சென்னை பிராட்வேயிலிருந்து கேளம்பாக்கத்துக்கு இன்று காலை அரசு மாநகர ஏ.சி பேருந்து ஒன்று பயணிகளுடன் சென்று கொண்டிருந்தது. அடையாறு, எல்.பி சாலையில் அந்தப் பேருந்து சென்று கொண்டிருந்தபோது, பேருந்து திடீரென தீபற்றி எரிந்தது. உடனே பதறிப்போன ஓட்டுநர், நடத்துனர் ஆகிய இருவரும் பயணிகளை உடனடியாக பேருந்திலிருந்து வெளியேற்றி பெரும் அசம்பாவிதத்தைத் தவிர்த்தனர். அதையடுத்து தீயணைப்புத்துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.

உடனே சம்பவ இடத்துக்கு விரைந்த தீயணைப்புத்துறையினர், துரிதமாகச் செயல்பட்டு தீயைக் கட்டுக்குள் கொண்டுவந்தனர். பேருந்து சாலையில் பற்றியெரிந்த வீடியோ, சமூக வலைதளங்களில் பரவி, அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்தப் பேருந்து CNG-ல் இயங்கக்கூடிய பேருந்து எனத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த சம்பவத்துக்கான காரணம் குறித்து போக்குவரத்துத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பேருந்து பற்றியெரிந்து அந்தப் பகுதியே புகை மண்டலமாகக் காட்சியளித்தது. பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்தச் சம்பவம் தொடர்பாகத் தமிழ்நாடு அரசு செய்திக்குறிப்பு வெளியிட்டிருக்கிறது.

அதில், “TN-01AN-1569 என்ற பதிவு எண் கொண்ட பேருந்தை, இன்று மதியம் ஓட்டுநர் மற்றும் நடத்துனர் இருவரும் தடம் எண் 102, பிராட்வே-லிருந்து 10 பயணிகளுடன் சிறுசேரி நோக்கிச் சென்று கொண்டிருந்தனர். அப்போது மதியம் சுமார் 2 மணி அளவில் அடையார் பணிமனை அருகில் பேருந்து செல்லும் போது ஓட்டுநர், இன்ஜின் அருகே புகை வருவதைக் கவனித்ததால், உடனடியாக பேருந்தை நிறுத்தி, பயணிகளைப் பத்திரமாகவும், பாதுகாப்பாகவும் இறக்கிவிட்டார்.

பின் காவல்துறை மற்றும் தீயணைப்புத்துறைக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டு, அவர்கள் உதவியுடன் தீ முழுவதுமாக அணைக்கப்பட்டு அருகிலிருந்த அடையாறு பணிமனைக்குப் பேருந்து பாதுகாப்பாக எடுத்துச்செல்லப்பட்டது. மாநகர் போக்குவரத்துக் கழக அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் துரிதமாகச் செயல்பட்டு,

பேருந்திலிருந்த பயணிகளுக்கும், அப்பகுதியில் உள்ள பொது மக்களுக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படாமல் துரித நடவடிக்கை மேற்கொண்டார்கள். மேலும் இந்த பேருந்து இந்த ஆண்டின் ஜூன் மாதம்தான் டீசல் வகை எரிபொருளிலிருந்து CNG மாற்றம் பெற்றது” என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.