குரு சேவக் சிங், லக்னோ பகுதியைச் சேர்ந்தவர். இவர் தனது மனைவியோடு சேர்ந்து சட்டவிரோதமாக அமெரிக்காவிற்குச் செல்ல முயற்சி செய்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த ஜூன் 18 ஆம் தேதி மாலை 5:20 மணியளவில், டெல்லி விமான நிலையத்தில் போலி ஆவணங்களுடன் நுழைந்தார். அதன்படி ரஷ்விந்தர் சிங் சஹோ என்ற பெயரோடு, 67 வயது முதியவரைப் போன்று வேடமணிந்துள்ளார். அவர் பிப்ரவரி 2, 1957-ல் பஞ்சாபின் ஜலந்தர் பகுதியில் பிறந்தார் என்றும் அவர் வைத்திருந்த பாஸ்போர்ட்டில் குறிப்பிடப்பட்டிருந்தது . அந்த பாஸ்போர்ட்டிற்கு 438851 என்ற எண்ணும் குறிப்பிடப்பட்டிருந்தது. 

இந்நிலையில் அவருடைய உடை மற்றும் தோற்றத்தைப் பார்த்த மத்திய தொழில்துறை பாதுகாப்புப் படையினருக்கு (CISF) சந்தேகம் ஏற்படவே இருவரிடமும் சோதனை மேற்கொண்டனர். அப்போது குரு சேவக் தனது தலைமுடி மற்றும் தாடிக்கு வெள்ளை நிற சாயம் பூசி, வயதானவர் போல் கண்ணாடி அணிந்திருப்பது தெரியவந்தது. அவருடைய மொபைல் போனில் மற்றொரு பாஸ்போர்ட்டின் படங்கள் இருந்ததை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். அதில்  V4770942 என்ற எண்ணுடன், குரு சேவக் சிங் என்ற பெயரும், பிறந்த தேதி ஜூன் 10, 2000 எனவும் இருந்துள்ளது. இதன் மூலம் பயணியின் உண்மையான அடையாளத்தை பாதுகாப்பு படையினர் கண்டறிந்தனர். அதன் பின்னர் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், குரு சேவக், தானும் அவரது மனைவியும் ஜக்கி என்ற பயண முகவரின் உதவியை நாடியதாக தெரிவித்தனர். அமெரிக்காவை அடையும் ஆசையில் இருந்த குரு சேவக், இந்த சட்ட விரோத பயணத்திற்காக ஜக்கிக்கு ரூ.60 லட்சம் கொடுக்க ஒப்புக்கொண்டுள்ளார்.  

ஜக்கியின் திட்டத்தின்படி தம்பதியரை கனடாவிற்கு விமானத்தில் ஏற்றி, அங்கிருந்து அவர்கள் அமெரிக்காவிற்குள் நுழைய, சட்டவிரோதமாக குடியேறியவர்கள் பயன்படுத்தும் ரகசிய பாதையான “டாங்கி ரூட்”-ஐ பயன்படுத்த திட்டமிடப்பட்டது. குரு சேவக் ஏற்கனவே ஜக்கிக்கு முன்பணமாக ரூ.30 லட்சத்தை செலுத்தியுள்ளார். ஜக்கி போலி பாஸ்போர்ட் மற்றும் தேவையான விசாக்களை ஏற்பாடு செய்து, தம்பதிகளுக்கு போலியாக சித்திரிக்கப்பட்ட அடையாளங்களை வழங்கியுள்ளார்.

கைது

கைது நடவடிக்கைகளுக்காக, குரு சேவாக் மற்றும் அவரது மனைவியை சி.ஐ.எஸ்.எஃப் டெல்லி காவல்துறையிடம் ஒப்படைத்துள்ளது. போலி கடவுச்சீட்டுகளை வைத்திருந்தது மற்றும் சட்டவிரோதமான முறையில் வெளிநாடு செல்ல முயற்சித்த குற்றச்சாட்டின் பேரில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் ஜக்கி இதற்கு முன்னர் எத்தனை பேரை சட்டவிரோதமாக அனுப்பி வைத்திருக்கிறார் என்பதை அறிய அதிகாரிகள் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.