தூத்துக்குடி மாவட்டம், செய்துங்கநல்லூரைச் சேர்ந்தவர் விக்டர். இவர் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் ஒரு ஹோட்டலில் வேலை பார்த்து வந்தார். நெல்லை மாவட்டம் பாப்பாக்குடியில் உள்ள இவரின் உறவினரின் வீட்டிற்கு அடிக்கடி சென்று வந்துள்ளார். அப்போது உறவுக்கார சிறுமி ஒருவருடன் காதல் ஏற்பட்டது. இருவரும் தொடர்ந்து செல்போனில் பேசியும், வெளியூர்களுக்குச் சென்றும் வந்துள்ளனர்.
ஒரு கட்டத்தில் இருவரின் காதல் விவகாரம் சிறுமியின் குடும்பத்திற்கு தெரிய வர, ”படிப்பில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும். படிக்கின்ற வயதில் காதல் தேவையில்லை” எனக்கூறி கண்டித்துள்ளனர். இருப்பினும் இருவரும் காதலை தொடர்ந்துள்ளனர். இந்த நிலையில் கடந்த 4 மாதத்திற்கு முன்பு சிறுமியை விக்டர், வெளியூருக்கு அழைத்துச் சென்றுள்ளார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் பாளையங்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
அந்தப் புகாரின் அடிப்படையில் விக்டரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனர். சிறுமியை மீட்ட போலீஸார், அவரின் பெற்றோரிடம் ஒப்படைத்தனர். இந்த நிலையில், சிறையில் இருந்து ஜாமீனில் வெளியே வந்த விக்டர் அச்சிறுமியுடன் மீண்டும் செல்போனில் பேசத் தொடங்கினார். சிறுமியும் அவருடன் பேச ஆரம்பித்துள்ளார். சிறுமியின் பெற்றோர் இருவரையும் மீண்டும் கண்டித்துள்ளனர்.
இந்த நிலையில் நேற்று (2-ம் தேதி) மாலையில் சிறுமியின் பெற்றோர்கள் வீட்டில் இல்லாத நிலையில், அவரின் வீட்டிற்குச் சென்ற விக்டர் அங்கு சிறுமியுடன் பேசிக் கொண்டிருந்தார். சிறுமியின் பெற்றோர்கள் வீட்டிற்குள் வர விக்டருக்கும் சிறுமியின் பெற்றோருக்கும் மோதல் ஏற்பட்டது. அதில் சிறுமியின் தந்தையும், சகோதரர்களும் விக்டரை அரிவாளால் சரமாரியாக வெட்டினர். இதில் பலத்த காயமடைந்த விக்டர் உயிரிழந்தார். இது குறித்து பாப்பாக்குடி காவல் நிலைய போலீஸார் வழக்குப்பதிவு செய்து சிறுமியின் தந்தை மற்றும் 2 சகோதர்களை கைது செய்து மேற்கொண்டு விசாரித்து வருகின்றனர்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88