ISKCON: சென்னையில் பூரி ஜகந்நாதர் ரதயாத்திரை; 44 வருடமாகத் தொடரும் திருவிழா!

சென்னை, ஈ.சி.ஆர் எனப்படும் கிழக்குக் கடற்கரைச் சாலையில் அமைந்திருக்கிறது இஸ்கான் (ISKCON) கோயில். உலகெங்கும் இருக்கும் கிருஷ்ண பக்தர்களை இணைக்கும் இஸ்கான் அமைப்பை 1965ஆம் ஆண்டு உருவாக்கியவர் ஶ்ரீபிரபுபாதர். தற்போது உலக நாடுகள் அனைத்திலும் தன் கிளைகளைப் பரப்பி சேவை செய்துவரும் இஸ்கான் அமைப்பு சென்னை கிழக்குக் கடற்கரைச் சாலையில் பிரமாண்டக் கோயில் ஒன்றைக் கட்டி பல ஆண்டுகளாகத் தொடர்ந்து விசேஷ வழிபாடுகள் நடத்தி வருகிறது. இங்கு அனைத்துப் பண்டிகைகளும் சிறப்புடன் கொண்டாடப்பட்டு வருகின்றன.

ரத யாத்திரை

ஆண்டுதோறும் பூரி ஜகந்நாதர் ஆலயத்தில் நடைபெறும் ரதயாத்திரை புகழ்பெற்றது. அதேபோன்று ஒரு ரதயாத்திரையை இஸ்கான் உலகெங்கும் நடத்திவருகிறது. சென்னை இஸ்கான் திருக்கோயில் சார்பாகவும் ரதயாத்திரை தொடர்ந்து நடைபெற்றுவருவது குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில் இந்த ஆண்டு ரதயாத்திரை வரும் ஜூலை 7ஆம் தேதி நடைபெற இருக்கிறது. மதியம் 2.30 மணிக்குத் தொடங்கும் இந்த யாத்திரை பாலவாக்கம் ECR ரிலையன்ஸ் சூப்பர் ஸ்டோர் அருகில் தொடங்கி நீலாங்கரை, வெட்டுவாங்கேணி, ஈஞ்சம்பாக்கம், அக்கரை ISKCON கோயிலில் முடிவடையும்.

மிகவும் வண்ணமயமான இந்த ஊர்வலத்தைத் தரிசனம் செய்வது அற்புத அனுபவமாகத் திகழும் என்கிறார்கள் பக்தர்கள். தேரின் முன்னும் பின்னும் கிருஷ்ண பக்தர்கள் பஜனைகளோடு ஆடிப்பாடிச் செல்வார்கள். இந்த ரத யாத்திரையில் வடம் பிடித்து இழுப்பது மிகவும் புண்ணியமாகக் கருதப்படுகிறது. எனவே சென்னையில் வாழும் கிருஷ்ண பக்தர்கள் தவறாமல் கலந்துகொண்டு பகவான் ஜகந்நாதர், பலதேவர் மற்றும் சுபத்ராவின் அருளைப் பெற வேண்டும் என்று இஸ்கான் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

சென்னை இஸ்கான் கோயில்

விழாவின் நிறைவடையும் போது அனைவருக்கும் உணவும் பிரசாதமும் வழங்கப்படும் என்று கோயில் நிர்வாகத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.