மும்பையில் வரும் 12ம் தேதி தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் தனது மகன் ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சண்டிற்கு பிரமாண்டமான முறையில் திருமணம் நடைபெறவுள்ளது.
ஏற்கெனவே கடந்த மார்ச் இறுதியில் குஜராத் மாநிலம் ஜாம்நகரில் பிரமாண்டமான முறையில் திருமணத்திற்கு முந்தைய விருந்து விழா நடந்தது. அதில் உலகத் தலைவர்கள் அனைவரையும் முகேஷ் அம்பானி வரவழைத்தார். அதன் பிறகு மணமகன் ஆனந்த் அம்பானி சொகுசு கப்பலில் தனது நண்பர்களுக்கு விருந்து கொடுத்துக் கௌரவித்திருந்தார்.
இந்நிலையில் ஜூலை 12ம் தேதி மும்பையில் இருக்கும் ‘Jio World Convention Centre’ல் நடைபெறவிருக்கும் திருமணத்திற்காகச் சடங்குகள் ஏற்கெனவே தொடங்கி நடந்து வருகின்றன. அதன் ஒரு பகுதியாகக் கடந்த ஜூலை 2ம் தேதி ஏழை பழங்குடியினச் சமுதாயத்தைச் சேர்ந்த 50 ஏழை ஜோடிகளுக்கு இலவச திருமணம் செய்து வைக்கப்பட்டது.
கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற திருமணத்திற்கு முந்தைய விருந்து நிகழ்ச்சியில் பிரபல பாடகர் ரிஹானா வரவழைக்கப்பட்டிருந்தார். தற்போது, நடைபெறவிருக்கம் இத்திருமண விழாவிற்குப் பிரபல பாப் பாடகர் ஜஸ்டின் பீபர் வரவழைக்கப்பட்டிருக்கிறார்.
வரும் ஜூலை 5ம் தேதியான நாளை சங்கீத் நிகழ்ச்சி ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. அம்பானி வீட்டு உறவினர்கள், நெருங்கிய நண்பர்கள் கலந்து கொள்ளும் இந்நிகழ்வில் ஜஸ்டின் பீபர் பாடல் கச்சேரி நடைபெறவிருக்கிறது. இதற்காக இன்று காலையே ஜஸ்டின் பீபர் அம்பானியின் மும்பை வீட்டிற்கு வந்திருக்கிறார். இதுதொடர்பான புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்த நிகழ்ச்சியில் பாடுவதற்காக அவருக்கு 83 கோடி ரூபாய் (10 மில்லியன் டாலர்) சம்பளமாக வழங்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் கசிந்து வருகின்றன.