Ayodhya: அயோத்தி ராமர் கோயில் கட்டுமானம் குறித்த ராகுலின் குற்றச்சாட்டு… யோகி ஆதித்யநாத் விளக்கம்!

நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவராக தன் முதல் உரையில், பிரதமர் மோடி உள்ளிட்ட பா.ஜ.க தலைவர்களை கடுமையாக விமர்சித்த ராகுல் காந்தி, “அயோத்தியில் ராமர் கோயில் கட்டுமானத்துக்காக அப்புறப்படுத்தப்பட்ட மக்களுக்கு உரிய இழப்பீடு வழங்கப்படவில்ல” எனக் குற்றம்சாட்டியிருந்தார். இந்தக் குற்றச்சாட்டை மறுத்த உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் அரசு, அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறது.

ராகுல் காந்தி

அதில், “காங்கிரஸ் ஒரு பொய் வலை. அயோத்தி மக்களுக்கு இழப்பீடாக ரூ.1,733 கோடி வழங்கப்பட்டுள்ளது என்பதுதான் உண்மை.

ராமர் பாதை, பக்தி பாதை, ஜென்மபூமி பாதை, விமான நிலையம் என எதுவானாலும், அதை நிறுவுவதற்காக, நிலம், கடைகள், வீடுகள் ஆகியவை கைப்பற்றப்பட்டால், அதற்குரியவர்களுக்கு இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது. இடம் உள்ளவர்களுக்கு கடைகள் கட்டியும், இடம் இல்லாதவர்களுக்கு பல அடுக்கு வளாகங்கள் கட்டியும் வழங்கப்பட்டிருக்கிறது.

மோடி, யோகி ஆதித்யநாத்

அயோத்தி விமான நிலைய கட்டுமானத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.952.39 கோடி, அயோத்தி பைபாஸ் (ரிங் ரோடு)க்கு ரூ.295 கோடி, ராம ஜென்மபூமி பாதைக்கு ரூ.14.12 கோடி, பக்தி பாதைக்கு ரூ.23.66 கோடி, ரம்பத்துக்கு ரூ.114.69 கோடி என இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது. பஞ்சகோசி பரிக்ரமா மார்க்குக்கு ரூ.29 கோடி, சவுதா கோசி பரிக்ரமா மார்க்குக்கு ரூ.119.20 கோடி, ருடௌலி மற்றும் ரோஜாகான் ரயில் நிலையங்களுக்கு இடையே ரயில்வே கட்டுமானத்துக்கு ரூ.35.03 லட்சம், தேசிய நெடுஞ்சாலை கட்டுமானத்துக்கு ரூ.163.90 கோடி என அயோத்தியில் இதுவரை மொத்தம் 21,548 நபர்களுக்கு இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது.” எனக் குறிப்பிட்டிருக்கிறது.