அரசு நில ஏலத்தில் மோசடியா… வருவாய் இழப்பு?! – மதுரை மாவட்டத்தில் குற்றச்சாட்டும் பின்னணியும்!

“பொதுப்பணித்துறைக்கு சொந்தமான நிலத்தை ஏலம் விட்டதில் முறைகேடு செய்து அரசுக்கு இழப்பை ஏற்படுத்திய அதிகாரிகள், நிலக்கொள்ளையர்கள் மீது நடவடிக்கை எடு…” என்று ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்கள் வாடிப்பட்டி வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

இது குறித்து மதுரை கலெக்டரிடம் புகார் அளிக்க வந்த மதுரை அவனியாபுரத்தை சேர்ந்த பெருமாள்பாபுவிடம் பேசினோம், “வாடிப்பட்டி வட்டம் கட்டகுளம் கிராமத்தில் 110.1 ஏ, 361 ஆகிய சர்வே எண்களில் நூற்றுக்கணக்கான தென்னைமரங்களுடன் பொதுப்பணித் துறையின் நீர்வளத்துறைக்கு சொந்தமான தோட்டம் உள்ளது. இதை பராமரிக்க ஏலம் விடுவார்கள். அப்படி, கடந்த 2019-ஆம் ஆண்டு நடந்த ஏலத்தில் 183 தென்னைகளை ரூ 1,36,500 ரூபாய்க்கும், மற்றொரு 50 தென்னைகளை ரூ 6,090-க்கும் ஏலம் எடுத்தேன். ஆனால், ஏலம் எடுத்த நாள் முதல் என்னால் தோட்டத்துக்குள் நுழைய முடியவில்லை.

மோசடிப்புஜார்

காரணம், ஏற்கனவே ஏலம் எடுத்திருந்தவர்கள் தாக்கல் செய்த வழக்கால், நான் உள்ளே செல்லக்கூடாது என்று தடுத்தார்கள். இரண்டு தோட்டங்களையும் மீட்டு ஒப்படைக்காமல், எதிர்த்து வழக்கு போட்டவர்களை தோட்டத்தை அனுபவித்துக்கொள்ள அப்போதிருந்த ஏ.இ-க்கள் செல்லையா, அவருக்குப்பின் மாயகிருஷ்ணனும், எஸ்.டி.ஓ கபீப்பாயும் அனுமதித்தார்கள். இதுகுறித்து ஆக்கிரமித்தவர்களிடம் கேட்டதற்கு ‘அதிகாரிகள் எங்களை அனுமதித்துள்ளார்கள்’ என்று என்னை மிரட்டினார்கள். பின்பு நான் வழக்கு தாக்கல் செய்ததில், ‘தோட்டத்தை ஒரு வருடம் அனுபவிக்க என்னை அனுமதிக்க வேண்டும், அல்லது மறு ஏலம் விடவேண்டும்’ என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

அதன் பிறகு, தோட்டத்தை ஒப்படைக்க ஏற்பாடு செய்கிறேன் என்று ஏ.இ-யாக இருந்த மாயகிருஷ்ணன் ஐம்பதாயிரம் கேட்டார். பேரம் பேசி முப்பதாயிரம் கொடுத்தேன். இந்நிலையில் பணம் வாங்கிய ஏ.இ  இடம் மாறி சென்றுவிட, அந்த இடத்தில் பொறுப்புக்கு வந்த ஏ.இ சுபாஷினி, மீண்டும் தோட்டத்தை ஏலம் விட அறிவிப்பு செய்தார். ‘உங்கள் துறை அதிகாரிகள் செய்த முறைகேட்டால் ஏற்கனவே ஏலம் எடுத்த நான் தோட்டத்தை பயன்படுத்த முடியாமல், போட்ட பணத்தை எடுக்க முடியாமல் உள்ளேன். அதனால், தோட்டத்தை ஓராண்டுக்கு என் அனுபவத்துக்கு கொடுத்துவிட்டு, பிறகு ஏலம் விடுங்கள்” என்றேன்.

ஆனால், நீதிமன்ற உத்தரவுப்படி எனக்கு தகவல் சொல்லாமலேயே ஏலம் விட்டார். இது தெரிந்து மீண்டும் ஏலத்தில் கலந்துகொள்ள நான் 500 ரூபாய் முன்பணம் கட்டியும் என்னை உள்ளே விடவில்லை. அதன் பிறகு மிகக் குறைவான தொகைக்கு, ஏற்கனவே ஆக்கிரமிப்பு செய்த ஆளும்கட்சி பிரமுகர் மூர்த்தி என்பவருக்கு வழங்கியுள்ளார்கள். மொத்தத்தில் உயர் நீதிமன்ற உத்தரவை மதிக்காமல், பொதுப்பணித்துறை அதிகாரிகளை தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் மூர்த்தி என்பவருக்கு சாதகமாக பொதுப்பணித் துறை அதிகாரிகள் நடந்து வருகிறார்கள். அரசுக்கு இழப்பை ஏற்படுத்தி வரும் இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், மதுரை மாவட்ட பொதுப்பணித் துறையில் இன்னும் பல முறைகேடுகள் நடக்கிறது. இவைகளை விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்” என தெரிவித்தவர், முதலமைச்சர் வரைக்கும் புகார் மனுக்களை அனுப்பியுள்ளார்.

பெருமாள் பாபு

உதவிப் பொறியாளர் சுபாஷினியிடம் இப்புகார் குறித்து கேட்டோம், “வாடிப்பட்டியில் பொதுப்பணித் துறைக்கு சொந்தமான ரெண்டரை ஏக்கர் டூ சி பட்டா நிலம் உள்ளது. அதை எங்களால் பராமரிக்க முடியாது என்பதால் விவசாயிகளுக்கு ஏலம் விடுவோம். அந்த அடிப்படையில்தான் எங்களைப் பற்றி புகார் கூறிவரும் பெருமாள் பாபு ஏலம் எடுத்தபோது, அப்பகுதி மக்கள் வெளியூர்காரருக்கு ஏலம் கொடுக்கக் கூடாது என்று பிரச்சனை செய்திருக்கிறார்கள். ஆனாலும், அவரும் அந்த தோட்டத்திலுள்ள தென்னைகளில் தேங்காய் பறித்து வந்திருக்கிறார். ஏற்கனவே அந்த தோட்டத்தை ஏலம் எடுத்தவர்கள் வழக்கு போட்டதால் கடந்த சில ஆண்டுகளாக அங்கு யாரும் செல்லமுடியாமல் பிரச்னை தொடர்ந்தது. இந்த நிலையில் ‘2019-ல் ஏலம் எடுத்த நான் தேங்காய் பறிக்கவே இல்லை’ என்று பெருமாள் பாபு தாக்கல் செய்த வழக்கில், ‘ ஏலம் எடுத்தால் மட்டும் போதாது, அந்த நிலத்தை பாதுகாக்கும் முனைப்பு உங்களிடம் இல்லை. அதனால் அடுத்த ஏலத்தில் கலந்து கொள்ளுங்கள்’ என்று நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த சம்பவம் நடந்த காலகட்டத்தில் 5 ஏ.இ-க்கள் மாறி நான் 2023-ல் பொறுப்புக்கு வந்து ஏலம் அறிவித்தேன். ‘ஏலம் விடக்கூடாது, என் பெயரில்தான் ஆவணம் இருக்கு’ என்று பெருமாள்பாபு வாதிட்டார். நீங்கள் ஏலம் எடுத்த காலம் முடிந்துவிட்டது. வேண்டுமானால் இந்த ஏலத்தில் கலந்துகொள்ளுங்கள் என்றேன். ஆனால், போலீஸ் பாதுகாப்பு போட்டிருந்தும் அவர் கலந்துகொள்ளவில்லை. அந்த ஊர்காரர்களும் ஏலம் எடுக்க முன்வராததால் மூர்த்தி என்பவர் கலந்துகொண்டு ஏலம் எடுத்துள்ளார். அவருக்கும் இவருக்கும் இடையே என்ன பிரச்சனை என்று தெரியவில்லை. துறை ரீதியாக என்ன செய்யவேண்டுமோ அதைத்தான் செய்தேன். மற்றபடி விலையை குறைத்து ஏலம் கொடுத்ததாக சொல்வதும் தவறு. தென்னைகளின் காய்ப்பு குறைந்ததால் கடந்த 3 ஆண்டு காய்ப்பின் சராசரியை கணக்கிட்டுத்தான் ஏலத்தொகையை முடிவு செய்தோம். அன்றிலிருந்து எங்களை மிரட்டிக் கொண்டிருக்கிறார் பெருமாள்பாபு, நான் தவறு செய்திருந்தால் வழக்கு போடட்டும், அதைவிட்டு அவதூறு பரப்பி வருகிறார்” என்றார்.

புகார் மனு

தற்போது மதுரை கலெக்டர், பொதுப்பணித்துறை உயர் அலுவலர்கள், அமைச்சர் வரை புகார் சென்றுள்ளதால் விசாரித்து வருவதாக சொல்லப்படுகிறது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88