நெல்லை: அறிவுரை சொன்ன ஆட்டோ டிரைவர்.. மதுவில் விஷம் கலந்து அடித்துக் கொன்ற உறவினர்கள்!

நெல்லை மாவட்டம், நாங்குநேரி அருகேயுள்ள இளந்தோப்பு பகுதியைச் சேர்ந்தவர் முத்துச்செல்வம். ஆட்டோ டிரைவரான இருவருக்கு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு அன்னலெட்சுமி என்பவருடன் திருமணம் நடந்துள்ளது. இந்த நிலையில், கடந்த 30-ம் தேதி இரவு பயணிகளை ஏற்றிக் கொண்டு மூன்றடைப்பு வழியாக பாளையங்கோட்டைக்கு சவாரிக்குச் செல்வதாக மனைவி அன்னலெட்சுமியிடம் கூறிவிட்டு ஆட்டோவை எடுத்துச் சென்றுள்ளார்.

மூலைக்கரைப்பட்டி காவல் நிலையம்

இந்த நிலையில், கடந்த 1–ம் தேதி காலையில் மூன்றடைப்பு அருகேயுள்ள சூரப்பபுரம் சாலையோரத்தில் முத்துச்செல்வம், வாயில் நுரை தள்ளியவாறு இறந்து கிடந்தார். அவரது உடலில் கழுத்து, கை, முதுகு உள்ளிட்ட பகுதிகளில் காயங்கள் இருந்தன. அவரது உடலில் காயங்கள் இருந்ததால் அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகித்த மூலக்கரைப்பட்டி காவல் நிலைய போலீஸார், அப்பகுதிகளிலுள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளின் அடிப்படையில் விசாரணை நடத்தினர். விசாரணையில் முத்துச்செல்வத்தின் உறவினர் ஒருவரின் நடவடிக்கைகளை கண்டித்து அறிவுரை கூறியதும், இதன் காரணமாக ஏற்பட்ட விரோதத்தில் அவரை கொலையாளிகள், வாடிக்கையாளர்கள் போல சவாரிக்கு போன் செய்து அழைத்து  கொலை செய்ததும் தெரிய வந்துள்ளது.

ஆட்டோவில் வந்த 4 பேர் இடையில் ஒரு காட்டுப்பகுதியில் ஆட்டோவை நிறுத்தச் சொல்லி முத்துச்செல்வத்தை தாக்கியுள்ளனர். அவரது கை, கால்களை கட்டி மதுவில் விஷம் கலந்து வாயில் ஊற்றிவிட்டு அவர் மயங்கிய பிறகு அடித்து கொலை செய்தது தெரிய வந்துள்ளது. இதுகுறித்து போலீஸாரிடம் பேசினோம், “முத்துச்செல்வத்தின் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்ப கைப்பற்றிய போதே உடலில் பல இடங்களில் காயங்கள் இருந்தது. இதுதான் எங்களுக்கு முதலில் சந்தேகத்தை ஏற்படுத்தியது. சாலையோரத்தில் நுரை தள்ளிய நிலையில் முத்துச்செல்வம் கிடந்ததாலும், அருகில் மது பாட்டில், விஷ பாட்டில் கிடந்ததால் அவர் தற்கொலை செய்துள்ளார் என நினைத்து போலீஸார் தற்கொலை வழக்காக முடித்து விடுவர் என கொலையாளிகள் நினைத்துள்ளனர்.

மூலைக்கரைப்பட்டி காவல் நிலையம்

ஆனால், அவர் வீட்டிலிருந்து ஆட்டோவில் கிளம்பியதில் இருந்து அவரது உடல் கிடந்த இடம் வரையிலான முக்கிய பகுதிகளில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்ததும், முத்துச் செல்வத்தின் செல்போன் அழைப்புகளை வைத்தும் விசாரணை நடத்தியதில் முத்துச்செல்வம் கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது. இது தொடர்பாக சுரேஷ், பாலசேகர், பெருமாள், சாமி ஆகிய 4 பேரை கைது செய்துள்ளோம். மேலும் ஒருவரை தேடி வருகிறோம்” என்றனர்.