பெண்கள் இன்று எல்லா துறைகளிலும் வேலைவாய்ப்பு பெற்று, நீக்கமற நிறைந்துள்ளார்கள் என்று பெருமைப்படுகிறோம். பணியிட பாரபட்சத்தை ஒழிப்பதற்கான முன்னெடுப்புகளையும் செய்து வருகிறோம். இந்த நிலையில்தான், காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூரில் அமைந்துள்ள ஃபாக்ஸ்கான் நிறுவனத் தொழிற்சாலையில் திருமணமான பெண்களை பணியமர்த்த மறுப்பதாக வந்துள்ளது அவல செய்தி. இது, நாடு முழுக்க கவனத்தை ஈர்த்துள்ளது.
ஆப்பிள் நிறுவன சாதனங்களுக்கான தயாரிப்புப் பொருள்களை உற்பத்தி செய்துகொடுக்கும் நிறுவனம்தான் ஃபாக்ஸ்கான். திருமணமான பெண்கள்… கர்ப்பம், குழந்தைப்பேறு உள்ளிட்ட காரணங்களால் விடுப்பு எடுக்க நேரிடுவதாலும், அவர்களது குடும்பப் பொறுப்புகளால் உற்பத்தித்திறன் பாதிக்கப்படுவதாலும் இதை வாய்மொழி உத்தரவாக அந்த நிறுவனம் பின்பற்றுவதாகக் கூறப்படுகிறது.
குற்றச்சாட்டு குறித்து விளக்கம் அளிக்கக் கோரி, தமிழ்நாடு தொழிலாளர் துறையிடம் மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் நோட்டீஸ் அனுப்பியது. அதைத் தொடர்ந்து, `எங்கள் நிறுவனத்தில் புதிதாக பணியமர்த்தப்பட்டவர்களில் 25% பேர் திருமணமான பெண்கள்’ என்று விளக்கமளித்துள்ளது, ஃபாக்ஸ்கான்.
உண்மை என்னவென்பதை வெளிக்கொண்டுவர தேவை, நேர்மையான விசாரணை.
பெண்களை நிராகரிக்கும் இந்தப் போக்கு, எல்லா துறை நிறுவனங்களிலும் சத்தமில்லாமல் பின்பற்றப்படுகிறது என்பதே உண்மை. சம ஊதியச் சட்டம் 1976, பிரிவு 5, ஆண் மற்றும் பெண் தொழிலாளர்களை பணியமர்த்துவதில் எந்தவித பாகுபாடும் காட்டக்கூடாது என்கிறது. ஆனால், புதிய புராஜெக்ட்கள், ஆன்சைட் வாய்ப்புகள், பதவி உயர்வு, தலைமைப் பொறுப்பு என எல்லாவற்றிலும், கர்ப்பம், மகப்பேறு உள்ளிட்ட காரணங்களை முன்வைத்து பெண்கள் வாய்ப்பு வழங்கப்படாமல் தவிர்க்கப்படுகிறார்கள். வேலைக்கே எடுக்காமல் நிராகரிப்பதும் நடக்கிறது.
தென்கொரியாவில் குழந்தை பிறப்பால் நிறுவனங்கள் பெண்களைப் புறக்கணிக்கும் போக்கு அதிகரிக்கவே, குழந்தை பெற்றுக்கொள்வதையே புறக்கணிக்க ஆரம்பித்துவிட்டனர் பெண்கள். இதனால், உலகிலேயே மிகக்குறைந்த பிறப்பு விகிதம் கொண்ட நாடாக சரிந்து, பெரும் பிரச்னையை தற்போது சந்தித்து வருகிறது தென்கொரியா. இது, உலகத்துக்கு பெண்கள் கொடுத்திருக்கும் எச்சரிக்கையே.
பெண்களை நிராகரிப்பது, தங்கள் லாபம் சார்ந்ததாக நிறுவனங்கள் நினைக்கலாம். ஆனால், அவர்களின் பொருள்களுக்கான பிராணவாயு, சந்தைதான். அச்சந்தையை நுகரத் தேவையான மனிதர்களை பூமிக்குக் கொடுத்துக்கொண்டே இருப்பவர்கள், பெண்கள். அந்தச் சங்கிலி அறுபட்டால்… வியாபார உலகச் சங்கிலி மட்டுமல்ல, ஒட்டுமொத்தமாக உலகமே அறுபட்டுத்தான் போகும்.
அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் சம ஊதிய சட்டம் முதல் மகப்பேறு விடுமுறை வரை, பணிபுரியும் பெண்களுக்கான திட்டங்களைக் கொண்டுவருவது மட்டும் போதாது. அதைக் கண்காணித்து 100% உறுதிப்படுத்துவதுதான் முக்கியம். அதை நோக்கி, அரசைத் தள்ளுவோம் தோழிகளே.
உரிமையுடன்,
ஸ்ரீ
ஆசிரியர்