– இந்தக் கேள்வி இப்போது எழுப்பப்பட்டவை அல்ல! 2015-ம் ஆண்டில் மறைந்த தி.மு.க தலைவரான கருணாநிதி, அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு எதிராக கேட்ட கேள்வி! அந்த அளவுக்கு சாதாரண அறிப்புகளைக்கூட விவாதமே இல்லாமல் சட்டமன்றத்தின் 110வது விதியின்படியே அறிவித்துக்கொண்டிருந்தார் ஜெயலலிதா. அதை அப்போது கருணாநிதி, ஸ்டாலின் தொடங்கி தி.மு.கவின் அத்தனை உறுப்பினர்களும் கடுமையாக எதிர்த்துக்கொண்டிருந்தனர். இந்தநிலையில், ஜெயலலிதாவையே மிஞ்சும் அளவுக்கு தொட்டதுக்கெல்லாம் 110வது விதிப்படியே அனைத்து துறைகளின் அறிவிப்பையும் இப்போதைய முதலமைச்சர் மு.க. ஸ்டாலினே அறிவித்திருக்கிறார். அப்போதைய பேச்செல்லாம் இப்போது எங்கே போச்சு? எனக் கேள்வி கேட்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.

தமிழ்நாடு சட்டப்பேரவை – முதல்வர் ஸ்டாலின்

முதலில் 110வது விதி என்றால் என்ன? எதற்காக அதைப் பயன்படுத்த வேண்டும்? ஆனால், கடந்த ஆட்சியின் முதல்வர்கள் தொட்டு இன்றைய ஆட்சியின் முதல்வர் வரை ஏன் தங்களின் இஷ்டத்துக்கு பயன்படுத்திக்கொண்டிருக்கிறார்கள். விரிவாக அலசுவோம்.

ஜூன் மாத தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் நிறைவடைந்திருக்கிறது. `ஓசூரில் 2000 ஏக்கர் பரப்பளவில் பன்னாட்டு விமான நிலையம் அமைக்கப்படும், 2026 ஜனவரிக்குள் 75,000 அரசுப் பணியிடங்கள் நிரப்பப்படும், நான்காயிரம் கோடியில் 10,000 கி.மீ ஊராட்சி சாலைகள் மேம்படுத்தப்படும்’ என ஒவ்வொருநாளும் பல்வேறு துறைகளின் ஏராளமான திட்டங்கள் தொடர்பான அறிவிப்புகளை முதலமைச்சர் ஸ்டாலின் சட்டப்பேரவையில் அறிவித்தார். இவற்றை சாதாரணமாக அறிவிக்காமல் அனைத்து அறிவிப்புகளையும் 110வது விதியின் கீழ் வெளியிட்டிருக்கிறார். இப்போதுமட்டுமல்ல ஆட்சி பொறுப்பேற்ற முதல் சட்டப்பேரவைக் கூட்டத்தொடரிலேயே 110வது விதியின்கீழ் மெரினாவில் கருணாநிதிக்கு நினைவிடம், அயோத்திதாசருக்கு மணிமண்டபம் என பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். அவ்வபோது அமைச்சர்களுக்கு இந்த வாய்ப்பை வழங்கியிருந்தாலும்கூட, கடந்த மூன்று ஆண்டுகளாக தொடர்ந்து சாதாரண அறிவிப்புகளையும் அவசர அறிவிப்புகளைப்போல 110வது விதியின்கீழாகவே அறிவித்துவருகிறார் முதலமைச்சர் ஸ்டாலின்.

சட்டப்பேரவை கூட்டம்

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 208(1) பிரிவின்படி இயற்றப்பட்டவைதான் தமிழக சட்டப்பேரவை விதிகள். அதில், பொது முக்கியத்துவம் வாய்ந்த ஒரு பொருளைப் பற்றியோ, பிரச்னைக்கான நடவடிக்கையைப் பற்றியோ அவசரமாக அறிவிப்பு வெளியிட வேண்டுமானால், அதை பேரவை விதிஎண் 110-ன் கீழ் சபாநாயகர் அனுமதியுடன் அறிவிக்கலாம்.

அந்த அறிவிப்பின்மீது எந்த விதமான விவாதமும் நடக்காது. அதாவது 110-ம் கீழ் முதலமைச்சர் ஒரு அறிவிப்பை வெளியிட்டால், அது எந்தவகையிலும் விவாதத்துக்கு வராது. பாராட்டலாமே தவிர எதிர்கட்சியினர் உள்பட யாரும் அதை விவாதம் செய்யமுடியாது. அப்படி அவசரத் திட்டங்களுக்காக மட்டுமே அரிதாகப் பயன்படுத்தவேண்டிய 110 விதியை, இன்று தங்கள் இஷ்டம்போல எப்போதுவேண்டுமானாலும் பயன்படுத்திக்கொண்டிருக்கிறது ஆளும்தரப்பு. இதற்கெல்லாம், `அ’ போட்டவர் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதான்.

ஓ.பன்னீர்செல்வம், ஜெயலலிதா

2011 முதல் 2016 வரை ஜெயலலிதா முதல்வராக இருந்த காலகட்டத்தில்தான் முதல்முறையாக மிக அதிகமுறை 110வது விதி பயன்படுத்தப்பட்டது. சட்டசபையில் எதிர்கட்சிகள் கேள்வி எழுப்பினாலும், வெளிநடப்பு செய்தாலும்கூட எதையும் கண்டுகொள்ளாமல் தன்போக்குக்கு 110 விதியின் கீழ் கூட்டத்தொடரின் ஒவ்வொரு நாளும் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு வந்தார் அப்போதைய முதல்வர் ஜெயலலிதா. அந்தவகையில், 2015 ஆகஸ்ட்-செப்டம்பர் மாத கூட்டத்தொடரின் இறுதிநாளின்போது, “கடந்த ஆண்டு வரைக்கும் அனைத்து அரசு துறை சம்பந்தமாகவும் 150 அறிவிப்புகளை முதலமைச்சர் வெளியிட்டார். இந்த ஆண்டில் 31 அறிவிப்புகளை வெளியிட்டிருக்கிறார். ஆக, கடந்த நான்கு ஆண்டுகளில், 110வது விதியின் கீழ் சுமார் 181 அறிவிப்புகளை வெளியிட்டு, முதலமைச்சர் கின்னஸ் சாதனை படைத்திருக்கிறார்!” என சபாநாயர் தனபாலே புகழாரம் சூட்டினார். இதை அ.தி.மு.க உறுப்பினர்கள் ரசித்தாலும், அனைத்து எதிர்கட்சிகளுமே பொதுவெளியில் கடுமையாக விமர்சித்தன.

குறிப்பாக, அப்போது தி.மு.க தலைவராக இருந்த கருணாநிதி 2015-ம் ஆண்டு வெளியிட்ட ஒரு அறிக்கையில், “சட்டமன்றம் தொடங்கி விட்டது. இனி ஒவ்வொரு நாளும் முதலமைச்சர் ஜெயலலிதா, பேரவை விதி 110ன் கீழ் அறிக்கைகளைப் படிக்கத் தொடங்கி விடுவார். தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை விதி 110 என்ன கூறுகிறது என்றால், ‘பொது முக்கியத்துவம் வாய்ந்த ஒரு பொருளைப் பற்றி ஓர் அமைச்சர் அறிக்கை ஒன்றை அளிக்கலாம்’ என்று தான் உள்ளது. ஆனால், அந்த விதியில் உள்ள ‘ஓர் அமைச்சர்’ என்பதை மாற்றி ‘முதலமைச்சர் மட்டுமே’ என்று திரித்துப் பொருள்கொண்டு, கடந்த நான்காண்டு காலத்தில் எந்தத் துறை அமைச்சருக்கும் வாய்ப்பே கொடுக்காமல், முதலமைச்சர் ஒருவர் மட்டுமே தமிழகச் சட்டமன்றத்தில் 110வது விதியின் கீழ் அத்தனை அறிக்கைகளையும் படித்துக் கொண்டிருக்கிறார். கடந்த நான்காண்டு காலத்தில் ஜெயலலிதா 110வது விதியின் கீழ் படித்த அறிக்கைகளிலே கூறப்பட்ட திட்டங்கள் என்னவாயின? நிறைவேறி விட்டனவா? அல்லது ஏட்டளவிலேயே நின்று போய் விட்டனவா? 110வது விதியின் கீழ் முதலமைச்சர் சொன்னதோ, கடல் அளவு; செய்ததோ, கை அளவுதான். இதுதான் 110வது விதியின் கீழ் படித்த அறிக்கைகளின் கதி. இதையெல்லாம் தமிழ் மக்கள் கேட்டுக் கொள்ள வேண்டும், அதுதான் அவர்களின் தலை விதி!” எனக் காட்டமாக விமர்சித்தார். மேலும், மற்றொரு அறிக்கையில், “110 விதியை தினமும் பயன்படுத்தினால் அது 420 ஆகிவிடும்” என்றும் தன் பாணியிலே எழுதினார்.

கருணாநிதி – ஜெயலலிதா

அதேபோல, கடந்த 2016 மே மாதத்தில் பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ், “எங்கும் இல்லாத கலாசாரமாக சட்டமன்றத்தில் 110-வது விதியின் கீழ் 185 அறிவிப்புகளை வெளியிட்டார் முதலமைச்சர் ஜெயலலிதா. அவற்றின் கீழ் 700 திட்டங்களை அறிவித்தார். இவை அத்தனையையும் நிறைவேற்ற ரூ.1.49 லட்சம் கோடி தேவை. ஒதுக்கப்பட்டதோ வெறும் ரூ.7,500 கோடி. இது எத்தனை பெரிய ஏமாற்று வேலை!” எனக் கேள்வி எழுப்பினார்.

தொடர்ந்து 2016 சட்டமன்றத் தேர்தல் பிரசாரத்தில் மு.க.ஸ்டாலின், “110 விதியின் கீழ் ஏராளமான வாக்குறுதிகள் அளித்தார் ஜெயலலிதா. அதில் எதை எதை நிறைவேற்றியிருக்கிறீர்கள் என்று ஆதாரத்தோடு சொல்ல முடியுமா. எதை எல்லாம் நிறைவேற்றவில்லை என என்னிடம் ஆதாரம் இருக்கிறது. ஒரே மேடையில விவாதிக்க நான் ரெடி! நீங்க ரெடியா மேடம்? போயஸ் தோட்டத்துல இருந்து புறப்படும்போதே என்ன புளுகு மூட்டை அவிழ்த்து விடலாம் என்றே கிளம்புறார்” என காட்டமாக கேள்விஎழுப்பினார்.

சட்டப்பேரவை | ஸ்டாலின் | துரைமுருகன்

தொடர்ந்து 2016 ஆகஸ்ட் மாத சட்டப்பேரவை கூட்டத்தொடரில், தி.மு.க மூத்த தலைவர் துரைமுருகன் நேரடியாகவே முதலமைச்சர் ஜெயலலிதாவிடம் இதுகுறித்து காட்டமாகக் கேள்வி எழுப்ப, அதற்குப் பதிலளித்த ஜெயலலிதா, “110-வது விதியின் கீழ் ஒரு அறிக்கை வாசிக்கப்பட்டால் அதைப்பற்றி எந்த விமர்சனமும் செய்யக்கூடாது. எந்தக் கேள்வியும் கேட்கக்கூடாது என்று விதிகளிலே உள்ளது என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் அவர் எழுப்புகின்ற கேள்வி ஏற்கெனவே இந்த அவையில் பலமுறை எதிர்க்கட்சியினரால் எழுப்பப்பட்ட கேள்வி தான். இருந்தாலும் பதில் சொல்கிறேன், நாங்கள் 24 மணி நேரமும் மக்களைப் பற்றியே சிந்தித்துக் கொண்டிருக்கிறோம். அப்படி புதிய திட்டங்கள் அந்தந்த துறைசார்ந்த அமைச்சர்களால் மானியக்கோரிக்கையில் வைக்கப்பட்ட பிறகும், யோசிக்க யோசிக்க அடடா இந்தத் திட்டத்தை விட்டுவிட்டோமே, இதையும் நாம் செய்யலாமே என்று தோன்றும். அப்படி யோசனை வரும்போது புதிய அறிவிப்புகளை இப்படி வெளியிடுகிறேன். அவ்வளவுதான். கடந்த ஐந்து ஆண்டுகளாக எத்தனையோ அறிவிப்புகளை விதி எண் 110ன்கீழ் அறிவித்தேன். அவைகளையெல்லாம் செயல்படுத்த தேவையான நிதி வழங்கப்படும்” என்றார்.

தொடர்ந்து துரைமுருகன் பேச முயற்சிக்க, அதற்கு சபாநாயகர் மறுப்பு தெரிவிக்க, தி.மு.க அதன் கூட்டணிக் கட்சி உறுப்பினர்கள் அவையை விட்டு வெளிநடப்பு செய்தனர். அப்போது பேசிய மு.க.ஸ்டாலின், “அ.தி.மு.க. ஆட்சியில் 110வது விதி மரபுக்கு மாறாக பயன்படுத்தப்படுகிறது. ஏதாவது ஒரு திட்டத்தை அறிவிப்பதற்காக முதலமைச்சர் இதை பயன்படுத்துகிறார். ஏற்கெனவே துறை சார்ந்த திட்டங்களுக்கு நிதி ஒதுக்கிய பிறகு, எந்த விவாதமும் இல்லாமல் புதிய திட்டங்களை அறிவிப்பது முறை தானா?” எனக் கொந்தளித்தார்.

ஜெயலலிதா – எடப்பாடி பழனிசாமி

ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு முதலமைச்சரான எடப்பாடி பழனிசாமியும், இதையே பின்தொடர்ந்தார். 2017 ஜூன் மாத கூட்டத்தொடரில் இதுகுறித்த விவாதம் எழுந்தபோது எதிர்கட்சித் தலைவராக இருந்த மு.க.ஸ்டாலின், `முதலமைச்சர் 110 விதியின் கீழ் அறிவித்த திட்டங்கள் குறித்து, வெள்ளை அறிக்கை வெளியிட தயாரா?’ என அப்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியைப் பார்த்து கேள்வி எழுப்பினார்.

அதேபோல், பா.ம.க நிறுவனர் ராமதாஸ், “ஒவ்வொரு துறையிலும் செயல்படுத்தப்படவுள்ள திட்டங்கள் குறித்து பேரவையில் விவாதித்து ஒப்புதல்பெறுவதற்காகவே மானியக் கோரிக்கைகள் மீது சட்டப்பேரவையில் விவாதங்கள் நடத்தப்படுகின்றன. அதன் அடிப்படையில் துறை சார்பில் செயல்படுத்தப் படவுள்ள திட்டங்கள் குறித்து அதன் அமைச்சர்கள் அறிவிப்பு வெளியிடுவது வழக்கம்; அதுதான் முறை. ஆனால், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவரின் பங்குக்கு 5 துறைகள் சம்பந்தப்பட்ட 21 அறிவிப்புகளை வெளியிட்டிருக்கிறார். இந்த அறிவிப்புகளை சம்பந்தப்பட்ட அமைச்சர்களே கடந்த வாரம் வெளியிட்டிருக்கலாம். ஆனால், அவர்களுக்கு அந்தவாய்ப்பை வழங்காமல் முதல்வரே அனைத்துத் துறைகளில் அறிவிப்புகளையும் வெளியிடுவது அவை மரபுகளுக்கு பெருமை சேர்க்காது.

ராமதாஸ், எடப்பாடி பழனிசாமி

ஜெயலலிதா முதலமைச்சராக இருந்த போது அனைத்து அறிவிப்புகளும் தம்மால் தான்வெளியிடப்பட வேண்டும் என்ற ஆணவத்துடன், அனைத்து அறிவிப்புகளையும் 110 விதியின் கீழ்வெளியிடுவதை வழக்கமாக வைத்திருந்தார். இப்போது முதலமைச்சராக உள்ள எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அனைத்து அமைச்சர்களையும் அடிமையாக நடத்திய ஜெயலலிதா, அவர்கள் வெளியிட வேண்டிய அனைத்து அறிவிப்புகளையும் அவரே வெளியிட்டு வந்தார். ஜெயலலிதா வழியில் ஆட்சி நடத்துவதாகக் கூறிக் கொள்ளும் எடப்பாடி பழனிசாமி அவரது வழியில் அடிமைக் கலாசாரத்தை தொடர்ந்துவருகிறார். பேரவை ஜனநாயகத்தையும், அவை மரபுகளையும் குழி தோண்டி புதைக்கும் வகையிலான முதல்வரின் செயல்பாடு கண்டிக்கத்தக்கது!” என காட்டமாக அறிக்கை வெளியிட்டார்.

அதைத்தொடர்ந்து, 2019 ஜூலை மாத சட்டப்பேரவை கூட்டத்தொடரின்போது எடப்பாடி பழனிசாமி 110வது விதியின் கீழ் திட்டங்களை அறிவித்துக்கொண்டிருக்க, அப்போது குறுக்கிட்ட தி.மு.க எம்.எல்.ஏ ஆஸ்டின், `110வது விதியின்கீழ் பல்வேறு அறிவிப்புகள் வெளியிடுவது குறித்து `பாயிண்ட் ஆப் ஆர்டர்’ கொண்டுவந்தார். அதை ஏற்க மறுத்த சபாநாயகர், `110- வது விதியின் கீழ் முதலமைச்சர் பேசியதற்கு பாராட்டு தெரிவிக்கலாம், நன்றி தெரிவிக்கலாம். ஆனால் கருத்து தெரிவிக்கவோ, விமர்சிக்க கூடாது’ எனக்கூறி ஆஸ்டினின் கருத்தை அவைக்குறிப்பிலிருந்து நீக்கினார்.

அப்போது குறுக்கிட்ட திமுக துரைமுருகன், “பாராட்டும்போது, ஒரு உறுப்பினர் கருத்து சொல்லக்கூடாது என்பதை ஏற்க முடியாது. 110வது விதியின் கீழ் ஒரு பொருள் பற்றி மட்டும்தான் அறிவிக்க வேண்டும். ஆனால் முதலமைச்சர் பல்வேறு அறிவிப்புகளை வெளியிடுகிறார்” என நியாயம் கேட்டார். அப்போது ஸ்டாலினும் எழுந்து, “விதிமுறையை சுட்டிக்காட்டுவதற்காகத்தான் எங்கள் உறுப்பினர் அதை கூறினார். அவருடைய உரிமை மறுக்கப்படக்கூடாது” என உரிமை குறித்து பேசினார்.

ஜெயலலிதா

கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தின்போது முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா, ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் 110-ன் கீழ் அறிவிப்புகளை வெளியிட்டபோது கடுமையாகக் கொந்தளித்து, வெளிநடப்பெல்லாம் செய்த தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் 2021-ல் தான் முதலமைச்சரான பிறகு அவர்கள் செய்த அதே தவற்றையே தொடர்கிறார் என அரசியல் பார்வையாளர்கள் விமர்சிக்கின்றனர்.

குறிப்பாக, ஸ்டாலின் பதவியேற்ற முதல் சட்டப்பேரவை மானியக்கோரிக்கை கூட்டத்தொடரில் 110 விதியின் கீழ் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். அப்போது அ.தி.மு.கவினர் கடுமையாக விமர்சிக்க, அப்போது நிதியமைச்சராக இருந்த பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன், `கடந்த அ.தி.மு.க ஆட்சியில் 110 விதியின் கீழ் வெளியிடப்பட்ட அறிவிப்புகளுக்கு நிதி ஒதுக்கப்படவில்லை. இந்த விதியின்கீழ் செயல்படுத்தப்பட்ட, செயல்படுத்தப்படாத திட்டங்கள் குறித்து சட்டப் பேரவையில் அறிவிக்கிறேன்’ எனக்கூறி அரசு சார்பில் ஒரு அறிக்கைப் புத்தகமே வெளியிட்டார்.

பிடிஆர். பழனிவேல் தியாகராஜன்

அந்த அறிக்கைப் புத்தகத்தில், “2011-12 முதல் 2020-21 வரையிலான 10 ஆண்டுகால அ.தி.மு.க ஆட்சியில் தமிழக சட்டப்பேரவை விதி 110ன் கீழ் ரூ. 3.27 லட்சம் கோடி மதிப்பிலான 1,704 அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. ஆனால், அதில் ரூ. 87,405 கோடி மதிப்பிலான 1,167 அறிவிப்புகள் மட்டுமே செயல்படுத்தப்பட்டிருக்கின்றன. மீதமிருக்கும் ரூ. 2.4 லட்சம் கோடி மதிப்பிலான 537 அறிவிப்புகள் நிலுவையில் இருக்கின்றன. நிலுவையிலுள்ள 537 அறிவிப்புகளில் ரூ. 5,470 கோடி மதிப்பிலான 26 அறிவிப்புகள் செயல்படுத்த இயலாதவை எனக் கைவிடப்பட்டுள்ளன. மேலும், ரூ. 9,741 கோடி மதிப்பிலான 20 அறிவிப்புகளுக்கு அரசாணைகள் எதுவும் பிறப்பிக்கப்படவில்லை. 491 அறிவிப்புகளுக்கு அரசாணையும் அனுமதியும் வழங்கப்பட்டிருக்கின்றன. இவற்றில் ரூ. 76,619 கோடி மதிப்பிலான 143 அறிவிப்புகளுக்கு, அரசாணை, அனுமதி வழங்கப்பட்டு, நிதி விடுவிக்கப்படாததால் பணிகள் தொடங்கப்படாமல் இருக்கின்றன. கடந்த ஆட்சியில் கைவிடப்பட்ட 26 அறிவிப்புகளைத் தவிர, ஏனைய நிலுவையிலுள்ள 511 அறிவிப்புகளுக்கான 2.34 லட்சம் கோடி ரூபாயில், 45,251 கோடி ரூபாய் நிதி மட்டுமே விடுவிக்கப்பட்டிருக்கிறது!” என பகிரங்கமாகப் பட்டியலிட்டார் அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன்.

இந்தநிலையில், ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க ஆட்சிப் பொறுப்பேற்று நான்காம் ஆண்டில் அடியெடுத்து வைத்திருக்கும் நிலையில், நடந்தமுடிந்த ஜூன் மாத சட்டப்பேரவைக் கூட்டத்தொடரின் மானியக் கோரிக்கையின்போது, சம்மந்தப்பட்ட அமைச்சர்கள் தங்களின் துறைசார்ந்த மானியக் கோரிக்கையை முன்வைத்து பேசி, விவாதங்களும் முடிவடைந்த பிறகு, மீண்டும் முதலமைச்சர் ஸ்டாலின் அதே துறைகளில் சாதாரணமான, வழக்கமான திட்டங்களை 110 விதியின் கீழ் அறிவித்திருக்கிறார்.

சட்டப்பேரவை

இப்போதுமட்டுமல்லாமல், கடந்த மூன்று ஆண்டுகளின் சட்டப்பேரவை கூட்டத்தொடரிலும் இதே பாணியையே கடைபிடித்து வருகிறார். கடந்த அ.தி.மு.க ஆட்சிக் காலத்தில் 110 விதியின் கீழ் தொடர்ந்து முக்கியத்துவமில்லாத அறிவிப்புகளை வெளியிட்ட ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமியை அப்போது எதிர்க்கட்சித் தலைவராக இருந்து கடுமையாக விமர்சித்த மு.க. ஸ்டாலின் இப்போது முதல்வரானபோது தான் எதிர்த்த ஒன்றையே தானும் செய்துவருகிறார் என்பது எவ்வளவு பெரிய முரண்? கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் 110 விதியின் கீழ் அறிவிக்கப்பட்ட திட்டங்களின் மதிப்பும் அதுக்கு ஒதுக்கப்பட்ட நிதி குறித்தும் திமுக அமைச்சர் அறிக்கை விட்டது போல், நடப்பு திமுக ஆட்சியில் 110 விதியின் கீழ் அறிவிக்கப்பட்ட திட்டங்களின் மதிப்பும் அதற்கு ஒதுக்கப்பட்ட நிதியையும் அரசு வெளியிடுமா? என கேட்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.!

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.