என்பதே தெரியவில்லை. எனக்கும், மேத்யூ பெர்ரியின் மரணத்துக்கும் எந்த தொடர்பும் இல்லை” எனத் தெரிவித்திருக்கிறார்.
இதற்கிடையில், மேத்யூ பெர்ரியின் கொலை வழக்கில், அவருடைய பிரபல நண்பர் ஒருவர் சிக்கியிருப்பதாக டச் அவுட்லெட் செய்தி நிறுவனம் தெரிவித்திருக்கிறது. மேத்யூ பெர்ரியின் கொலை வழக்கில் இரண்டாவது பிரபலம் சிக்கியிருப்பது பேசுபொருளாகியிருக்கிறது. இந்த வழக்கில் சிக்கியிருக்கும் இரண்டாவது நபரும், மேத்யூ பெர்ரியும் அவர்களின் வாழ்க்கைப் பற்றியும், போதைப்பொருள் குறித்தும் பேசிக்கொள்ளும் குறுஞ்செய்திகள் குறித்த ஆதாரங்கள் கிடைத்திருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. ஆனால், அந்த இரண்டாம் நபர் குறித்த தகவல்கள் இன்னும் வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.