செங்கோல் குறித்து மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் பேசியது சர்ச்சையாகிய நிலையில், பா.ஜ.க நிர்வாகிகள் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினரும் கடுமையாக விமர்சித்து வருகிறார்கள்.

சு.வெங்கடேசன் அப்படி என்னதான் பேசினார் என்பதை பார்ப்போம்… “18-வது நாடாளுமன்றத் தேர்தலில் பாசிச அரசியலுக்கு எதிராக வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கிய தமிழ்நாட்டு மக்களுக்கும், மதுரை நாடாளுமன்றத் தொகுதி மக்களுக்கும் எனது அன்பான வணக்கத்தையும், நன்றியையும் முதலிலே தெரிவித்துக் கொள்கிறேன்.

செங்கோல்

அவைத் தலைவர் அவர்களே, இந்த நாடாளுமன்றத் தேர்தலின் தீர்ப்பை உள்வாங்கிக் கொண்டதாக இந்த அரசினுடைய உரை அமையவில்லை . குறிப்பாகச் சொல்வதாக இருந்தால் இந்தத் தீர்ப்பு ஆளுங்கட்சியினுடைய 63 எம்.பி-க்களை குறைத்திருக்கிறது.  அவர்களது கார்பரேட் நண்பர்கள் கட்டமைத்த `எக்சிட் போல்’ கற்பனைகளைத் தகர்த்திருக்கிறது. இன்னும் சொல்லப்போனால், தெய்வக் குழந்தை சொன்ன பல கதைகளை மக்கள் பொய்யென நிரூபித்திருக்கிறார்கள். இவ்வளவு நல்லதொரு தீர்ப்பை 18 -வது நாடாளுமன்றத்தில் மக்கள் வழங்கியிருக்கிறார்கள்.

நண்பர்களே 17-வது நாடாளுமன்றத்தினுடைய கடைசி நாளில் பிரதமர் இந்த அவையில் பேசிய பேச்சை நான் நினைவுபடுத்த வேண்டுமென்று நினைக்கிறேன். ‘தேர்தலுக்குப் பிறகு இந்த அவையில் எதிர்கட்சிகளுக்கு இடமில்லை; பார்வையாளர் மாடத்தில்தான் எதிர்கட்சிகளுக்கு இடம்’ என்று பேசினார். ஆனால், இன்றைக்கு எதிர்கட்சித் தலைவரின் உரையை இரண்டு மணி நேரம் உட்கார்ந்து கேட்க வைத்திருக்கிற பெருமையை இந்திய வாக்காளர்கள் நிலை நிறுத்தியிருக்கிறார்கள்.

பிரதமருடைய அன்றையப் பேச்சு முழுக்க முழுக்க அயோத்தியைப் பற்றி இருந்தது. ஆனால் இன்றைக்கு குடியரசுத் தலைவரின் உரையில் அயோத்தி என்ற சொல்லே இல்லை. உங்களுக்கு வாக்களிக்காவிட்டால் அயோத்தியையும் கைவிடுவீர்கள். ஆண்டவனையும் கைவிடுவீர்கள்.

சு.வெங்கடேசன்

இன்றைக்குத்தான் அயோத்தியைப் பற்றி பேச வேண்டும். ஒரு பொதுத் தொகுதியில் பட்டியல் சமூகத்தைச் சார்ந்த அவதேஷ் பிரசாத்தை மக்கள் தேர்வு செய்திருக்கிறார்கள். எவ்வளவு அழகான ஜனநாயகத்தின் தீர்ப்பு.

அதுமட்டுமல்ல நண்பர்களே, அயோத்தி ராமர் உங்களை கைவிட்டார். வாரணாசியில் காசி விசுவநாதர், முதல் மூன்று சுற்று உங்களை தவிக்கவிட்டார். தெய்வத்தின் குழந்தை என நீங்கள் சொல்லியதை மனிதர்களான எங்களாலேயே தாங்கிக்கொள்ள முடியவில்லை. தெய்வங்களால் எப்படி தாங்கிக் கொள்ள முடியும்? எனவேதான் நீங்கள் ராமரைக் கைவிட்டு விசுவநாதரிடம் போனீர்கள்; விசுவநாதரிடமிருந்து இன்றைக்கு ஜெகநாதரிடம் போயிருக்கிறீர்கள். விரைவில் ஜெகன்நாதர் உங்களுக்கு நல்ல அருளை பாவிப்பார்.

மீண்டும் செங்கோலோடு எங்களது பிரதமர் மோடி நாடாளுமன்ற அவைக்குள் நுழைந்திருக்கிறார் என்று அமைச்சர்கள் பெருமையோடு பேசியிருக்கிறார்கள். செங்கோல், மணிமுடி, சிம்மாசனம் இதையெல்லாம் தகர்த்துவிட்டுத்தான் இந்திய ஜனநாயகம் இந்த அவையில் கால் ஊன்றியது. மன்னராட்சி எப்பொழுது ஒழிந்ததோ அப்பொழுதே செங்கோலின் மகிமையும் ஒழிந்துவிட்டது.

செத்துப்போன சிங்கத்தின் தோலை போர்த்திக் கொண்டு காட்டுக்கு ராஜா நான் தான் என்று நீங்கள் கதையடித்துக் கொண்டிருக்கிறீர்கள். உங்களுக்குத் தெரியுமா? இந்த செங்கோலை வைத்திருந்த ஒவ்வொரு மன்னனும் தனது அந்தப்புரத்திலே எத்தனை பெண்களை அடிமையாக வைத்திருந்தான் என்று?

இந்த செங்கோலை கொண்டு வந்து இந்த இடத்திலே வைத்ததன் மூலம் இந்த நாட்டுப் பெண்களுக்கு நீங்கள் என்ன சொல்ல விரும்புகிறீர்கள்? வேதனையாக இருக்கிறது. இந்த இடத்திலே நாங்கள் மீண்டும் பதிவு செய்ய விரும்புகின்றோம். நாடாளுமன்றத்தினுடைய நுழைவு வாசலில் தேசத்தந்தை காந்தியின் சிலை இருந்தது. நாடாளுமன்றத்தின் முன்புறம் அண்ணல் அம்பேத்கரின் சிலை இருந்தது. இன்றைக்கு அவைகளெல்லம் காணவில்லை. நாடாளுமன்றத்தின் பின்புற வாசலிலே வைத்திருக்கிறீர்கள். ஆனால் சாணக்கியரையும், சாவர்க்கரையும் செங்கோலையும் நாடாளுமன்றத்திற்குள்ளே வைத்திருக்கிறீர்கள்.

சு.வெங்கடேசன்

ஆளுங்கட்சிக்காரர்களுக்கு நாங்கள் சொல்லிக் கொள்வோம். அரசியல் சாசனத்தை கையிலே ஏந்தியபடி பதவி ஏற்றுக்கொண்டோம். ஏன் தெரியுமா? உங்களால் எது அழிக்கப்பட இருக்கிறதோ அதை உயர்த்திப்பிடிக்கத் தான் மக்கள் எங்களுக்கு வாக்களித்திருக்கிறார்கள். நீங்கள் எதை அழிக்க நினைக்கிறீர்களோ அதை உயர்த்திப் பிடிப்போம்.

அதேபோல செங்கோல் இரண்டு செய்தியின் குறியீடு., ஒன்று மன்னராட்சியின் குறியீடு. இரண்டாவது குறியீடு அறம், நேர்மையின் குறியீடு. உங்களுக்கும் நேர்மைக்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது? தமிழ்நாட்டு தேர்தலுக்கு எட்டு முறை பிரதமர் வந்தார். தமிழ்நாட்டின் பெருமையை , தமிழ்மொழியின் பெருமையை , தமிழ்பண்பாட்டின் பெருமையைப் பேசினார்.

தேர்தல் முடிந்தது உத்தரப் பிரதேசத்திலே போய் தமிழர்களைப் பற்றி நீங்கள் என்ன பேசினீர்கள்? பீகாரிலே என்ன பேசினீர்கள் ? ஒடிசாவிலே என்ன பேசினீர்கள்? உங்களுக்கு அந்த அரசியல் அறமும், நேர்மையையும் இருந்திருந்தால் நீங்கள் அதைத் தமிழ்நாட்டில் பேசியிருக்க வேண்டும். எந்த ஆட்சியாளரும் இவ்வளவு இழிவாகத் தமிழர்களை பேசியதில்லை.

நீட் பற்றி கல்வி அமைச்சர் பேச மறுக்கிறார். ரயில் விபத்தைப் பற்றி ரயில்வே அமைச்சர் பேச மறுக்கிறார். மணிப்பூர் வன்முறைகளைப் பற்றி உள்துறை அமைச்சர் பேச மறுக்கிறார் . ஆனால் அதற்குப் பதிலாக தேர்தலுக்குப் பிறகு இந்தியாவின் பல இடங்களில் சிறுபான்மை மக்கள் மீதான தாக்குதல் கட்டவிழ்த்து விடப்படுகிறது.

இந்தத் தேர்தலின் மூலம் உங்களது சரிவு ஆரம்பமாகிவிட்டது. 63 இடங்களை மக்கள் பறித்தார்கள் என்பது மட்டுமல்ல, உங்கள் தோழமைக் கட்சிகளை மதிக்கப் பழகிவிட்டீர்கள். 12 எம்பிக்கள் கொண்ட கட்சிக்கு பிரதமர் எழுந்து நின்று வணக்கம் சொல்கிறார். அது இந்த நாட்டின் தலைப்புச் செய்தியாக மாறுகிறது.

மதுரை மேயர் இந்திராணி

ஜனநாயகத்தின் குரல் , சமூகநீதியின் குரல், பொருளாதார நீதியின் குரல் தான் இந்தியாவின் குரல் என்பதை மக்கள் மீண்டும் மீண்டும் நிரூபிப்பார்கள் என்று சொல்லி முடிக்கிறேன்…” என்று பேசியுள்ளார்.

சு.வெங்கடேசனின் நாடாளுமன்ற பேச்சு கடும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன், “செங்கோல் குறித்து விமர்சித்துப்பேசி தமிழ் மன்னர்களையும், பெண்களையும் இழிவுபடுத்தி விட்டார்” என்று சாடி இருக்கிறார். பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, “செங்கோல் என்பது பெண்களை அடிமைபடுத்துவது போன்றது என கூறிய மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன், மதுரை பெண் மேயருக்கு செங்கோல் வழங்கப்பட்ட நிகழ்வில் அதை பிடித்தபடி புகைப்படத்துக்கு போஸ் கொடுத்துள்ளார். மக்களவையில் பிரதமர் செங்கோல் வைத்தால் தவறு. இவர்கள் செய்தால் சரி. இதுதான் இவர்களின் அரசியல் போலி முகத்திரை.” என்று விமர்சித்துள்ளார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.