ராஜஸ்தான்: `பாஜக தோல்வியடைந்தால் ராஜினாமா செய்கிறேன்..!’ – சொன்னபடியே பதவியைத் துறந்த அமைச்சர்

மத்தியப் பிரதேச மாநிலத்தில் கடந்த 2019-ம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில் மொத்தமுள்ள 25 தொகுதிகளில் 24 தொகுதிகளில் பா.ஜ.க வெற்றி பெற்றது. இந்த முறையும் பா.ஜ.க அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெற கடுமையாக போராடியது. இந்த நிலையில் நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி ராஜஸ்தானில் 10 தொகுதிகளில் வெற்றி பெற்றது.

பாஜக

தேர்தல் பிரசாரத்தின்போது ராஜஸ்தான் அமைச்சர் கிரோடி லால் மீனா, கிழக்கு பகுதியில் உள்ள 7 மக்களவை தொகுதிகளிலும் பா.ஜ.க-வை வெற்றி பெற வைப்பேன் என்று கூறி சபதம் செய்திருந்தார். அப்படியே பா.ஜ.க ஒரு தொகுதியில் தோல்வி அடைந்தாலும், தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்வேன் என்று தேர்தல் வாக்கு எண்ணுவதற்கு முந்தைய நாள் மீனா சபதம் செய்தார். ஆனால் தேர்தலில் வாக்குகள் எண்ணப்பட்ட போது அவரது பகுதிக்கு உட்பட்ட கிழக்கு ராஜஸ்தானில் 4 தொகுதிகளில் காங்கிரஸ் வெற்றி பெற்றது. இதையடுத்து அமைச்சர் கிரோடி லால் மீனா தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

கிரோடி லால் மீனா

இது தொடர்பாக கிரோடிலால் மீனா அளித்த பேட்டியில், “பிரதமர் நரேந்திர மோடி, கிழக்கு ராஜஸ்தானில் உள்ள 7 தொகுதிகளை என்னிடம் கொடுத்து அதில் வேலை செய்யும்படி கூறியிருந்தார். அதில் ஒரு தொகுதியில் பா.ஜ.க தோல்வி அடைந்தாலும் எனது பதவியை ராஜினாமா செய்துவிடுவேன் என்று கூறி இருந்தேன். கட்சியால் 7 தொகுதிகளிலும் வெற்றி பெற முடியவில்லை. இதையடுத்து சொன்னபடி இன்று ஜெய்ப்பூரில் நடந்த பிரார்த்தனை கூட்டத்தில் எனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்கிறேன்.

இதில் அதிருப்திக்கு இடமே இல்லை. நான் பதவியை ராஜினாமா செய்துவிட்டேன். அமைச்சரவை கூட்டத்தில் கலந்துகொள்ளக்கூட செல்லவில்லை” என்று தெரிவித்தார். முதல்வர் பஜன் லால் சர்மா ராஜினாமா முடிவை மறுபரிசீலனை செய்யவேண்டும் என்று கிரோடி லாலிடம் கேட்டுக்கொண்டார். ஆனால் கிரோடி லால் தனது முடிவை மாற்றிக்கொள்ள மறுத்துவிட்டார்.