சமீபத்தில் அமைச்சர் மனோ தங்கராஜ் அளித்திருந்த பேட்டியில், “அமுல் நிறுவனம் விவாதத்திற்கான பொருளே கிடையாது. ஆவின் தயாரிப்புக்கு மக்களிடம் வரவேற்பு உள்ளது. ஆவின் நிறுவனம் முடிந்ததாக சிலர் சொன்ன நிலையில் தற்போது 36 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் எப்படி செய்ய முடிந்தது? ஓரிரு வாரங்களில் 40 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுத்து வருகிறோம். அத்துடன் பால் கையாளும் திறனை 70 லட்சம் லிட்டராக உயர்த்தவும் கட்டமைப்பு பணிகள் நடந்து வருகின்றன. தமிழ்நாட்டில் ஆவின் பால் விற்பனை 25 சதவிகிதம் அதிகரித்துள்ளது. நெய் போன்ற பொருள்கள் நீண்ட நாள்கள் தாங்கக்கூடிய வகையில் புதிய வியூகங்களை வகுத்து வருகிறோம்’’ என்று தெரிவித்திருந்தார்.
உண்மையில் ஆவின் எடுத்த நடவடிக்கையால்தான் பால் உற்பத்தி அதிகரித்ததா, அமுலின் வளர்ச்சி ஆவினுக்கு பிரச்னையில்லையா என்பது குறித்து தமிழ்நாடு பால் உற்பத்தியாளர் நலச்சங்கத்தின் பொதுச்செயலாளர் எம்.ஜி.ராஜேந்திரனிடம் பேசியபோது, “ஆவின் பால் உற்பத்தி அதிகரித்திருப்பது ஆவின் எடுத்த முயற்சிகளால் அல்ல. தமிழகம் முழுவதும் நல்ல மழை பெய்திருக்கிறது. பசும்புல் ஆங்காங்கே விளைந்து மாடுகளுக்கு நல்லபடியாகத் தீவனம் கிடைக்கிறது. இதோடு பசுந்தீவன உற்பத்தியும் அதிகரித்துள்ளது. அதேநேரம் தனியார் நிறுவனங்களின் பால் விற்பனை பாதித்துள்ளது. அதனால் பால் கொள்முதல் விலையையும் சற்றே குறைத்திருக்கின்றன. தனியார் நிறுவனங்களுக்கு பால் ஊற்றிக் கொண்டிருந்தவர்கள், திரும்பவும் ஆவினுக்கு திரும்பியிருக்கிறார்கள். இதனால்தான் பால் உற்பத்தி அதிகரித்துள்ளது.
அமுல் நிறுவனத்தின் வருகை விவாதத்திற்கான பொருளே இல்லை என்கிறார் அமைச்சர். பிறகு ஏன்? அமுல் தமிழகத்தில் கால் பதித்தவுடன் முதலமைச்சர் ஸ்டாலின், மத்திய அமைச்சர் அமித் ஷாவுக்கு கடிதம் எழுதினார். தமிழகத்தில் அமுல் வளர்ந்து கொண்டிருக்கிறது. பால் கொள்முதல் விலையை உயர்த்த வேண்டுமென்று அமைச்சர் நாசர் இருந்த போதிருந்தே வலியுறுத்தி வருகிறோம். தற்போது அமைச்சராக இருந்து வரும் மனோ தங்கராஜிடமும் வலியுறுத்தினோம். நாடாளுமன்றத் தேர்தல் முடியட்டும் முதலமைச்சரிடம் பேசி பால் விலையை உயர்த்துகிறோம் என்று தெரிவித்தார். நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகி ஒரு மாதம் ஆகிறது. இன்னும் எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை.
தற்போதைய நிலையில் கால்நடை தீவனத்தின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. தீவனம், நோய் பராமரிப்பு, பால் கறப்பதற்கான கூலி என்று 1 லிட்டர் பால் உற்பத்தி செய்ய 63.25 ரூபாய் ஆகிறது. 1 லிட்டர் பால் உற்பத்தி செய்ய எவ்வளவு செலவாகிது என்று விலாவரியாக ஒவ்வொன்றையும் எழுதி, எங்கள் அமைப்பின் தலைவர் ரத்னகுமார் அமைச்சரிடம் வழங்கியிருக்கிறார். அப்போது அமைச்சர் ‘உங்களுக்கே இது நியாயமா தெரியலையா?’ என்று கேட்டிருக்கிறார். அரசு 1 லிட்டர் பாலை 63 ரூபாய்க்கு கொள்முதல் செய்யட்டும், எங்களுக்கு எந்த சலுகையும் வேண்டாம். மானியத்தில் தீவனம், தாது உப்புகள், மருத்துவ உதவி என்று எதுவும் வேண்டாம். நாங்கள் பார்த்து கொள்கிறோம். ஏற்கெனவே பால் உற்பத்தியிலிருந்து விவசாயிகள் வெளியேறிக் கொண்டிருக்கிறார்கள். இந்த விலை கொடுத்தால்தான் பால் உற்பத்தியாளர்களுக்கு கட்டுப்புடியாகும்.
ஆவினில் கிராம அளவிலான கூட்டுறவு சங்கம், மாவட்ட அளவிலான ஒன்றியங்கள், மாநில அளவிலான இணையங்கள் ஆகியவற்றை புனரமைப்பு செய்ய வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகிறோம். பால் வளத்துறையை வேளாண்மை அல்லது கால்நடை பராமரிப்புத் துறையோடு இணைத்துவிடலாம்.
தேவையில்லாமல் நிர்வாக செலவு குறையும். சென்னையில் மட்டுமே 7 கால்நடை மருத்துவர்கள் இருப்பதாக சொல்கிறார்கள். ஒரு கால்நடை மருத்துவருக்கு ஒன்றரை லட்சத்துக்கு மேல் சம்பளம். மாடு வளர்ப்பு கிராமங்களில்தான் இருக்கிறது. மருத்துவர்களுக்கு சென்னையில் என்ன வேலை?
இப்படி நிர்வாகம் சார்ந்த பல விஷயங்களை சரி செய்ய வேண்டியுள்ளது. இந்தியாவிலேயே நாங்கள்தான் பாலை குறைவான விலைக்கு கொடுக்கிறோம் என்று பெருமையாக பேசுகிறார் முதல்வர் ஸ்டாலின். ஆனால், பால் உற்பத்தியாளர்களின் நிலை கேள்விகுறியாகியுள்ளது.
ஏற்கெனவே பால் விற்பனை விலையை 3 ரூபாய் குறைத்ததற்கான தொகையை ஆவினுக்கு முதல்வர் இன்னும் வழங்கவில்லை. வருஷத்துக்கு 324 கோடி இதன்மூலமாகவே ஆவினுக்கு நஷ்டம். இந்த நஷ்டத்தை யார் ஈடுகட்டுவது? நிர்வாக சீர்கேட்டை சரிசெய்ய வேண்டும், பால் கொள்முதல் விலையை 1 லிட்டர் 63 ரூபாய் என உயர்த்த வேண்டும். அமைச்சரிடம் கேட்டால் எதற்கெடுத்தாலும் முதல்வரிடம் பேசுகிறேன் என்கிறார். முதல்வரிடம் இந்த பேட்டியின் வாயிலாக கேட்டுக் கொள்கிறோம். பால் கொள்முதல் விலையை மட்டும் உயர்த்துங்கள். அடுத்து வருகிற சட்டமன்றத் தேர்தலில் அதற்கான பலன் உங்களுக்குக் கிடைக்கும்” என்றார்.