கும்மிடிப்பூண்டி இளைஞர் தீக்குளிப்பு விவகாரம்; ராமதாஸ், அண்ணாமலை தமிழக அரசுக்குக் கண்டனம்!

திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி கோட்டக்கரை நேதாஜி நகரில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி வருவாய்துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டிருந்தனர். நடவடிக்கைக்கு முன்பே ஆக்கிரமிப்பு இடத்தில் வசித்தவர்களுக்கு நோட்டீஸ் கொடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், அந்தப் பகுதியில் வசித்து வந்த ராஜ்குமார் என்பவர் தன் வீடு பட்டா நிலத்தில் இருப்பதாக தெரிவித்திருக்கிறார். ஆனாலும் அதிகாரிகள் வீட்டை இடிக்க முயன்றதாக கூறப்படுகிறது.

ஸ்டாலின்

இதனால் மனமுடைந்த ராஜ்குமார் வீட்டுக்குள் சென்று மண்ணெண்ணெயை உடலில் ஊற்றி தீ குளித்த நிலையில், வீட்டை விட்டு வெளியே ஓடி வந்தார். உடனே பாதுகாப்பு பணியில் இருந்த காவலர்கள் தீயை அணைத்து அவரை ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை கொடுக்கப்பட்டுவருகிறது. அவர் தீ குளித்து ஓடிவரும் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பகிரப்பட்டு வருகிறது.

இதற்கிடையில், தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை,“இந்த தி.மு.க ஆட்சியில் ரியல் எஸ்டேட் முதலாளிகள் பலன்களையும், சலுகைகளையும் அனுபவிக்கும் அதே வேளையில், சாமானியர்களின் வீடுகள் சட்டவிரோதக் கட்டுமானங்களாக இடிக்கப்படுகின்றன. சென்னை அருகே கும்மிடிப்பூண்டியில் பட்டா நிலத்தில் கட்டப்பட்ட தனது வீட்டை அரசு அதிகாரிகள் இடிக்க விடாமல் தடுக்க முயன்ற இளைஞர் ஒருவர் தீக்குளித்துள்ளார்.

அண்ணாமலை

ஆனால் மாநில வீட்டு வசதித்துறை அமைச்சரும், மாநில மதுவிலக்குத்துறை அமைச்சருமான முத்துசாமி, தீபாவளிக்கு முன்னதாக டாஸ்மாக்கில் 90 மில்லி பாட்டில்களை அறிமுகப்படுத்தும் பணியில் மும்முரமாக ஈடுபட்டுள்ளார். ஆனால், தி.மு.க அரசு தமிழகத்தின் முன்னுரிமைகள் குறித்து தொடர்ந்து பேசிவருகிறது” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

பா.ம.க நிறுவனர் ராமதாஸ் தன் எக்ஸ் பக்கத்தில்,“கும்மிடிப்பூண்டியில் பட்டா நிலத்தில் கட்டப்பட்டிருந்த வீட்டை ஆக்கிரமிப்பு என்று கூறி அதிகாரிகள் இடிக்க முற்பட்டதால் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளான வீட்டு உரிமையாளர் ராஜ்குமார் தீக்குளித்து தற்கொலை செய்து கொள்ள முயன்றுள்ளார். கடுமையான தீக்காயங்களுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ள அவர் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கிறார். இதற்கு காரணமான அதிகாரிகளின் செயல் கண்டிக்கத்தக்கது.

ராமதாஸ்

அரசுக்கு சொந்தமான ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களை செல்வாக்கு மிக்க நபர்கள் ஆக்கிரமித்துள்ள நிலையில் அவர்களை அகற்ற எந்த நடவடிக்கையும் எடுக்காத அதிகாரிகள், பட்டா நிலத்தில் கட்டப்பட்டிருக்கும் வீட்டை இடிக்க துடிப்பது ஏன்? அவர்களை தூண்டி விட்டவர்கள் யார்? தி.மு.க ஆட்சியில் சட்ட விரோதமாக செயல்படக்கூடிய பணக்காரர்கள் மட்டும்தான் வாழ முடியும், நேர்மையான ஏழைகள் வாழ முடியாது என்ற நிலை ஏற்பட்டு இருப்பதையே கும்மிடிப்பூண்டி நிகழ்வு காட்டுகிறது.

இதே நிலை நீடித்தால் தமிழகத்தில் ஏழைகள் வாழவே முடியாது. கும்மிடிப்பூண்டி நிகழ்வுக்கு காரணமான அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ள இளைஞர் ராஜ்குமாருக்கு தரமான மருத்துவம் அளிக்க அரசு ஏற்பாடு செய்ய வேண்டும்.” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.