பளிச் பஸ் ஸ்டாப், சுத்தமான ஊர் தண்ணீர் தொட்டி, பள்ளிக்கு புது ஆர்.ஓ… ஊரையே மாற்றும் ‘டீம் பசங்க’!

‘இப்போ இருக்க பசங்க எல்லாம் போன்லேயே தான் குடி இருக்காங்க. அவங்களுக்கு ஊரை பத்தியோ, உலகத்தை பத்தியோ எந்தக் கவலையும் இல்ல’ – இதுதான் இங்கு பொதுக்கருத்து. ஆனால், தங்களது செயல்பாடுகளால் தங்கள் ஊர் மக்களிடம் இந்த எண்ணத்தை மாற்றி வருகின்றனர், ‘டீம் பசங்க’.

‘குட்டி’ என்னும் யூடியூப் சேனல் வீடியோக்கள் பல வியூவ்ஸ்களை அள்ள, ‘யாருடா இவங்க?’ என்ற தேடலுடன் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள புத்தநேரிக்கு விசிட் அடித்தோம். ஊரில் யாரிடம் கேட்டாலும் ‘டீம் பசங்க’ பத்தி ‘ஆஹா… ஓஹோ’ என்று புகழ, அவர்களை தேடிக் கண்டடைந்தோம்.

படிப்பை முடித்து வேலையில் இருக்கும் ஊர் இளைஞர்கள் சிலர், ஒரு குழுவாக இணைந்து தங்களால் இயன்ற உதவிகளை ஊருக்கு செய்து வருகின்றனர். அந்த வீடியோக்களை யூடியூபிலும் அப்லோடு செய்கின்றனர் என்பது புரிய வந்தது.

ஊர் முழுவதும் ‘புகழ்ச்சி’ தான்!

“என் பேரு முத்துக்குட்டி‌. அதனால என்னோட யூடியூப் சேனலுக்கும் ‘குட்டி’னு பேரு வெச்சேன். முன்னாடி எல்லாம் ஃபுட் ரிவ்யூ மாதிரி தான் சேனல்ல வீடியோக்கள் போட்டுட்டு இருந்தேன். அப்புறம், ஊர் கிணத்தை சுத்தம் செய்யுறது, பெயின்ட் அடிக்கறது மாதிரி, எங்க ஊருக்கு செய்யுற சின்னச் சின்ன வேலைகளை வீடியோ எடுத்து போட ஆரம்பிச்சோம். ஒருகட்டத்துல, இந்த வீடியோக்கள் நல்லா போக ஆரம்பிச்சுடுச்சு.

அதுமட்டுமில்லாம, எங்க வீடியோவை பார்த்துட்டு, எங்கள மாதிரியே நிறைய பசங்க அவங்கவங்க ஊருக்கு வேலை செய்ய ஆரம்பிச்சுட்டாங்க. அதுவே எங்களுக்கு பெரிய பூஸ்டா மாற, நாங்க இப்போ எங்க ஊருக்கு இன்னும் நிறைய விஷயங்கள் செஞ்சுட்டு வர்றோம்” என்று பெருமையுடனும், உற்சாகத்துடனும் பேச்சை தொடங்குகிறார் முத்துக்குட்டி.

“நாங்க முதன் முதலா ஊருக்காக பண்ணின வேலைன்னா, அது தண்ணீர் தொட்டியை சுத்தம் செஞ்சது தான். நாங்க சின்ன வயசுல அந்த தொட்டில தான் தண்ணி புடிச்சுக் குடிப்போம். ஆனா, இப்போ பெரும்பாலான வீடுகள் தண்ணி கனெக்‌ஷன் வந்துட்டதுனால, யாரும் அந்த தொட்டிய கண்டுக்கல. ‘சுத்தம் செஞ்சா எல்லாரும் பயன்படுத்துவாங்களே…’னு சுத்தம் செஞ்சோம். இப்போ நிறைய பேர், தண்ணீர் இல்லாத சமயத்துல அந்த தண்ணி தொட்டியத்தான் பயன்படுத்துறாங்க” என்கிறார் பெருமையுடன்.

“அடுத்ததா, பஸ் ஸ்டாப். எங்க ஊர் பஸ் ஸ்டாப் போர்டை, யாரோ குடிச்சுட்டு தூக்கி எறிஞ்சுட்டாங்க. அதனால, புதுசா வர்றவங்க, ‘உங்க ஊர்ல பஸ் ஸ்டாப் கூட இல்லையா?’னு கேப்பாங்க. இதை மாத்தணும்னு நாங்களே பஸ் ஸ்டாப்பை சுத்தம் செஞ்சு, பெயின்ட் அடிச்சு, ’புத்தநேரி’னு பெருசா எழுதி… இப்போ பளிச்சுனு ஆக்கிட்டோம்.

உங்க ஊர்ல பஸ் ஸ்டாப் கூட இல்லையா?

‘சரி.. இதெல்லாம் பண்றீங்களே.. உங்களுக்கு எப்படி காசு கிடைக்குது?’னு கேக்கறாங்க. எங்களுக்கு பெருசா காசு எல்லாம் தேவைப்படல. எங்ககிட்ட இருக்க பணத்த வெச்சே தேவையானதை செஞ்சுக்குறோம். யூடியூப்ல காசு வரும்லனு நீங்க நினைக்கலாம். ஆனா, யூடியூப்ல இருந்து கடந்த ரெண்டு மாசமா தான் காசு வருது’’ என்றவர் அடுத்து சொன்ன விஷயம், அசத்தல்.

’’நாங்க பள்ளிக்கூடத்துல படிச்சப்போ, நிறைய பேரு வெளிய இருந்து உதவி பண்ணுவாங்க. பாக்கவே நிறைவா இருக்கும். அதனால, யூடியூப்ல இருந்து வந்து முதல் காசை வெச்சு, நாங்களும் எங்க ஊரு பள்ளிக்கூடத்துக்கு ஆர்.ஓ வாங்கிக் கொடுத்துருக்கோம். கூடவே, பள்ளிக்கூடத்துல இருக்க சின்ன சின்ன பிளம்பிங் வேலை, எலக்ட்ரிக் வேலையும் செஞ்சு கொடுக்குறோம். இது எதுக்குமே நாங்க மத்தவங்க கிட்ட காசு வாங்கல. எங்க கிட்ட இருக்குற காசை வெச்சுதான் செய்யுறோம்.

முக்கியமா, ‘டீம் பசங்க சேர்ந்து எதாவது பண்ணலாம்னு இருக்கோம்…’னு ஒவ்வொரு தடவை ஊருல சொல்றப்போவும், ஊர் மக்களே, ‘இதை பண்ணுங்க’னு எங்களை தட்டிக்கொடுப்பாங்க” என்று முத்துக்குட்டி முடிக்க, ‘டீம் பசங்க’ளின் இன்னொரு உறுப்பினர் விஜய் பேசத் தொடங்குகிறார்.

பள்ளிக்கூடத்துக்கு ‘ஆர்.ஓ’

“இப்போ எங்க பக்கத்து ஊர்ல இருக்க பசங்களும் எங்களை பார்த்து, அவங்க ஊர்ல சின்னச் சின்ன வேலை செய்ய ஆரம்பிச்சுட்டாங்க. இன்னும் சிலர், மரக்கன்றுகள் நடுறது மாதிரி நிறைய செய்யுறாங்க.

சில பேரு எங்ககிட்ட வந்து, ‘நாங்களும் உங்க கூட சேர்ந்து வேலை செய்யலாமா?’னு கேக்குறாங்க. அப்படி கேக்குறவங்களை சந்தோசமா சேத்துக்குறோம். ‘இதைத்தான் செய்வோம்… அதைத்தான் செய்வோம்’னு இல்லாம, ஊருக்கு அப்போதைய தேவையோ என்னவோ, அதை செய்வோம். ஊருல எங்களுக்கு பயங்கர சப்போர்ட்” என்று கெத்தாக கூறினார்.

‘’இளைஞர்கள் மேல மக்கள் நம்பிக்கை வைக்கணும். அதுக்கு தகுந்த வகையில இளைஞர்கள் நடந்துக்கணும்… நடப்போம்!” – கோரஸாக சொல்கிறது ‘டீம் பசங்க’ குழு!